நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருப்பேன் Jeffersonville, Indiana, USA 60-0911M 1...இக்காலை வெளியே, (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி)... இரவு உறக்கம். நாமெல்லாரும் உறங்கி சற்று ஓய்வாக உணர்கிறோம் என்று நான் நம்புகிறேன். பில்லிபாலுக்கு இன்று காலை இருபத்தைந்து வயதானதைக் குறித்து நான் அறையில் நின்று கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தேன். இதே பிரசங்க பீடத்தில் நான் நின்று கொண்டிருந்தது என் நினைவுக்கு வருகிறது. இங்கிருந்து என் பக்கத்து வீட்டுக்காரர் பிராங்கி வீபரும் நானும் ஒன்றாக பள்ளிக்கு சென்றோம். எனக்கு இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயது என்று நினைக்கிறேன். அப்பொழுது அவருக்கு ஏற்கனவே இருபத்தைந்து வயதாகிவிட்டது. அவருக்கு இருபத்தைந்து வயதான போது நான், ''ஓ, என்னே பிராங்கிக்கு மிகவும் வயதாகிவிட்டது. அவர் மரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. எனக்கு இருபத்தைந்து வயதாகும் போது நான் என்னசெய்வேன்?“ என்று எண்ணினேன். இப்பொழுது என் மகன் இருபத்தைந்து வயதை அடைந்துவிட்டான். அது எதைக் காண்பிக்கிறதென்றால், நேரம் விரைந்து கொண்டிருக்கிறதென்றும் அது யாருக்கும் காத்திருப்பதில்லை என்பதையே. பகற்காலம் இருக்குமட்டும் நாம் கிரியை செய்யவேண்டும். ஏனெனில் நாம் கிரியை செய்ய கூடாத இராக்காலம் வருகிறது. லாங்பெல்லோ என்பவர் எழுதிய வாழ்க்கையின் பாடல் என்னும் கவிதையில், நாம் பிரிந்து செல்லும் போது, காலம் என்னும் மணற்பரப்பின் மேல் நம்முடைய அடிச்சுவடுகளை விட்டுச் செல்கிறோம் என்று எழுதியுள்ளதை நான் எப்பொழுதும் விரும்புவதுண்டு. நம்மால் இயன்றவரை நாம் ஒவ்வொருவருமே அவைகளை விட்டுச் செல்லவேண்டும். நாம் ஒரு நாளையும் வீணாக்கக் கூடாது. ஒவ்வொரு நாளையும் அவருடைய மகிமைக்கென்று சிறந்ததாக எண்ண வேண்டும். 2இரண்டு இரவுகளுக்கு முன்பு இல்லை, இரண்டு வாரங்களுக்கு முன்பு கர்த்தர் எனக்கு தரிசனங்களை அருளினார். அதைக் குறித்த நிச்சயம் இங்குள்ள நம்மனைவருக்கும் உண்டு. நான் கென்டக்கியில் இருந்த போது, எனக்கு ஒரு வினோதமான தரிசனம் கிடைத்தது. என்னுடன் இருந்த குழுவினரிடம், “ஏதோ ஒன்று நிச்சயம் நடக்கவிருக்கிறது'' என்று கூறினேன். விடியற்காலை மூன்று மணிக்கு அறையில் எனக்கு முன்னால் கறுப்பு நிறமுள்ள கொடூரமான ஒரு மனிதன் நிற்பதைக் கண்டேன். நமக்கு அருமையான கறுப்பு நிற சகோதரன் அல்லது சகோதரியை போல் அவன் இல்லை. காண்பதற்கு அவன் வித்தியாசமானவனாயிருந்தான். அவனுடைய சரீரம் சுருக்கம் விழுந்த இரும்பைப் போன்ற தசைகளைக் கொண்டதாயிருந்தது. என்னைத் தாக்குவதற்காக அவன் இரு கை மூடின கையுடன் என்னை நோக்கி வந்தான். என்னைப் பாதுகாத்துக் கொள்ள என்னிடம் ஒரு சிறு 'பிளேட்' (Blade) மாத்திரமே இருந்தது. அதனால் ஒரு உபயோகமுமில்லை. என்னை பாதுகாத்துக் கொள்ள அது போதாது. ஆனால் எப்படியோ தேவன் அங்கு வந்து, அந்த கொடூரனிடமிருந்து நான் தப்பித்துக் கொள்ள உதவினார். அவனுடைய சரீரம் சுருக்கம் விழுந்த இரும்பாக இருந்தது. அவன் தன் கரங்களை உயர்த்தினபோது அவனுடைய சருமத்திலிருந்த பெரிய சுருக்கங்களை என்னால் காண முடிந்தது - இரும்பு முன்னும் பின்னும் அசைவது போல். மிகுந்த அழுத்தம் கொடுத்து சுடப்படும் துப்பாக்கி குண்டு கூட அந்த கொடூரமான உடலைத் துளைக்காதென்று நினைக்கிறேன். அது ஏதோ ஒரு மிருகம் அல்லது ஆமையின் மேலோட்டைப் போல் இருந்தது. அவன் என்னைப் பின் தொடர்ந்து வந்தான். அது என்னவென்றும் அதன் அர்த்தம் என்னவென்றும் நான் நன்றாக புரிந்து கொண்டேன். 3மறுபடியுமாக கடந்த செவ்வாயன்று விடியற்காலை சுமார் மூன்று மணிக்கு வேறொன்று நடந்தது. நான் வீட்டில் இருந்தேன். அறையில் எனக்கு முன்னால் தெய்வீகமான ஒருவர் நின்றார். அவர் பேசின வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை. அவர் குறித்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னது என் காதில் சரியாக விழவில்லை. ஆனால் அவர் தெய்வீகமான ஒருவர். அவர், 'இன்னும் ஏழு நாட்களில் நீ மோசே நின்றது போல் நிற்பாய்' என்றோ அல்லது, “மோசே இருந்தது போல் இருப்பாய்” என்றோ மோசேயைக் குறித்த ஏதோ ஒன்றைக் கூறினார். அது நடந்து இன்றுடன் ஆறு நாட்களாகின்றன. இன்னும் ஒரு நாள் உள்ளது. அதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அது என்னவாய் இருப்பினும் அவர் அதை நிறைவேற்றுவார் என்று நான் அறிந்திருக்கிறேன். நீ நிற்பாய் அல்லது 'நீ நிற்கவேண்டும்'' அல்லது 'அவனைப் போல்' இப்படியாக அது மோசேயைக் குறித்த ஒன்றாக இருந்தது. அதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நான் இந்த தெய்வீகமானவரைக் கண்டேன் என்று என் குடும்பத்தினருக்கும், எனக்கு அன்பார்ந்த சிலருக்கும் கூறினேன். அவர் தெய்வீகமானவராயிருந்தும் ஒரு மனிதனைப் போல் பேசினார். நேற்று மாலை நான் உங்களுக்கு அளித்த செய்தியில், கர்த்தர் மோசேயைப் பொருளாகத் தெரிந்து கொள்ளும்படி செய்தார் என்பதை நான் கவனித்தேன். இன்று காலை அளிக்கவிருக்கும் செய்தியும் மோசேயையும் அவனுக்குப் பின் வந்தவனைக் குறித்துமே. இன்று காலை நான் அணுகவிருக்கும் வேதபாகம் மோசேயையும் யோசுவாவையும் குறித்ததாகும். இந்த வேதபாகம் அதாவது யோசுவாவின் புத்தகம் முதலாம் அதிகாரம் எப்பொழுதும் தலைசிறந்த வேதபாகமாக இருந்து வந்துள்ளது. என் வாழ்க்கயிைல் இதுவரை இதன் பேரில் நான் பிரசங்கித்ததில்லை. இன்று காலை நான் முயற்சி செய்யப் போகிறேன். 4ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் அறையிலிருந்த வேதாகமம் இறங்கி வந்து நான் இருந்த இடத்திற்கு முன்னால் நின்றதைக் கண்டேன். ஒரு கை மேலிருந்து கீழிறங்கி வந்து இந்த வேதாகமத்தின் பக்கங்களைப் புரட்டி, யோசுவா முதலாம் அதிகாரம் ஒன்பதாம் வசனம் வரையில் மெதுவாக அசைந்து பிறகு நின்றது. இதைக் குறித்து நான் பேசுவது தேவனுடைய சித்தம் என்று உணரும் அந்த நேரம் வருவதற்காக நான் காத்திருந்தேன். மாலை ஆராதனைகளை மறந்துவிட வேண்டாம். உங்கள் கடமையை நிறைவேற்ற செல்லவேண்டிய இடம் எதுவுமில்லையென்றால் இங்கு வாருங்கள். ஆனால் உங்களைத் தேவைபடும் சபைகள் இருக்குமானால், நீங்கள் அங்கு செல்லுங்கள் என்று நாங்கள் நிச்சயம் பரிந்துரை செய்வோம். இக்காலையில் செய்தி முடிந்தவுடனே நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகின்றோம். அதைத் தொடர்ந்து ஞானஸ்நானம் உண்டென்று நினைக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால்,இன்றிரவு, “சபையின் ஐந்து பிழையற்ற வேதபூர்வமான அடையாளங்கள்” என்பதைக் குறித்தும், புதிய ஏற்பாட்டு சபையுடனும் இந்த சபையுடனும் நமக்குள்ள தொடர்பைக் குறித்தும் பேசுவேன். பாட்டு ஆராதனை ஏழரை மணிக்கு ஆரம்பிக்கும். எட்டு மணியளவில் நான் பிரசங்க பீடத்தில் நிற்க முயற்சிப்பேன். கர்த்தருக்குச் சித்தமானால் நாம் ஒன்பதரை மணிக்கு முடித்துவிடலாம். 5நான் நம்புகிறது என்னவெனில் இன்று நான் கூறும் ஒரு வார்த்தையும் கூட... நான் அந்தக் கட்டளைக்கு வரும் நேரத்தில் ஒருவராகிலும் அதைக் காணத் தவறமாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் எல்லாவற்றையும் இப்பொழுது தள்ளி வைத்துவிட்டு. நாம் பரிசுத்த ஆவிக்காக காத்திருக்கும் இந்நேரத்தில், சிந்தனை செய்வது மிகவும்முக்கியமானது. இந்த அற்புதமான, கிருபையான வார்த்தையை அணுகு முன் என் நல்ல நண்பரும் உடன் ஊழியருமான டாக்டர் லீ வேயில் எழுந்து நின்று நாம் வார்த்தையை திறக்கும் இவ்வேளையில் நம்மை ஜெபத்தில் நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். சகோ. வேயில் (சகோ.வேயில் ஜெபிக்கிறார். ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). தேவனிடத்தில் ஏறெடுத்த ஊக்கமான ஜெபத்திற்காக, சகோ. வேயில் உங்களுக்கு நன்றி. 6இப்பொழுது நாம் வேதாகமத்தைத் திருப்புவோம் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் அநேகர் சுவற்றைச் சுற்றிலும் மண்டபத்திலும் நின்று கொண்டிருப்பதை நான் காணும்போது நாம் ஒரு புதிய நாளின் விடிவையே காண்கிறோம் என்று நம்புகிறேன். இக்காலை வேளையில் வேதபாகத்தைப் படிப்பதெற்கென நாம் யோசுவாவின் புத்தகம் முதலாம் அதிகாரத்திற்கு திருப்புவோம். யோசுவாவின் புத்தகம் முதலாம் அதிகாரத்தில் முதல் ஒன்பது வசனங்களை நாம் படிப்போம். அதற்காக நாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில்... இந்த செய்தியானது ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இது உலகின் பல்வெறு பாகங்களுக்கு அனுப்பப்படும். கர்த்தர் எனக்கு தயை கிடைக்கப் பண்ணின உலகிலுள்ள மக்களுக்கு உங்கள் கண்களில் எனக்கு தயை கிடைத்துள்ளது - இன்று காலை நான் கூற விரும்புவது யாதெனில் வருங்காலத்தில் உங்கள் சபைக்கு வந்து உங்களைச் சந்திப்பேனென நம்புகிறென். தேவனாகிய கர்த்தர் என்ன செய்துள்ளார் என்பதை நீீங்கள் முன் கூட்டியே அறிந்து கொள்ள வெண்டுமென்றும், “சத்தியத்தை அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு கூறினது போல, நீங்களும் இந்த சத்தியத்தை அறிந்திருக்க வெண்டுமென்றும் விரும்புகிறேன். 7யோசுவா முதலாம் அதிகாரத்திலிருந்து வாசிக்கிறேன்: கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்த பின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். வனாந்திரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதி மட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம் வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின் படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடது புறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்வாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு: திகையாதே, கலங்காதே. நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1:1-9 8தம் வசனத்திலே, அந்த வசனத்தின் நடுவிலே, ''நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்“ என்று எழுதப்பட்டுள்ளது. என்னுடைய பொருள் இதுவே - அதை பொருள் என்று நான் அழைக்கலாமென்றால். நான் சிறிது நேரம் இதில் தரித்திருந்து, 'நான் மோசேயோடே இருந்தது போல், உன்னோடும் இருப்பேன்' என்பதன் பேரில் உங்கள் கவனத்தைக்கோர விரும்புகிறேன். நேற்று மாலை நாம் இஸ்ரவேல் புத்திரருடன் எகிப்திலிருந்து தொடங்கி அவர்களை காதேஸில் கொண்டு சேர்க்கும் வரைக்கும் பிரயாணம் செய்தோம். ஓ, எவ்வளவு பெரிய பாடம்! மாம்சப் பிரகாரமான சபையை ஆவிக்குரிய சபைக்கு நாம் உதாரணப்படுத்தினது எவ்வளவு பெரிய காரியம்! தேவன் இஸ்ரவேலருடன் மாம்சப்பிரகாரமாக ஈடுபட்டார். இந்த நாட்களில் அவர் தமது நாமத்திற்கென்று புறஜாதியிலிருந்து அழைத்துக் கொண்டிருக்கும் சபையுடன் அவர் ஆவிக்குரிய பிரசாரமாக ஈடுபடுகிறார் - இஸ்ரவேலருடன் அவர் மாம்சப் பிரகாரமாக ஈடுபட்டது போல. இவை ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ளன. தேவன் அவர்களிடம் செய்த அனைத்தும் தேவன் அவர்களுக்காக செய்த அனைத்தும். நமக்கு ஒரு திருஷ்டாந்தமாக அமைந்துள்ளது. இதுவரைக்கும் வார்த்தையானது அதே விதமாக நிறைவேறி வந்துள்ளதை நாம் காணலாம். மாம்சப்பிரகாரமான சபையானது ஓரிருமுறை வெற்றி கண்ட போது அவர்கள் களிகூர்ந்து, சத்தமிட்டு நடன மாடி, தேவனை துதித்தனர். சபையும் அவ்விதமே செய்து, வேறொன்று திறக்கப்படுவதற்கு நாற்பது ஆண்டுகளாகக் காத்திருந்தது. 9நாம் கர்த்தருடைய மகத்தான இந்த ஊழியக்காரனாகிய மோசேயைக் குறித்து சிந்திக்கும்போது அவனை எப்படி அவன் பிறப்பிலேயே, அவன் பிறந்த இடத்திலேயே தேவன் தம்முடைய பணிக்கென்று தெரிந்து கொண்டார் என்று காண்கிறோம். அவனுடைய ஜீவியமானது வாழ்வதற்கு மிகவும் கடினமான ஒன்றாகவே அமைந்திருந்தது. ஆனால் தேவ ஆவியானவர் அவனை வேறு வழியில் நடத்தினார். அவன் எடுத்த தீர்மானங்கள் மூடத்தனமாக தென்படக் கூடும். உலகத்தை ஆளவேண்டிய வாரிசாக அவனுடைய ஒரு கால் சிங்காசனத்தின் மேலிருக்க, அவன் மற்ற பாகத்தை ஏற்றுக் கொண்டு, புறக்கணிக்கப்பட்டு அலைந்து திரிபவனானான். அது மூளைக் கோளாறின் காரணமாக புரிந்த மூடத்தனமான செயல் என்பது போல் காணப்படலாம். ஆனால் நாம் ஒரு மகத்தான பாடத்தை இங்கு காண்கிறோம். அதாவது, தேவ ஆவியைப் பின்பற்றும் ஒரு மனிதன் இந்த உலகத்திற்குப் பைத்தியமாகவே இருக்கிறான். ஏனெனில் அவர்கள் வேறொரு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாய் வேறு வழியில் ஆவியினால் நடத்தப்படுகின்றனர். நானும் நீங்கள் அனைவரும் என்னவானாலும். ஆவியானவரின் நடத்துதலைப் பின்பற்றி, தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் கவனமாயிருந்து அது நிறைவேறக் காத்திருக்க தேவன் அருள் புரிவாராக! 10மோசே அதைத்தான் செய்தான். மோசே வாசித்த அதே வேதத்தை தான் பார்வோனும் வாசித்தான். ஆனால் பார்வோன் அதை வேறு விதத்தில் நோக்கினான். பார்வோன் கண்ட அதே ஜனங்களை மோசேயும் கண்டான். பார்வோன் அவர்களை அடிமைகளாகவும் மண் பிசைபவர்களாகவும் கண்டான். ஆனால் மோசேயின் பார்வைக்கு அவர்கள் அழைக்கப்பட்டோராயும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகவும் தென்பட்டனர். அந்த விதமாகத்தான் நானும் ஜீவனுள்ள தேவனுடைய சபையைக் காண விரும்புகிறேன் - மூடபக்தி வைராக்கியம் கொண்ட கூட்டத்தினராகவோ அல்லது புறம்பாக்கப்பட்டோராகவோ அல்ல. ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டோராக, மோசே செய்தது போல, நானும் இந்த மகத்தான சபைக்கும் அதன் குறிக்கோள்களுக்கும் என் ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன். மோசே அழைக்கப்பட்டதாக நாம் காண்கிறோம். அவன் கட்டளையைப் பெற்ற பிறகு, தனக்கு சிறந்ததாக தோன்றின வழியில் அவன் அதை செய்ய முயற்சித்த காரணமாக தன் கட்டளையில் தோல்வியடைந்தான். எனவே நாம் சிறந்ததாக நினைப்பதையோ, மனிதன் சிறந்ததாக நினைப்பதையோ நாம் எடுத்துக் கொள்ளாமல், தேவன் சிறந்தது என்று சொன்ன வழியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அது மறுபடியும் நமக்குப் போதிக்கிறது. எனவே கர்த்தருடைய வார்த்தையைப் பின்பற்றுவதே எப்பொழுதும் சிறந்ததாகும். தேவன் உரைத்த வழியை ஏற்றுக் கொள்ளுங்கள். 11மோசே கண்ட தோல்வியின் காரணமாக, அவன் பார்வோனின் முகத்திற்கு விலகி, வனாந்தரத்திற்குள் ஓடினதாக நாம் காண்கிறோம். அவன் அங்கே எத்திரோவின் மகள் சிப்போராளை மணந்து கொண்டான். அவள் அவனுக்கு கெர்சோம் என்னும் குமாரனைப் பெற்றாள். அவன் அங்கே அமைதியோடும் சமாதானத்தோடும் குடியேறி ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டான். ஆனால் ஒருநாள் தேவன் தம் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டார். அப்பொழுது தேவன் அந்த மக்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். அது மட்டுமல்ல, அவர் அழைத்து, தெரிந்து கொண்ட தாசன் ஒருவன் இருப்பதையும் அவனடன் அவர் உடன்படிக்கை செய்து கொண்டிருந்ததையும் நினைவு கூர்ந்தார். தேவன் தம்முடைய உடன்படிக்கையையோ, விருப்பங்களையோ அல்லது வேறொன்றையோ ஒரு போதும் மாற்றுபவரல்ல. அவர் எப்பொழுதுமே தம்முடைய வாக்குத்தத்தங்களைக் காத்துக் கொள்பவராய் இருக்கிறார். தேவன் தனக்களித்த கட்டளையில் மோசே தவறி, தவறு ஒன்றைச் செய்த போதிலும், தேவன் தமது உடன்படிக்கையைக் காத்துக் கொண்டார். தேவன் ஒரு மனிதனை ஒன்றைச் செய்ய அழைக்கும் போது அவர் அதை செய்ய வேண்டும், செய்தேயாக வேண்டும். 12சில நாட்களுக்கு முன்பு ஒருவர். ''நாங்கள் எங்கள் ஊழியத்திற்கென்று இப்பொழுது வரங்களை நாடலாமா? என்று என்னை வினவினார். அவர்கள் அப்பொழுது தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட சில மெதோடிஸ்டு சகோதரர். நான் அவர்களிடம், ''வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள். நீங்கள் அப்படி செய்தால், தேவன் உங்களை உபேயாகிக்க முடியாது. செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவெனில். நீங்கள் கிறிஸ்தவராக சென்று கொண்டிருங்கள். தேவன் உங்களை அழைத்திருப்பாரானால், அவர் உங்களுக்குரிய இடத்தில் உங்களைப் பொருத்துவார்'' என்றேன். வழக்கமாக, அவரைத் தேடி அவரிடமிருந்து காரியங்களைப் பெற முயல்வோர், தேவன் அவர்களுக்கு ஏதாவதொன்றை அளிப்பாரானால் அவர்கள் ஏறக்குறைய திணிக்கப்பட்டு பெரியதாக காணப்படுகின்ற சட்டையை போல் இருப்பார்கள். ஆனால் வழக்கமாக, தேவன் அழைக்கும் ஒரு மனிதன் அவரிடமிருந்து விலகி ஓட முயற்சி செய்யும் மனிதனாயிருப்பான். உதாரணமாக மோசே, பவுல், இன்னும் மற்றவர் அந்த அழைப்பிலிருந்து விலகி ஓட முயன்றனர். 13ஆனால் இங்கு நாம் காண்பது என்னவெனில், மோசே செய்தவைகளில் பல தோல்விகள் கண்டிருந்தபோதிலும் தேவனுடைய கரம் அவன் மேலிருந்தது. அவர் அவனை அழைத்து, அவருடைய ஊழியத்தை செய்து அவர் அவனுக்களித்திருந்த கட்டளையை நிறைவேற்றக் கூறினார். எனவே ''நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருப்பேன்“ என்று தேவன் உரைத்ததை யோசுவா கேட்ட போது அது அவனுக்கு எத்தகைய ஆறுதலாக இருந்திருக்கும்! நான் முயற்சி செய்து தோல்வியுற நேர்ந்தால், தேவன் என்னைக் கைவிடமாட்டார். ஒரு காரியத்தைச் செய்ய அதிகமாக பயப்படும் எவர் பேரிலும் எனக்கு நம்பிக்கையில்லை. முயற்சி செய்ய அதிக சோம்பேறியாய் இருப்பதைவிட அதைச் செய்ய முயன்று தோல்வியுற்றவனாக காணப்படுவதையே நான் விரும்புகிறேன். 14ஒரு சமயம் பால்லர்ட் அண்டு பால்லர்ட் மாவு நிர்வாகம் ஒரு மனிதனை வேலைக்கு அமர்த்தினராம். அவன் தன் பெயரைக் கையொப்பமிட இருந்தபோது, அவனுடைய பென்சிலின் முனையில் அழிக்கும் ரப்பர் (eraser) இல்லாததை திரு. பால்லர்ட் கண்டு, அவனை நோக்கி, ''உன் பென்சிலின் முனையில் ரப்பர் இல்லையே“ என்று கேட்டராம். அதற்குஅவன், ''நான் தவறுகள் செய்வதில்லை“ என்றானாம். அதைக் கேட்ட திரு. பால்லர்ட், “அப்படியானால் உன்னை நான் வேலையில் உபயோகிக்க முடியாது. ஏனெனில் நீ தவறுகள் செய்வாயானால் நீ... நீ தவறுகள் செய்வதில்லையென்றால். நீ ஒரு வேலையும் செய்வதில்லை என்று தான் பொருள் என்று கூறினாராம். அது உண்மை. உங்கள் தவறுகளுக்காக தேவன் உங்களைப் பொறுப்பாளியாக்குவதில்லை. ஆனால் நீங்கள் மனப்பூர்வமாய் செய்யும் பாவத்துக்கு அவர் உங்களைப் பொறுப்பாளியாக்குவார். ''சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின். ஒருவன் மனப்பபூர்வமாய் பாவஞ்செய்கிறவனாய் இருந்தால் ஒரு மனிதன் ஒன்றைச் செய்யும் போது, அவன் பெருந்தவறு செய்ய நேரிடலாம், அவன் விழுந்து போகலாம். ஆனால் அவன் உண்மையிலேயே தெய்வீக அழைப்பைப் பெற்று. தேவனைத் தன் இருதயத்தில் கொண்டிருந்தால். அவன் மறுபடியும் எழுந்திருப்பான். 15பல வருடங்களுக்கு முன்பு ஒரு மனிதனும் அவருடைய மனைவியும் இந்த சபைக்கு வருவதுண்டு. ஒரு வேளை அவர்கள் இன்று காலையில் இங்கிருக்கலாம். அவர்கள் ஒரு பாடலைப் பாடுவது வழக்கம். அது என்னை சிலிர்க்க வைத்தது. அது இப்படி ஏதோ அடிகளை கொண்டது கர்த்தாவே என்னை மன்னியும், இன்னும் ஒருவிசை என்னை சோதித்துப் பாரும் நீர் என்னுடையவராய் இருப்பின், நான் உம்முடையவனாய் இருப்பேன். நான் விழுந்திடினும் தோல்விடைந்திடினும், நான் மறுபடியும் எழுந்து முயற்சி செய்திடட்டும் கர்த்தாவே என்னை மன்னியும், இன்னும் ஒரு விசை என்னை சோதித்துப் பாரும் அது எனக்குப் பிரியம். ஏனெனில் எந்த ஒரு சிறந்த போர் வீரனும் போரில் காயமடைய வாய்ப்புண்டு. ஆனால் அவன் போர்வீரனாக இருந்து, போரிடுவதற்கு ஒரு நோக்கத்தைக் கொண்டிருப்பான் என்றால். அவன் எழுந்து மறுபடியும் முயற்சி செய்வான். சிலுவையின் சிறந்த வீரன் எவனும் இதையே செய்வான். 16மோசே கடந்து சென்ற பிறகு சேனையின் புதிய தளபதியாகிய யோசுவா, மோசேயின் தவறுகளிலும் தேவன் அவனோடு கூட இருந்ததைக் கண்டவனாய், தேவனிடமிருந்து பெற்றக் கட்டளையில் உறுதியாய் நின்றான். மோசே என்ன செய்தபோதிலும், மோசே வகித்திருந்த ஸ்தானத்திற்கு தேவன் மதிப்பு கொடுத்தார். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் மற்றெல்லா தீர்க்கதரிசிகளைவிட மேலானவனாயிருந்தான். அவர்கள் பெற்றிருந்த எந்த தீர்க்கதரிசியையும் விட அவன் மேன்மையானவனாயிருந்தான். அவன் எத்தியோப்பிய பெண்ணை விவாகம் பண்ணின காரணத்தால் அவனுடைய சொந்த சகோதரியே அவனைப் பார்த்து நகைத்தபோது அவர் அவர்களை ஒன்றுகூட்டி, ''நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால் கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி சொப்பனத்தில் அவனோடு பேசுவேன். நான் மோசேயுடன் அவ்விதம் பேசாமல், அவன் காதுபட என் வாயால் பேசுகிறேன். நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?“ என்றார். பாருங்கள். தேவனுடைய பிள்ளைகளைக் காலால் மிதிப்பது நல்லதல்ல. அப்படி செய்வீர்களானால், நீங்கள் தேவனை நோகப் பண்ணுகிறீர்கள். மோசே தேவனிடத்திலிருந்து கட்டளை பெற்றிருந்தான். அவனுடைய தவறுகள் பொருட்டாக காணப்படவில்லை. தேவன் அவனுடைய இருதயத்தை அறிந்திருந்தார். 17ஒரு நாள் மோசே தனக்கு தாங்கக் கூடாத மிஞ்சின பாரம் உள்ளதாக முறையிட்டான். அப்பொழுது தேவன் அவன் மேலிருந்த தம்முடைய ஆவியை எடுத்து, அதை எழுபது பேருக்குப் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு தொடக்கத்திலிருந்ததை விட அதிக ஆவி இருக்கவில்லை. அதே அளவுள்ள ஆவி. ஆனால் ஒரு காரியம் என்னவெனில், பணிக்கு அவர்களுக்கு அதிக ஆட்கள் இருந்தனர். தேவன் விரும்பினால் தம்முடைய ஆவி அனைத்தையும் ஒரு மனிதனின் மேல் வைக்கலாம். அல்லது ஆயிரக்கணக்கானோர் மீது அதை சிதறப் பண்ணலாம். ஒருநாள் அவர் தமது முழு ஆவியையும் இயேசு என்ற மனிதனின் மேல் வைத்தார். இப்பொழுது அவர் எல்லாவிடங்களிலுமுள்ள தமது சபைகளில் அதை சிதறப் பண்ணியிருக்கிறார். தேவன் தாமே ஊழியத்திற்கென்று அளித்த தம் கட்டளையைக் காத்துக் கொள்கிறார் 18இப்பொழுது, புதிய தளபதியாகிய யோசுவா. எகிப்தை விட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு புறப்பட்டவர்களில் இப்பொழுது இரண்டு பேர் மாத்திரமே மீதியாயுள்ளனர். அவர்கள் யோசுவாவும் காலேபும். சேனைக்குத் தலைவனாக, யோசுவா புதிய தளபதியானான். மிகப் பெரியவனான மோசே நின்ற ஸ்தானத்தில் அவனுக்கு அடுத்தவனாக இருந்த யோசுவா நின்றான். அது ஒன்றும் எளிதான பணியன்று. இயேசு நின்றிருந்த அடிச்சுவடுகளில் நிற்பதற்காக தேவனால் இன்று அழைக்கப்பட்ட ஒரு ஊழியக்காரனை எண்ணிப் பார்க்கிறேன். என்ன ஒரு அதிகாரம் என்ன ஒரு கட்டளை! தேவனால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதே இடத்தில் நிற்க கட்டளை பெற்றுள்ளனர். ''நான் பாதையின் முடிவு பரியந்தம் உன்னோடிருந்து உனக்குள் வாசம் செய்வேன்“ அவர் நின்ற இடத்தில் நிற்க ஒவ்வொரு ஊழியக்காரனும் அழைப்பைப் பெற்றிருக்கிறான். ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். தேவனால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியக்காரனும் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நின்று இயேசு செய்த கடமைகளை செய்ய கட்டளை பெற்றிருக்கிறான். இது மகத்தான கட்டளை தான். 19அன்று காலையில் யோசுவா அங்கு நின்று கொண்டிருந்தபோது, தேவன் அவனுடன் பேசினது அவனுக்கு எத்தகைய உணர்ச்சியை அளித்திருக்கும் அவர், ''நான் உன்னை விட்டு விலகுவதில்லை. நாம் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருப்பேன். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் அவர்களை அழித்து தேசத்தைப் பங்கிடுவேன். நான் வழியை செவ்வைப்படுத்துவேன். நீ மட்டும் பலங்கொண்டு திடமனதாயிரு, திகையாதே“ அதாவது கவலைப்படாதே. ''பயப்படாதே நான் உன்னோடு இருந்து உன்னை கடைசி மட்டும் கொண்டு செல்வேன்” யோசுவா என்னும் இப்புதிய மனிதனுக்கு அளிக்கப்பட்ட ஊழியத்திற்கான கட்டளை எப்படிப்பட்டது. நாம் விவரிக்கக் கூடிய அநேக முன்னடையாளங்கள் இங்குள்ளன. அவைகளில் சிலவற்றை நாம் கடந்து சென்றுவிடுவோம். உதாரணமாக, சீனாய் மலைக்கு அவர்களுடைய வேத சாஸ்திரத்துக்கு, அவர்களை நடத்தி வந்த மோசே சபை காலத்துக்கு முன்னடையாளமாயிருக்கிறான். நேற்றிரவு அதை நாம் பார்த்தோம். மோசே தவறு செய்தததால் இஸ்ரவேல் புத்திரரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டு செல்ல அவன் அனுமதிக்கப்படவில்லை. 20அவ்வாறே ஸ்தாபன சபை, ஸ்தபானம், தவறு செய்துவிட்டது. அவர்கள் சபையை மறு கரைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் தேவன் ஒரு புது அமைப்பை, சர்வ ஸ்தாபனங்களுக்கும் இடையே உள்ள ஒரு அமைப்பை (interdenominational System) தேவனுடைய வல்லமையினால் எழுப்புவார். அது சபையை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குக் கொண்டு செல்லும். கட்டப்பட்ட ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் சுய வேத சாஸ்திரத்தினாலும், தங்கள் சுய சிந்தைகளினாலும் அதைக் குழப்பிவிட்டன. ஆனால் தேவனோ தமது பரிசுத்த ஆவியைக் கொண்ட, சபையை வாக்குத்தத்தத்துக்கு நடத்தி செல்லக்கூடிய தமது யோசுவாவை எழுப்புவார். அது ஸ்தாபனக் கட்டுதல் அற்றதாய் சபையைக் கொண்டு செல்லும். மோசே தவறினான். அவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவன். யோசுவா கிருபையினால் அழைக்கப்பட்டு அவன் சபையைத் தொடர்ந்து நடத்திச் சென்றான். 21நாம் மேலும் காண்பது என்னவெனில் இந்த உத்திரவாதம் அவனுடைய கரங்களில் அளிக்கப்பட்டள்ளதென்றும் அவனை தேவன் அழைத்த கடமையில் அவன் தவறக் கூடாதென்றும் யோசுவா அறிந்தவனாய், அவன் தேவனுக்கு முன்பாக மிகவும் பயத்துடன் நடந்தான். அவன் ஜனங்களை ஒன்று கூட்டி தேவன் தனக்கு அளித்துள்ள கட்டளையை அவர்களிடம் கூறினபோது, ஜனங்களின் வேண்டுகோள் என்னவென்பதைக் கவனியுங்கள். அவர்கள், ''மோசேயைப் பின் தொடர்ந்தது உம்மைப் பின் தொடந்தால், நாங்கள் மோசேயைப் பின்பற்றினது போல உம்மையும் பின்பற்றுவோம். நீர் பலங்கொண்டு திடமனதாய் மாத்திரம் இரும்'' என்றனர். மறுபடியும் பிறந்த ஒவ்வொரு நபரின் இன்றைய தேவையும் அதுவே. நாம் பின்பற்ற வேண்டும் என்னும் வேண்டுகோள் நமக்கு விடப்பட்டால், அடையாளங்கள் அந்த விசுவாசியைத் தொடருவதை நாம் காணட்டும். ஏனெனில் நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்“ என்று இயேசு கூறியுள்ளார். இன்று காலையில் உங்கள் ஆவிக்குரிய இருதயம் திறந்திருக்கிறதென்னும் நிச்சயமுடையவர்களாயிருங்கள் என்று சற்று முன்பு உங்களைக் கேட்டுக் கொண்டேன். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் கிரகித்துக் கொள்வீர்களென நம்புகிறேன். இன்று காலையில் நாம் ஸ்தாபனங்களில் உள்ளவர்களுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். கத்தோலிக்கர் முதல் பிராடெஸ்டெண்டு வரையிலுள்ள வெவ்வேறு ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர் இங்கு கூடியுள்ளனர். எனவே அது நிச்சயமாக ஆவியில் நிறைந்தவர்களுக்கு வெளிப்படுத்தப்படும். 22யோசுவா தேவன் அளித்த இந்த கட்டளையை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. ஜனங்கள், ''தேவன் மோசேயோடே இருந்தது போல், உம்மோடும் இருப்பாராக. அப்பொழுது இதுவரையிலும் எங்களை வழிநடத்தி வந்த அதே ஆவி இனிமேலும் எங்களை வழிநடத்தும் என்று நாங்கள் அறிந்து கொள்வோம்“ என்றனர். ஓ, சபையானது இன்று காலையில் ஜனங்களின் மத்தியில் ஆவியானவர் கிரியை செய்வதை எவ்வளவாக நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் - கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி - பரிசுத்த ஆவி - ஜனங்களின் மத்தியில் அசைகின்ற ஒருசபை உங்களுக்கு வேண்டுமானால் ஜனங்களை தேவனுடைய ஆசீர்வாதங்கள் அனைத்தும் பெற்று வாக்குத்தத்தம் நிறைந்த மற்ற தேசத்துக்குக் கொண்டு செல்வதற்கென தேவன் கடைசி நாட்களில் அந்த ஆவியைத்தான் எழுப்பிக் கொண்டிருக்கிறார் - அவர் அளித்த வாக்குத்தத்தத்தை பெற்ற அந்த தேசம். ''வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உண்டாயிருக்கிறது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நாடின இஸ்ரவேல் அது எங்கோ ஓரிடத்தில் இருந்தது என்பதை அறிந்திருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு முன்பு ஒரு சிலர் அங்கு சென்று வந்தனர். சபையும் அந்நிலையில் உள்ளது. எங்கோ ஓரிடத்தில் ஒரு தேசம் உள்ளதென்று நாம் அறிந்திருக்கிறோம். எங்கோ ஓர் வல்லமை உள்ளது. ஏனெனில் மற்றவர் அங்கு சென்றுள்ளனர். அந்த தேசம் நதிக்கு அப்பால் உள்ளதென்று நாம் அறிந்திருக்கிறோம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கென இக்காலையில் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அத்தேசம் அங்கிருந்தது என்று யோசுவா அறிந்திருந்தான். அவன் முதலில் அங்கு சென்று நேரில் கண்டு சாட்சியாக திரும்பவந்தான். தேவனால் அழைக்கப்பட்ட ஊழியக்காரரும் வேத சாஸ்திரத்தினால் தங்களைத் திணித்துக் கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக நாம் போய்க் கொண்டிருக்கிற தேசத்துக்கு அவர்கள் சென்று, அதற்கு சாட்சியாக இயேசு கிறிஸ்துவின் அன்பையும் வல்லமையையும் அங்கிருந்து கொண்டு வந்து. நதிக்கு அப்பால் ஒரு தேசம் உண்டு என்பதை தங்கள் சபையோருக்கு தெரியப்படுத்த வேண்டும். 23இப்பொழுது, நேற்றிரவு, “யோர்தான் வரையில் செல்லுதல்” என்பதைக் குறித்து பிரசங்கித்தோம். அந்த நதியை நாம் அடையும் போது அது நம்மைப் பிரிக்கின்றது. ஆனால் மறுகரையை நாம் அடைந்துவிட்ட மாத்திரத்தில், நமக்கு ஏதோ ஒன்று நிகழ்கின்றது, இப்பொழுது யோசுவா இவையனைத்திலும், தான் பெற்றிருந்த கட்டளை பெரிதென்று அறிந்தவனாய், அவன் பயப்படத் தேவையில்லை என்னும் உறுதியைக் கொண்டிருந்தான். அவன் பயப்படாததனால் அதை அசட்டுத் துணிவு (Reckless) என்று நாம் அழைக்க வகையுண்டு. ஆனால் அவன் சரியான வழியில் சென்று கொண்டிருக்கும் வரைக்கும் கவலையில்லை. அவன் ஒரு வேளை மலையின் மேல் மோதி , அது அவனைப் பின்னே தள்ளியிருக்கும். இருப்பினும் அவன் சரியான வழியில் சென்று கொண்டிருந்தான். அவ்வாறே ஜீவனுள்ள தேவனுடைய சபையும் அசட்டுத் துணிவு கொண்டதாய், பயமற்றதாய் விசுவாசத்தில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில் அவர், ''நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருப்பேன். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை'' என்று கூறியுள்ளார். அவர் மோசேயைக் கைவிடவில்லை, அவர் யோசுவாவை கைவிடமாட்டார். அவர் நம்மையும் கைவிடமாட்டார். அவர் நம்மோடு இருப்பார். 24யோசுவா ஜனங்களை தேசங்களின் வழியாக மறு தேசத்துக்குள் நடத்திச் செல்ல வேண்டும் என்னும் பொறுப்பை உணர்ந்தவனாய், இந்தக் கட்டளையை ஏற்றுக்கொண்டதாக நாம் காண்கிறோம். அவன் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும். அங்கு அவன் அவர்களுக்கு சுதந்தர வீதத்தை பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். மோசே செய்ததைக் காட்டிலும் அவனுக்கு அளிக்கப்பட்ட உத்திரவாதம் மிகவும் அதிகமானது என்பதை அவன் அறிந்திருந்தான். மோசே செய்ததை விட யோசுவா செய்ய வேண்டியது அதிகமாயிருந்தது. மற்றொரு காரியம். அவன் அவர்களுடைய சகோதரரின் நடுவில் எல்லை வழியாக நடத்திச் செல்ல வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஏற்கனவே இரத்தத்தை ருசி பார்த்திருந்தனர். அவர்களை அவன் மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. இஸ்ரவேலர் அணிவகுத்து செல்கையில் அவன் அவர்களை அமரிக்கையாக வைக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது எழும்பி வந்து கொண்டிருக்கிற இந்த புதிய பெந்தெகொஸ்தே குழுவும் இன்று அதே நிலையில் உள்ளது. அவர்கள் ஸ்தாபனத்துவத்தை ருசி பார்த்துள்ளனர். அவர்களை அமெரிக்கையாக வைத்திருப்பது மிகக் கடினம். 25சில ஆண்டுகளுக்கு முன்பு, என் ஊழியத்தை நான் முதலில் தொடங்கின போது அவர்கள். ''வாருங்கள் சகோ. பிரன்ஹாம், நாம் ஒரு ஸ்தாபனத்தை துவங்குவோம். உங்களுக்கு எங்காவது ஒரு நினைவகத்தை கட்டுவோம் என்றனர். நான் ஒரு நினைவகத்தை எதிர் நோக்கியிருக்கவில்லை. கர்த்தரின் வருகையையே எதிர் நோக்கியிருக்கிறேன். அவர்கள் “பின்மாரி” என்றழைக்கப்படும் ஒரு சிறு குழுவை ஏற்படுத்திக் கொண்டு கனடாவிலும் கலிபோர்னியாவிலும் பரவினர். ஆனால் அது விழுந்து போனது. அது தொடர்ந்து செல்ல முடியாது. ஏன் அப்படி? அவர்கள் அறிந்திருந்த ஒன்றே ஒன்று - அவைகளை விட்டு அவர்கள் வெளிவந்து சத்தியத்தைக் குறித்த ஒரு சிறு தொடுதலைப் பெற்றிருந்தனர். அவர்களுக்கு ஏதாவதொன்றை செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் சகோதரனே, ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபைக்கு எவ்வித ஸ்தாபன அமைப்புகளோ கோட்பாடுகளோ கிடையாது. அது தேவனுடைய வல்லமையினால் நடத்தப்படுகிறது. அந்த வல்லமை ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் இருதயத்திலும் உள்ளது. உங்கள் சகோதரரைக் கடந்து செல்லுங்கள். அவர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்களை விட நாம் பெரியவர்கள். அவர்களுடன் வாக்குவாதம் செய்யாமல் நடந்து சென்று விடுங்கள். 26இங்கு நடந்த ஒரு முக்கியமான காரியத்தை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அங்கு ஏசா சந்ததியினர். மோவாபியர் இன்னும் பலர் இருந்தனர். இவர்களைக் குறித்து நேற்றிரவு நாம் குறிப்பிட்டோம். இவர்களில் அநேகர் உண்மையில் எல்லைக் கோடு விசுவாசிகளாய் இருந்தனர். அவர்கள் சரியாக எல்லையில் இருந்தனர். ஓ, வேறொன்றைக் கூற இங்கு நான் சிறிது நேரம் இதை நிறுத்திக் கொள்கிறேன். எனக்கு ஒரு நிமிடத்திற்கு மேல் எடுக்காது. அநேகர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை ஆயிரவருட அரசாட்சியுடன் ஒப்பிடுகின்றனர். அது சரியல்ல. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் யுத்தங்களும் கொலைகளும் நடந்தன. ஆயிரவருட அரசாட்சியில் யுத்தங்களும் கொலைகளும் இராது. போர்க்களங்கள் பரிசுத்த ஆவிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. நீதிமானாக்கப்படுதல், அவர்கள் எகிப்தைவிட்டு வெளிவந்தனர். அவர்களுடைய பிரயாணம் மூன்று கட்டங்களைக் கொண்டது. அவர்கள் நீதிமானாக்கப்படுதலின் கீழ், வார்த்தையை விசுவாசித்து, எகிப்தியரிடமிருந்து தங்களை வேறு பிரித்துக் கொண்டு, எகிப்தை விட்டு வெளி வந்தனர். அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து, தங்களுக்குப் பின்னால் இருந்த எல்லாவற்றையும் கொன்று போட்டனர். அது தான் இரத்தத்தின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுதல். பொல்லாங்கான எல்லா மனித இச்சைகளையும் அது கொன்று போடுகிறது. அது பிரயாணத்தின் இரண்டாம் கட்டம். ஆனால் மூன்றாம் கட்டமோ அவர்கள் யோர்தானைக் கடந்து, அவர்களுடைய சுதந்தர வீதம் இருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தல். தேவன் அவர்களை எகிப்தில் ஆசீர்வதித்த போதிலும், அவர்களுடைய சுதந்தர வீதம் எகிப்தில் இருக்கவில்லை. 27நீதிமானாக்கபடுதலை நம்புகிற லூதர்களே, நீங்கள் அழைக்கப்பட்டவர்களாய் இருப்பீர்களானால், உங்களுடைய சுதந்திரவீதம் அங்கு இல்லை. நீங்கள் லூதர்கள் தான் என்று சொல்வீர்களானால், உங்களால் அவ்வளவு தான் கிடைக்கும். பரிசுத்தமாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டுள்ள மெதோடிஸ்டுகளே, நசரீன்களே, யாத்திரீக பரிசுத்தரே, தேவ சபையினரே, உங்களிலுள்ள பொல்லாங்கானவைகளைக் கொன்று. பொல்லாங்கின் வேர்களை பிடுங்கி விட்ட நீங்கள் நதியின் அக்கரைக்கு சொந்தக்காரர். ஆனால் ஆண்களும் பெண்களுமாகிய உங்களுக்குள் ஏதோ ஒன்றுள்ளது. அந்த ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிடுகின்றது. இன்னும் கடக்க வேண்டிய யோர்தான் ஒன்றுண்டு. அந்த நதிக்கு அப்பால் ஒரு தேசம் உண்டு! அவர், ''நீங்கள் உங்கள் சகோதரரைக் கடந்து செல்லப் போகின்றீர்கள். அவர்கள் எல்லையின் அருகில் உள்ளனர். அவர்களை நீங்கள் கடந்து செல்லும் போது, அவர்களிடம் ஒன்றும் பேச வேண்டாம். நான் ஏசாவுக்கு இந்த மலையைக் கொடுத்தேன். நான் மோவாபியருக்கு இந்த தேசத்தைக் கொடுத்தேன். நீங்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை உங்கள் உபதேசத்துக்கு கொண்டு வர வேண்டாம். நீங்கள் போகும் இடத்தை அறிந்திருக்கிறீர்கள். அவர்களுடைய பழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டாம்“ என்றார். 28மோவாபியருக்கு பிலேயாம் என்னும் பெயருடைய ஒரு கள்ளத் தீர்க்கதரிசி, ஒரு பேராயர் இருந்தான். அவன் சபையோர் மத்தியில் வந்து, ஸ்தாபனம் உண்டாக்க முயன்று அவர்கள் சகோதரராயிருப்பதால் அவர்களை ஒன்றாக இணைக்க முயன்றான். ஆனால் அவர்கள் சகோதரர் அல்ல அவர்கள் ஒன்றுவிட்ட சகோதரர், உண்மைச் சகோதரர் அல்ல! உங்கள் இருதயத்தில்... ''அவனுடைய கருத்து வேறுபாடு கொள்ள வேண்டாம். அவனை அப்படியே விட்டு விட்டு. உங்கள் வழியில் செல்லுங்கள். அவன் தேசத்தின் வழியாக செல்லும்போது நீங்கள் பெற்றுக் கொள்பவைகளுக்கு பணம் செலுத்திவிடுங்கள். அவன் அப்படிச் செய்வதற்கென்று முன் குறிக்கப்பட்டிருந்தான். இஸ்ரவேலருடன் மோவாபியர் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தேவன் மோவாபியரை முன்குறித்திருப்பாராயின். அவர்களிருவரும் இணைந்திருப்பார்கள். இஸ்ரவேலருடன் செல்ல வேண்டுமென்று அவர் ஏசாவின் சந்ததியினரை முன்குறித்திருப்பாராயின் அவர்கள் குதித்தெழுந்து இஸ்ரவேலருடன் சென்றிருப்பார்கள். ஆனால் அவர் ஏசாவின் சந்ததியினருக்கு நதியின் இப்பக்கத்தில் சுதந்தர வீதத்தை அளித்திருந்தார். 29ஆகவே எல்லா லூத்தரன்களும் இதைக் காணும்படிச் செய்ய உங்களால் எப்படி முடியும்? எல்லா பாப்டிஸ்டுகளும் எல்லா பிரஸ்பிடேரியன்களும் நசரீன்களும் யாத்திரீகப் பரிசுத்தரும் இதை எப்படி காணச் செய்ய முடியும்? அவர்களைக் குற்றப்படுத்தாதீர்கள். அவர்கள் அறிந்துள்ளது அவ்வளவே அவர்களுக்குள் இருப்பது அவ்வளவே. ஆனால் விசுவாசிக்கிற உங்களுக்கு (ஓ, தேவனே), அறிந்துள்ள உங்களுக்கு, ஏதோ ஒன்று உள்ளே இருக்கும் உங்களுக்கு, அது ஆழத்தை நோக்கிக் கூப்பிடுகிறது. நீங்கள் பெற்றுள்ள ஆழம் அனைத்தும் திருப்தியடைந்துவிட்டால். அங்கேயே தரித்திருங்கள். ஆனால் எனக்கும் என் வீட்டாருக்கும் அவர்கள் காண்பதை விட ஏதோ ஒன்று சற்று அதிகமாக உள்ளது. நதிக்குஅப்பால் எங்கோ ஒரு தேசம் உள்ளது. இன்னமும் ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. நான் வேத சாஸ்திரத்தினால் திருப்தியடைய முடியாது. ஒரு நல்ல கூட்டத்தினால் (campaign) நான் திருப்தியடைய முடியாது. அதற்கு அப்பால் ஏதோ ஒன்றுள்ளது. அது கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. 30ஆகவே அவர்களைத் தனியே விட்டு விடுங்கள். நாம் வேறொரு தேசத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம். அவர்கள் உங்களுடன் செல்ல முன் குறிக்கப்படவில்லை. அவர்கள் உங்களுடன் செல்ல முன்குறிக்கப்படவில்லை. அவர்கள் உங்களுடன் நடந்து வரமாட்டார்கள். ''இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?'' ஆனால் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கோ, சென்று கொண்டிருப்பவர்களுக்கோ... தேவனால் அழைக்கப்பட்டவர்கள் நல்லது, அவர்கள் “தேவன் எங்களுக்கு இந்த சபையைத் தந்திருக்கிறார். தேவன் இதை செய்தார்” என்கின்றனர். அது உண்மைதான். தேவன், ''நான் ஏசாவுக்கு இந்த மலையைக் கொடுத்திருக்கிறேன். அவனைத் தொட வேண்டாம். உங்களுக்கு வித்தியாசமான ஒன்றை வைத்திருக்கிறேன். நதியைக் கடந்து செல்லுங்கள்'' என்றார். ஆமென்! சகோதரரே, என் விருப்பமும் அதுவே. என் சபை நதியைக் கடந்து வேறொரு தேசத்துக்குள் பிரவேசிக்க; அக்கரைக்குச் செல்ல விருப்பம் கொண்டிருப்பதை நான் காண வேண்டுமென்தே என் வாஞ்சையாயுள்ளது. முதலாவதாக உங்களுக்குள் ஒன்று இங்கு இருந்து கொண்டு கூப்பிடுமானால், அந்த கூப்பிடுதலுக்கு பதிலளிக்க ஒன்று இருக்கும். ஆடு வளர்க்கும் தொழிலில் மாத்திரம் ஈடுபட்டிருப்பது உங்களுக்குப் போதாது. ஏதோ ஒரு வகையான தொழில் ஈடுபட்டிருப்பது உங்களுக்குப் போதாது. ஒரு சபையைச் சேர்ந்து கொண்டு, புத்தகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுதல் உங்களுக்குப் போதாது. ஏனெனில் ஏதோ ஒன்று அக்கரை வரைக்கும் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அக்கரையிலிருந்து ஒரு கூப்பிடுதல். யோர்தானைக் கடந்து, நீங்கள் அப்பாலுள்ள தேவனுடைய கரங்களின் அணைப்பில் விழும் வரைக்கும் வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆழம் மற்றொரு ஆழத்தை நோக்கிக் கூப்பிடுதல் 31யோசுவா, தான் பெற்றிருந்த கட்டளை மிகவும் பெரிது என்பதை அறிந்திருந்தான். யோசுவா யோர்தானைக் கடக்கத் துவங்கின போது இந்த கட்டளையை எவ்வாறு நினைவு கூர்ந்தான் என்பதை கவனித்தீர்களா? இந்த நியாயப்பிரமாண புத்தகம், “என் வார்த்தை உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக” வேறு விதமாகக் கூறினால், ''யோசுவாவே கோத்திரங்கள் என்ன கூறினாலும், மற்ற ஆசாரியர்கள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. இந்த வார்த்தையில் நிலைத்திரு. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய். அவர்கள் எத்தனை பெரிய காரியங்களைச் செய்த போதிலும். எத்தனை சிறிய காரியங்களைச் செய்தபோதிலும் எத்தனை ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டாலும் பரவாயில்லை. யோசுவாவே, நீ வார்த்தையில் நிலைத்திரு “ஓ, என்னே! ”வார்த்தையில் நிலைத்திரு! இந்த வார்த்தை, இந்த வார்த்தை உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக“. அதை நான் மறுபடியும் படிக்கிறேன்: என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப் பிரமானத்தின்படி யெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனமாயிரு... அதை விட்டு வலது இடது புறம் விலகாதிருப்பாயாக. 32ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய வார்த்தை உரைக்குமானால், அதை செய்! ஸ்தாபனம் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை, அதை எப்படியும் செய்! அப்படிப்பட்ட யோசுவாவுக்காக தேவன் காத்துக்கொண்டிருக்கிறார். நீ அதிலிருந்து ஒரு அங்குலமும், ஒரு அணுவும் விலகாதே வார்த்தையில் நிலைத்திரு! ...அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக... நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளம்படிக்கு (ஆங்கிலத்தில் “that thou mayest prosper”. அதாவது 'நீ செழிப்படையும்படிக்கு' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). ஓ, பெரிய ஆலயங்களைக் கட்டி பத்தாயிரம் பேர் உங்கள் ஸ்தாபனத்தில் சேர்வதனால் நீங்கள் செழிப்படைவதாக நினைக்கிறீர்களா? அதுவல்ல செழிப்பு, அது உங்களை வாக்குதத்தத்திற்கு ஒரு அடி கூட அருகாமையில் கொண்டு செல்லாது, நமக்குத் தேவை அதிகப்படியான தேவன். அதிகப்படியான பரிசுத்தஆவி! ...நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக... இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய நினைக்கும் போது அதை தேவனுடைய வார்த்தையின்படி செய்கிறீீர்களா? வார்த்தையின் மேல் உங்கள் வாஞ்சை காணப்படுகிறதா? நீங்கள் வார்த்தையைப் போதிக்கிறீர்களா? அல்லது இன்று அநேகர், ஏராளமானோர் செய்வது போல், “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதிக்கிறீர்களா?” (மாற்.7:7) 33இந்த நியாயப்பிரமான புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக... “உன் வாயை”, அதாவது நீ பேசுவது. அதை படித்து விட்டு நடந்து சென்றுவிடாதே. அதைப் பேசு! அதன்படி வாழு! அதைப் போதி! ...இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக... இந்நாளின் யோசுவா எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பார்த்தீர்களா? ஆவிக்குரிய சபையின் யோசுவா எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பார்த்தீர்களா? மாம்சப்பிரகாரமான சபையின் யோசுவா எவ்விதமாக இருந்தானோ அதே விதமாக ஆவிக்குரிய சபையின் யோசுவாவும் இருக்க வேண்டும். “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய ராஜ்யத்தைக் காண முடியாது” என்று வேதாகமம் கூறினால், ஆவிக்குரிய யோசுவா “ஆமென்” என்பான். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று வேதாகமம் உரைத்தால் ஆவிக்குரிய யோசுவா அதையே கூறுவான். அவர் மாறாதவராயிருக்கிறார். வேதாகமம், வேதபுத்தகம், வார்த்தை ''நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த சாட்சிகளாய் இருப்பீர்கள்'' என்று உரைத்தால் ஆவிக்குரிய யோசுவா அதையே கூறுவான். 34பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்று கூறியிருந்தால், ஆவிக்குரிய யோசுவா அதிலிருந்து ஒரு அணுவும் பிசகாமல் வார்த்தை கூறுவதையே செய்வான். ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்: சர்ப்பங்களை எடுபார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்“ என்று மாற்கு 16-ம் அதிகாரம் கூறினால் ஆவிக்குரிய யோசுவாவும் அதையே கூறுவான். அவன் தன் வழியை செழிப்பாக்கும்படியாய். இரவும் பகலும் அதை தியானித்துக் கொண்டிருப்பான். 35யோசுவா, தானே உண்மையான யோசுவா என்று முதன் முறையாக நிரூபிக்க முதல் கூட்டத்துக்கு (campaign) வந்தபோது என்ன நடந்தது என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். இஸ்ரவேலர் அவன் உண்மையான யோசுவா என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆசாரியர்களுக்கு வேறு கருத்து இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அவர்கள், ''நாம் வசந்த காலம் அல்லது கோடை காலம் வரைக்கும் இந்த பாளயத்தில் தங்கியிருப்போம். அப்பொழுது யோர்தானின் தண்ணீர் மட்டம் இறங்கிவிடும்“ என்றனர். தேவன் ஆவிக்குரிய யோசுவாவுக்கு முன்னால் பைத்தியமாகத் தோன்றும் சில காரியங்களை வைக்கிறார் என்பது போல் காணப்படுகிறது. அவர் யோசுவாவை ஏப்ரல் மாதத்தில் அங்கு கொண்டு சென்றார். அப்பொழுது யோர்தானின் வெள்ளப் பெருக்கு மூன்று நான்கு மடங்கு அதிகமாயிருக்கம். அவன் உண்மையான யோசுவா என்பதை நிரூபிக்க அவர் அவனைப் பரீட்சித்துக் கொண்டிருந்தார். எல்லாமே தவறாகப் போகட்டும் மற்றவர் அனைவருமே செழித்திடட்டும். மற்றவர்கள் செழிப்படையட்டும் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கும் மனிதர் தழைத்தோங்கி உங்களை பின்னால் தள்ளட்டும். நீங்கள் எங்கு நிற்க வேண்டும் என்பதை அறிந்திருப்பீர்களானால். நீங்கள் நிற்பீர்கள். முழுஉலகமே உங்களைப் புறக்கணித்தாலும், நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் அப்பொழுதும் நின்று கொண்டிருப்பீர்கள். நீங்கள் அந்த வார்த்தையினின்று மாறவேமாட்டீர்கள். 36யோர்தானில் வெள்ளப் பெருக்கு வழக்கமாக உள்ளதைக் காட்டிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாயிருந்தது. அது காண்பதற்கு பிசாசு போல் பயங்கர தோற்றமுடையதாய் சகதியாக இருந்தது. ஆனால் யோசுவா “இன்னும் மூன்று நாட்களில் நாம் யோர்தானைக் கடந்து செல்வோம் என்று தேவன் உரைத்துள்ளார். நாம் நிச்சயம் கடந்து செல்வோம்'' என்றான். ஆசாரியர்கள். ''யோசுவா, ஒரு நிமிடம் பொறு, நாங்கள் படித்தவர்கள், நாங்கள் புத்திசாலிகள். இங்குள்ள எங்களில் பலர் எகிப்திலிருந்து வந்த பொறியாளர். இவைகளை எப்படி செய்வதென்று எங்களுக்குத் தெரியும். எனவே நதியின் வெள்ளம் வடியும் வரைக்கும் நாம் சிறிது காத்திருப்போம், பிறகு நாம் அதை நடந்தே கடந்து சென்று விடலாம். இது இன்னும் சுலபமாக இருக்கிறதல்லவா'' என்றனர். ''நீங்கள் என்ன யோசனை பண்ணினாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. மூன்று நாளில் நாம் கடந்து செல்வோம் என்று தேவன் கூறியுள்ளார். நாம் கடந்து செல்லப் போகிறோம். மூன்று நாட்களில் நாம் கடந்து செல்லப்போகிறோம்“. யோசுவா என்ன செய்தான் என்பதைக் கவனியுங்கள். அவன் யாரை முன்னால் வைத்தான். ஆசாரியர்களையா? இல்லை ஐயா. அவன் வார்த்தைக்கு முதலிடம் அளித்தான். “அவன் உடன்படிக்கை பெட்டியை தூக்கிச் செல்லுங்கள் ஆசாரியர்களே அதிலிருந்து விலகியிருங்கள். அதற்குப் பின்னால் வாருங்கள். அதை நடத்திச் செல்ல முயற்சி செய்யாதீர்கள். அது உங்களை நடத்தட்டும்'' என்றான். 37இன்றுள்ள தொல்லையும் அதுவே. நாம் வார்த்தையை கடந்து அதற்கு முன்னே செல்ல முனைந்து, வார்த்தை இதில் பொருந்த, அதில் பொருந்தப் பண்ணுகிறோம். கர்த்தர் உங்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றைய நமது தேவை. வார்த்தையைப் பின்பற்றுவதே! வார்த்தை வழிநடத்திச் சென்றது. அது யோர்தானை அடைந்தபோது அது பிளந்தது. அவர்கள் அதன் வழியாய் கடந்து சென்றனர். யோசுவா தனது முதலாம் கூட்டத்தில், முதலில் வைக்க வேண்டியவைகளை முதலில் வைத்தான். அதற்கு அவனுக்கு ஒரு காரணமிருந்தது. அந்தக் காரணம் என்னவெனில் தேவன், ''வார்த்தையில் நிலைத்திரு. வார்த்தை அதை செய்யட்டும்'' என்று அவனுக்குக் கட்டளை கொடுத்திருந்தார். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர்கள் யுத்தத்தில் வென்றனர். ஏனெனில் உடன்படிக்கையை முன்னால் வைக்க தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். உடன்படிக்கை பெட்டி போன பிறகு, அதற்கு பின்னால் தொடர்ந்து போனது என்னது தெரியுமா? பாடல்களும், இசை மீட்கிறவர்களுமே. யுத்தம் துவங்குவதற்கு முன்பாக அவர்கள் அப்படியாய் போனார்கள். அல்லேலூயா! இன்றைய நமது தேவையும் அதுவே. நமக்குக் காலையில் இருந்தது போல்: பாடகர்கள், இசைக் கருவிகள், இசை இசைத்து ஆர்ப்பரித்தல். பிறகு வார்த்தையை முதலில் வைத்து. அதை வாசித்தல். பிறகு யுத்தம் உண்டாகிறது. நாம் ஜெயிக்க வேண்டும். ஜெயித்தே ஆக வேண்டும். அதில் நிலை நின்று, அது சொன்னபடி செய்யுங்கள். அப்பொழுது அது உங்கள் துன்ப நேரத்தில் உங்களைக் காத்துக்கொள்ளும். 38அதற்கு அவனுக்கு ஒரு நல்ல காரணம் இருந்தது. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். அவன் கடந்து சென்ற போது; அவன் கடப்பதற்கு முன்பு, தேசத்தை வேவுபார்க்க ஒரு வேவுகாரனை, இல்லை, இருவரை அனுப்பினான். மோசே ஒரு குழுவையே அங்கு அனுப்பினான். ஆனால் அவர்கள் குழப்பமுற்றோராய் திரும்பி வந்தனர். இந்த புதிய ஊழியத்தை கவனியுங்கள். யோசுவா அவ்விதம் செய்யவில்லை. ஆயிரத்து ஐந்நூறு வேறுபட்ட கருத்துக்கள் இருந்தால். ஆயிரத்து ஐந்நூறு குழப்பங்கள் இருக்கும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் இரண்டு பேரை மாத்திரம் அனுப்பி. ''அங்கு சென்று தேசத்தை வேவு பாருங்கள்“ என்றான். இப்பொழுது நாம் ஒன்றைக் காணப்போகிறோம். நீங்கள் இதைக் காணத்தவறக் கூடாது. அவன், “நாம் கடந்து செல்லும் போது...'' என்றான். அவர்கள் நதியைக் கடந்து தேசத்தை வேவு பார்த்து, வாக்குத்தத்தங்களின்படி அது உள்ளதா, அது எப்படிப்பட்ட தேசம், அதனுள் எப்படி பிரவேசிக்க வேண்டும் என்றெல்லாம் அறிந்துகொண்டு, நதியைக் கடந்து திரும்பி வந்தனர். வேவுகாரரின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தேசத்துக்குள் பிரவேசித்த போது நேரே எரிகோவுக்கு வந்தனர். அவர்கள் எரிகோவை அடைந்த போது என்ன நேர்ந்தது? அவர்கள் ஒரு வேசியை, பெயர் கெட்ட ஒரு ஸ்திரீயை சந்தித்தனர். 39நான் இங்கே ஒரு காட்சியை சித்தரிக்க விரும்புகிறேன். அது ஒரு வேளை சரியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதன் மூலம் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். நமக்கு ராகாபின் வரலாறு எதுவுமில்லை. அவள் ஒரு வேசி என்று நாமறிவோம். அவள் ஒரு எழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பெயர் கெட்டவளானாள் என்று கற்பனை செய்து கொள்வோம். அவள் மிகவும் ஒரு அழகான வாலிப பெண். அவள் அப்படி தெரு தெருவாக வந்ததற்கு காரணம் தன்னுடைய முடமான தாய் தகப்பனுடைய பிழைப்புதான். அவள் தன்னுடைய (ஒழுக்கமுள்ள) சரீரத்தை விற்கிறதை தவிர வேறு வேலை செய்வதற்கு வழி இல்லாமல் இருந்தது. ஒரு நாள் அவள் அசைந்து கொண்டிருக்கும் தேவன் ஒருவர் இருப்பதைக் கேள்வியுற்றாள். அவள் இருதயம் நடுங்க ஆரம்பித்தது. அந்த பெரிய அசைவைச் சேர்ந்த ஒரு செய்தியாளன் என்ன நடக்கப் போகிறதென்பதை அவளுக்கு அறிவித்தான். அவள் என்ன கூறினாள்? யோசுவாவுக்கு அடையாளங்கள் இருந்தன. மோசே பெற்றிருந்த அதே அடையாளங்களை யோசுவா பெற்றிருந்தான். ஆகவே அவன்... யோசுவாவின் அடையாளத்தைக் காண வேண்டுமென்று ராகாப் கேட்கவில்லை அவள் அதைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள். வேசித்தனத்திற்குள் இழுக்கப்பட்டுள்ள சபைக்கு உண்மையான சபைக்கு இது முன்னடையாளமாயுள்ளது ''இன்றைக்கு நான் மெதோடிஸ்டு, நாளைக்கு நான் பாப்டிஸ்டு அடுத்த நாள் நான் பிரஸ்பிடேரியன்“ - வேசித்தனத்திற்குள் இழுக்கப்படுதல். 40ஆனால் திடீரென்று ஒரு சிறு பிரசங்கி பட்டினத்திற்குள் பிரவேசித்து, ''ஜீவிக்கிற ஒரு தேவன் இருக்கிறார். அவர் நேற்று ஜீவித்தார். அவர் இன்றும் மாறாதவராய் அவ்விதமாகவே இருக்கிறார். அவருடைய வல்லமையும் மாறாததாய் உள்ளது. அவர் பூமியில் இருந்தபோது செய்த அதே கிரியைகளை இப்பொழுதும் செய்து வருகிறார்'' என்றார். அவனுடைய ஊழியர் வழியில் வந்து கொண்டிருக்கின்றனர். இப்பொழுது, ராகாப் வேசி - அவள் வேசி என்று அறியப்பட்டிருந்தாள் - இன்றைய விசுவாசிக்கு, உண்மையான விசுவாசிக்கு முன்னடையாளமாய் இருக்கிறாள். அவள், “யோசுவா மோசேயின் வாரிசு ஆனதால், அவனால் அடையாளங்கள் செய்ய முடியும் என்று கேள்விப்பட்டேன். அந்த அடையாளங்களை நான் காண விரும்புகிறேன். அந்த அடையாளங்களைக் கண்டால் நான் விசுவாசிப்பேன்” என்று கூறவில்லை. அந்த அடையாளங்களைக் காண்பிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை, அவள் எப்படியும் அதை விசுவாசித்தாள். அவள் ஒரு தோமா அல்ல. அவள் அதை விசுவாசித்தாள். 41மோசே அடையாளங்களைப் பெற்றுக் கொண்ட போது, அவன் எகிப்துக்குச் சென்று அந்த அடையாளங்களைச் செய்து காண்பித்தான். ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு அவர்களைக் கொண்டு சென்றது. அந்த அடையாளம் அல்ல. அது அல்ல. அடையாளங்கள் அவன் பெற்ற கட்டளையை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தன. ராகாப் ஒன்றையும் காணாமலேயே அதை விசுவாசித்தாள். அவள், “நாங்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறோம்” என்றாள். “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யாமாட்டான் என்றான்” என்று நிகதேமு சொன்னதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இன்று உலகம் இதை அறிந்துள்ளது. பில்லி கிராம், ''நாம் பெந்தெகொஸ்தேவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்'' என்று அழைப்பு விடுக்கிறார். சபை ஆலோசனை சங்கமும், ''நாம் தீர்க்கதரிசிகளிடத்திலும், அந்நிய பாஷை பேசுபவரிடத்திலும். பாஷைக்கு அர்த்தம் உரைப்பவரிடத்திலும். தெய்வீக சுகமளித்தலுக்கும், நமது சபைகளிலுள்ள தெய்வீக சுகமளிப்பவரிடத்திலும் திரும்பச் சென்று, தேவனுடைய ஆவியானவர் தமது போக்கில் கிரியை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும்'' என்று அறை கூவுகிறது. தேவன் தம் அழைப்பைக் கொடுத்து கொண்டிருக்கிறார். ஜனங்கள் உண்மையான தேவபக்திக்கு நடுங்கி, “எங்கள் இருதயங்கள் எங்களுக்குள்ளே சோர்ந்து போகின்றன” என்கின்றனர். 42இப்பொழுது, யோசுவா தன் கரத்தைக் கொண்டும், அல்லது ஒரு கோலினாலும் ஒரு அடையாளத்தை செய்வதைக் காண வேண்டும் என்னும் அவசியம் ராகாபுக்கு இருக்கவில்லை. அவள் விசுவாசித்தாள். அவள், “நான் கேள்வியுற்றேன், அதை விசுவாசிக்கிறேன், இப்பொழுது இரக்கத்திற்காக மன்றாடுகிறேன்” என்றாள். ஓ, ஒரு பாடத்தை நாம் எவ்வளவாக இங்கு கற்கலாம்! ''எனக்கும் என் வீட்டாருக்கும் நான் இரக்கத்திற்காக மன்றாடுகிறேன்'' அன்றிரவு பட்டயத்தை உருவித் தன்னை கொலை செய்துகொள்ள போன அந்த ரோமனை, அந்த பிலிப்பு தேசத்து சிறைச்சாலைக்காரனைப் பாருங்கள். பவுல், நீ உனக்குக் கெடுதி ஒன்றும் செய்து கொள்ளாதே. நாங்கள் எல்லாரும் இங்கே தான் இருக்கிறோம்“ என்றான். சிறைச்சாலைக்காரன், “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டான். அதற்கு பவுல், ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்றான். ''ஏன்? நீயும் உன் வீட்டாருமா? நிச்சயமாக உன்னுடன் கூட உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்“. ஏன்? நீ இரட்சிக்கப்படுவதற்கு உனக்குப் போதிய விசுவாசம் இருக்குமானால் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவதற்கு உனக்குப் போதிய விசுவாசம் இருக்கும். ஆம், நீயும் உன் வீட்டாரும்! 43ராகாபைப் பாருங்கள் அவள், “என் மேல் இரக்கமாயிருங்கள் என்னை விட்டுவிடுங்கள். இந்த அவிசுவாசிகளுடன் மரிக்க எனக்கு விருப்பமில்லை. ஒரு மிருகத்தைப் போல சாக எனக்கு விருப்பமில்லை. நான் யேகோவாவின் கரங்களில் மரிக்க விரும்புகிறேன். உங்கள் தேவனை நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர் வானத்துக்கும் பூமிக்கும் தேவனாயிருக்கிறார். அவர் காணக்கூடிய அற்புதங்களைச் செய்கிறார். அவைகளை அவர் தத்ரூபமாக்குகிறார். அவர் இவைகளைச் செய்வதை நான் காணவில்லை. இருப்பினும் அதை நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். பாருங்கள், அவள் யோசுவாவைக் கண்டதில்லை. அவனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறாள். அவள் தேவனைக் கண்டதில்லை. அவருடைய கிரியைகள் ஒன்றையும் கண்டதில்லை. அவைகளைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறாள். மற்றவர்கள் அதைக் கண்டிருந்தனர். அவள் எனக்கும், என் தகப்பனுக்கும் என் தாய்க்கும் தயவு செய்யுங்கள். என் பெற்றோர் இருவரும் முதிர்வயதுள்ளவர்கள் முடமானவர்கள். எனக்கு சில சகோதரர் உண்டு அவர்களுக்காகவும் நான் விசுவாசம் கொண்டிருக்க விரும்புகிறேன்“ என்றாள். அந்த வேவுகார பிரசங்கிகள் அவளிடம், “ஆம், யோசுவா இவ்வழியில் வந்து கொண்டிருக்கிறார். நாங்கள் இத்தேசத்தைக் கைப்பற்றுவோம். அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று நீ விரும்பினால், அவர்களை உன் வீட்டிற்குள் கொண்டு வரவேண்டும்'' என்றனர். அல்லேலூயா! ”இதை நீ விசுவாசித்தால், அவர்களை அழைத்து வந்து, உன் வீட்டிற்குள் வை அவர்கள் தெருக்களில் இருந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவர்களை நீ வீட்டிற்குள் கொண்டுவந்து விட்டால் நாங்கள் பொறுப்பாளிகளாய் இருப்போம்!'' அல்லேலூயா அந்த சிறு சிகப்பு நூல் அந்த ஜன்னலிலிருந்து தொங்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் நீ விட்டிற்குள் கொண்டு வந்து விட்டால் நாங்கள் பொறுப்பாளிகளாய் இருப்போம்.'' 44ஓ, சகோதரரே, நமக்கு அன்பார்ந்தவர்களை விசுவாச வீட்டாரை, இந்த வீட்டிற்குள் கொண்டு வரவேண்டிய நேரம் ஒன்று உண்டென்றால் அது இன்றைக்கே அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் ஏனெனில் ஒரு பலத்த அதிர்ச்சி வரப்போகிறது. நமது தகப்பன்மார்களும் தாய்மார்களும் சகோதரரும் சகோதரிகளும் இந்த வீட்டில் மாத்திரமே பாதுகாப்பாயிருப்பார்கள். ஏனெனில் தேவனுடைய வல்லமை இந்த நாட்டை மீண்டும் ஒருமுறை குலுக்கப்போகின்றது. அது அவ்விதம் செய்யப்போகின்றது. விசுவாச வீட்டார் மாத்திரமே காக்கப்படுவர். அவன், “இவர்களை வீட்டிற்குள் கொண்டு வந்தாலொழிய நான் பொறுப்பல்ல'' என்றான். அவர்கள் அவளையோ அவளுடைய குடும்பத்தினரையோ அழிக்க மாட்டார்கள் என்று அவர்கள் ஆணையிடும்படி செய்தாள். அவன், ''அவர்களை உள்ளே கொண்டு வருவாயானால் அவர்கள் பாதுகாப்பாயிருப்பார்கள்'' என்றான். அவள் அவர்களை வீட்டிலிருந்து கீழே இறக்கிவிட்டாள். அவர்கள் போய்விட்டார்கள். 45இந்த மகா வேசி ராகாப் விசுவாசியானாள். அவளுடைய வரலாற்றை அண்மையில் இங்கு பிரசங்கித்தேன். அவள் தேவனிடத்தில் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக பரிவுகாட்டப்பட்டு, விசுவாசித்திற்குள் கொண்டு வரப்பட்டாள் - இஸ்ரவேலரின் விசுவாசத்திற்குள் கொண்டு வரப்பட்டாள் அவள் இஸ்ரவேலரின் சேனையின் தளபதியை மணந்தாள். அந்த ஸ்திரீக்கு தேவன் செய்ததைக் கவனியுங்கள் அவர்களுக்கு ஒரு... அவர்கள் பெத்லகேமில் குடியேறினர். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனை அவர்கள் போவாஸ் என்றழைத்தனர். அதிலிருந்து... போவாஸ் ரூத்தை மணந்தான். ரூத், போவாஸ் இவர்களின் சந்ததியில் ஈசாய் பிறந்தான். ஈசாய் தாவீதைப் பெற்றான். தாவீதின் சந்ததியில் இயேசு தோன்றினார். அல்லேலூயா! ஏன்? “விசுவாசம் கேள்வியினால் வரும்” - வானத்துக்கும் பூமிக்கும் தேவனாயிருப்பவரைக் குறித்து கேள்விப்பட்டு அவரை விசுவாசிப்பதனால். எதை விசுவாசிப்பதனால்? யோசுவா என்னும் பெயர் கொண்ட மனிதனுக்கு தேவன் அளித்திருந்த கட்டளையை விசுவாசிப்பதனால். 46யோசுவா தனக்கு அளிக்கப்பட்ட கட்டளையில் விசுவாசங் கொண்டிருந்தான் - மோசே விசுவாசம் கொண்டிருந்தது போல். மோசேக்கு காரியங்கள் தவறாகச் சென்றன. அவன் பலமுறை தோல்வியுற்றது போல் தோன்றினது. ஆனால் அவன் வெற்றியடைந்து அதன் பிறகு கன்மலையின் மேல் மரித்தான். தேவ தூதர்கள் அவனைக் கொண்டு சென்றனர்... தேவனே, நானும் அவ்விதம் செல்வேனாக. எனக்கு அளிக்கப்பட்ட கட்டளைக்கு நான் உறுதியாய் நிலைத்து நின்று என்றாவது ஒருநாள் நான் மரிக்க ஆயத்தமாகும் போது எனக்கு முன்னால் அந்த கன்மலை உள்ளதை நான் காண்பேன். யோசுவா தனக்களிக்கப்பட்ட கட்டளையைக் காத்துக் கொள்கிறான். அவனுக்கு இருந்தபோதிலும்... அவன் வார்த்தையில் நிலைத்து நின்றதால், தேவன் அதைப் புனிதமாகக் கருதுவார். இப்பொழுது, யோசுவா இந்த கட்டளையைப் பெற்றிருந்ததை ராகாப் அறிந்திருந்தாள். இப்பொழுது இதைக் காணத் தவறாதீர்கள். இவைகளை உங்கள் இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். யோசுவா கட்டளை பெற்றிருந்தான். ராகாப் எதையும் காணும் முன்பு, அதை அடையாளம் கண்டு கொண்டாள். தேசத்தைக் கைப்பற்றக் கூடிய தேவனுடைய வல்லமையை யோசுவா பெற்றிருந்ததை ராகாப் அறிந்திருந்தாள். அவள் இரக்கத்திற்காக மன்றாடினாள். தேவன் அதை அவளுக்கு அருளினார். யோசுவா தேசத்திற்குள் பிரவேசித்தபோது அவள் காக்கப்பட்டாள் என்பதை நாம் அறிந்துள்ளோம். 47யோசுவா பெற்றிருந்த மற்றொரு பெரிய கட்டளை, தேசத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பங்கிடுவதே. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த நியாயப் பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக. ஏனெனில் அவன் தேவனுடைய வார்த்தையை கொண்டிருந்தான். நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருப்பேன். நான் உன்னை விட்டு விலகுவதில்லை. ஒருவேளை நீ எனக்குத் தவறிழைக்கலாம். ஆனால் நான் உன்னைவிட்டு விலக மாட்டேன். நீ எனக்குத் தவறிழைக்க நேரிட்டாலும் என் கிருபை உனக்குப் போதுமானதாயிருக்கும். உன்னை நான் சுமந்து செல்வேன். நீ முன்னேறிக் கொண்டேயிரு. நீ வார்த்தையில் நிலைத்திருக்கும் வரைக்கும், உன்னை நான் பாதுகாப்பேன். 48அவன் தேசத்தைப் பங்கிட வேண்டியதாயிருந்தது. அதை பங்கிட்டுக் கொடுக்க பன்னிரண்டு கோத்திரத்தார் இருந்தனர். அவன் தனக்கு விருப்பமானவர்களை தேர்ந்தெடுத்திருந்தால்: அவன் எப்பீராயீம் கோத்திரத்தாரை விட காத் கோத்திரத்தாரை, அல்லது யூதா கோத்திரைத்தாரை விட யோசோப்பு கோத்திரத்தாரை அதிகமாக விரும்பியிருந்தால்? ஆனால் அவன் அவ்விதம் செய்யவில்லை. அவன் ஆவியானவர் தனக்கு வெளிப்படுத்தின வார்த்தையின்படி ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். கவனியுங்கள், அவன் அதை வெளிப்பாட்டின் மூலம், பகுத்தறிதலின் மூலம் செய்தான். வ்யூ! தேவ ஆவியானவர் அவனுக்கு அளித்த பகுத்தறிதலின் மூலம் அவன் அதைச் செய்தான். எபிரேயத் தாய்மார்கள் பிரசவிக்கையில், அவர்கள் ஒவ்வொருவரும் குழந்தையின் பெயரை உச்சரித்தனர். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொருள் உண்டு. யாக்கோபு பிறந்தபோது, இரட்டையரில் ஒருவனாக இருந்தபடியால், அவனுடைய தாய் 'எத்தன்' என்னும் பொருள் கொண்ட யாக்கோபு என்னும் பெயரைச் சூட்டினாள். ஆனால் அவன் ஜெயங் கொள்ளும் வல்லமையைப் பெற்று தூதனோடு போராடின பிறகு, தேவன் யாக்கோபு என்னும் பெயரை மாற்றி, 'பிரபு' என்று அர்த்தம் கொள்ளும் இஸ்ரவேல் என்னும் பெயரைச் சூட்டினார். உன் பெயருக்கும் உன் ஜீவியத்துக்கும் ஏதோ சம்பந்த முண்டு.மீன் பிடிக்கும் பேதுரு. தனக்கு இயேசுவில் இருந்த விசுவாசத்தினால் ஜெயங்கொண்ட போது. அவர் “உன் பெயர் சீமோன்: நான் உன்னை பேதுரு என்று அழைக்கப் போகிறேன். அதற்கு 'சிறிய கல்' என்று பொருள்'' என்றார். அது உங்களை மாற்றுகிறது. உங்கள் பெயருக்கும் உங்கள் ஜீவிய அமைப்புக்கும் ஏதோ சம்பந்தமுண்டு. 49இந்த பெரிய காரியம் நடந்த போது. எபிரேய தாய்மார்கள் ஒவ்வொருத்தியும் பிரசவ வேதனைப்பட்டு பிரசவித்து “ரூபன்” என்று பெயர் சொல்லி அழைத்தபோது, அவர்கள் தாய் அழைத்த விதமாகவே அவனை அது பாலஸ்தீனத்தில் அவன் ஸ்தானத்தில் பொருத்தினது. எல்லாவற்றையும் நான் இங்கே எழுதி வைக்கவில்லை. அவள் ''ரூபன்'' என்று அழைத்து போது அதற்கு “ஆடு மேய்ப்பவன்'' என்று பொருள். ”காத்“ என்றால் கால்நடை வளர்ப்பவன் ”எப்பிராயீம்“ என்றால் தானியம் விளைவிக்கும் விவசாயி என்று பொருள். புதிய தலைவனாகிய யோசுவா ஆவியின் பகுத்தறிதலின் மூலம், ஒவ்வொருவனையும் அவனுக்குரிய இடத்தில் வைத்து அவ்விதமாக தேசத்தைப் பங்கிட்டுக் கொடுத்தான். 50இன்றைக்கு நமக்கு யோசுவா ஏன் அவசியம் என்பதற்கு இது அழகான முன்னடையாளமாக அமைந்துள்ளது. இன்றைய தொல்லை என்னவெனில் நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடையும் போது, காத் எப்பிராயீமைப் போல் ஆடு வளர்க்க விரும்புகிறான். ஒருவன் மற்ற மனிதன் செய்யும் தொழிலையே செய்ய விரும்புகின்றனர். தேவன் ஒரு மனிதனுக்கு சுகமாக்கும் வரத்தை அளித்தால் எல்லோருமே சுகமாக்கும் வரத்தைப் பெற விரும்புகின்றனர். எப்பிராயீம், காத் அனைவருமே எல்லாவற்றையும் கலந்து ஒன்றாக இருக்க விரும்புகின்றனர். ஆனால் நம்முடைய ஸ்தானம் பங்கிடப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்குமே ஞானத்தின் வரம் கிடையாது. எல்லோருமே தீர்க்கதரிசனம் உரைப்பதில்லை. எல்லோருமே அந்நிய பாஷை பேசுவதில்லை. எல்லாருமே தீர்க்கதரிசி அல்ல. ஆனால் தேவன் உரைக்கவும், சிலரை அந்நிய பாஷைகள் பேசவும் வைத்திருக்கிறார். ஆனால் நாமோ எல்லாரும் அந்நிய பாஷைகள் பேசும்படி செய்ய முனைகிறோம். குழப்பம் எவ்விதம் உள்ளதென்று பாருங்கள் அப்படியானால் நாம் எந்த நிலையும் அடைய முடியாது. பெலிஸ்தியர் இன்னும் சிறிது காலத்தில் அவர்களை மேற்கொண்டு விடுவார்கள், நிச்சயமாக, ஆனால் ஒவ்வொரு மனிதனையும், அவர்களின் தலைவன் ஆவிக்குரிய பகுத்தறிதலின் மூலம் பிரித்து அந்த சரீரத்தில் அவர்களுக்குரிய ஸ்தானத்தில் வைக்கும் போது அவர்கள் அந்த ஸ்தானத்தில் நிலைத்திருந்து, பூமியின் சாரமாகின்றனர். தேவனே, எங்களுக்கு ஒரு யோசுவாவைத் தருவீராக! தேவனே வார்த்தையுடன் தான் பெற்ற கட்டளையில் உறுதியாய் நிலை நிற்கும் ஒரு யோசுவாவை மீண்டும் எங்களுக்கும் தந்தருளுவீராக! “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக” என்ற விதமாகத்தான் தேவன் அவனிடம் கூறினார். அவனுக்கு முன்னால் ஒரு கட்டளை 51யோசுவா எவ்வளவு பெரிய தலைவனாக மாறினான்! சபையில் தவறு நேர்ந்த போது தவிர, அவன் ஒரு யுத்தத்திலும் தோல்வியடைவில்லை. ஆகான் பொன் பாளத்தைத் திருடின போது, யோசுவாவின் நிலையோ அல்லது விசுவாசமோ அதை செய்யக் காரணமாயிருக்கவில்லை. பாளத்திலிருந்து ஒரு பாபிலோனியச் சால்வையையும் பொன் பாளத்தையும் திருடியது ஆகானே. ஆகானின் செயல் யுத்தத்தின் முழு போக்கையுமே மாற்றினது. ஒரு அவயவம் பாடுபடும்போது, எல்லா அவயவங்களுமே கூட பாடுபடும். சகோதரனே, இந்நாட்களில் ஒன்றில் தேவன் கரைதிரையற்ற சபையிடம் வரப்போகிறார். தெய்வீக அன்பினால் அவர்களுடைய இருதயங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு, ஒன்றாக நடக்கும் ஆவியின் நிறைவைப் பெற்ற சபையிடம் அவர் வரப்போகிறார். 52இந்த குழப்பமாகிய யுத்தம் ஜெயிக்கப்பட வேண்டும். மெதோடிஸ்டு சரியா, பாப்டிஸ்டு சரியா, பிரஸ்பிடேரியன் பெந்தெகொஸ்தேகாரர், நசரீன், யாத்திரீக பரிசுத்தர் இவர்களில் யார் சரி என்னும் குழப்பம். தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பது வேறுபட்ட ஸ்தாபனங்கள் உள்ளன. அவற்றுடன் புத்த மதம் இன்னும் பலவிதமானவைகள். நாம் எந்நிலையில் உள்ளோம்? எங்கோ தவறு உள்ளது. பாளயத்தில் எங்கோ பொன் பாளம் உள்ளது. யோசுவா சீட்டு போட்டான். கர்மேல் பர்வதத்தில் எலியா கூறினது போல இன்று காலையில் இதைக் கூறிட விரும்புகிறேன்: “கர்த்தரே தெய்வமானால், அவர் தேவனைப் போல் பதிலளிக்கட்டும்''. பாப்டிஸ்டு ஸ்தாபனம் கூறுவது சரியானால், இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களை இவர்கள் செய்வதை நாம் காணட்டும் நசரீன்கள் கூறுவது சரியானால், அவர் செய்த அற்புதங்களை இவர்கள் செய்வதை நாம் காணட்டும். பெந்தெகொஸ்தேகாரர் கூறுவது சரியானால் அவர் செய்த அற்புதங்களை இவர்கள் செய்வதை நாம் காணட்டும். அப்பொழுது நாம் அறிந்து கொள்வோம். 53யோசுவாவின் சீஷர்கள், “தேவன் மோசேயோடே இருந்து நடப்பித்த கிரியைகளை உம்மில் நடப்பிப்பதை நாங்கள் காணும் வரைக்கும் உம்மைப் பின்பற்றுவோம்” என்றனர். இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும் அவ்விதமே கூற வேண்டியவராய் உள்ளனர்: ''இயேசு கிறிஸ்துவின் அடையாளங்கள் உம்மில் நடப்பதை நாங்கள் காணும் போது உம்முடன் பணிபுரிவோம். அவ்விதம் நாங்கள் செய்வோம். அதைதான் நாம் செய்ய வேண்டும் அப்படித்தான் சபை சொல்ல வேண்டும். அது தான் சபையின், கிறிஸ்தவ சபையின் மனப்பான்மையாய் இருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் சபையின் வரங்களையும், அடையாளங்களையும், ஊழியர்களையும் ஓழுங்குபடுத்தலாம். அப்பொழுது ஒருவன் தெய்வீக சுகமளிக்கும் வரத்தைக் கொண்டவனாயிருந்தால். அவனுக்கும் அந்நிய பாஷைகள் பேசுபவனுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது. அவ்வாறே அந்நிய பாஷைகள் பேசுபவனுக்கும் தீர்க்கதரிசன வரமுடையவனுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது. பாருங்கள், நமக்கு இவ்வூழியத்தில் வெவ்வேறு அம்சங்கள் உள்ளன. 54இப்பொழுது, தேவன் எனக்கு ஊழியத்திற்கான கட்டளையை அளித்த போது, ''வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலின்றியே உண்டாயிருக்கின்றன“ என்னும் ஒரே நோக்கத்தின் அடிப்படையில் நான் செயல்பட்டு வருகிறேன். எந்த ஒரு மனிதனும் தனக்கு ஒரு பதவியைத் தேடிக்கொள்ள முடியாது. தேவன் மாத்திரமே தமது கிருபையினால் நீங்கள் உள்ள நிலையில் உங்களை வைத்துள்ளார். நாமே நமக்கு ஒரு பதவியைத் தேடிக் கொள்ள முடியாது. ''கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” என்று இயேசு கூறியுள்ள போது எவன் ஒருவன் கவலைப்படுகிறதினாலே தன்னை பெரியவனாகவோ அல்லது சிறியவனாகவோ செய்துகொள்ள முடியும்? உங்களால் முடியாது. தேவன் எனக்கு ஊழியத்திற்கான கட்டளையை அளித்த போது, நான் கேள்வி கேட்டேன். நான் குறைவுள்ளவன். நான் கல்வியறிவு இல்லாதவன் இவைகளை என்னால் செய்ய இயலாது என்றேன். அவர் அன்று அக்கினி ஸ்தம்பமாக நதியில் எனக்கு காட்சியளித்து என்னிடம் பேசினதைக் கண்ட உங்களில் பலர் இன்று காலையில் உயிருள்ளவர்களாய் இங்கிருக்கிறீர்கள். அவர் கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாய் யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, உன் செய்தி அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாய் அமைந்திருக்கும் என்றார். 55அது என்ன செய்துள்ளது என்று பாருங்கள். அங்கு தொங்கிய ஒளியைக் குறித்த செய்தி, செய்தித் தாள்களில் வெளியிடப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதிலும் இன்னும் மற்ற நாடுகளிலும் பரவினது. அங்கு அமர்ந்துள்ள டாக்டர் லீ வேயில், அந்நேரத்தில் கனடா நாட்டில் இருந்தார். கனடா நாட்டின் செய்தித்தாளில் அது வெளியானது அவருக்கு ஞாபகம் உள்ளது. அது கனடா நாட்டு செய்தித்தாள் என்று தான் நினைக்கிறேன். இல்லையா, லீ வேயில்? கனடா நாட்டு செய்தித்தாளில், ''உள்ளூர் போதகர் ஞானஸ்நானம் அளிக்கையில் அவருடைய தலையின் மேல் வினோதமான ஒளியின் தோற்றம்“ என்னும் தலைப்பில் அது வெளியானது. உடனே ஜனங்கள், “அது மனோதத்துவம்” என்றனர். ஆனால் ஒருநாள் தேவன் அவிசுவாசிகளின் வாயை அடைத்திடத் தீர்மானத்தார். ஏனெனில் இது வார்த்தையுடன் பொருந்தியிருந்தது. இஸ்ரவேல் புத்திரரை வழி நடத்தின அதே அக்கினி ஸ்தம்பம் இன்று காணப்பட்டு, மாம்சப் பிரகாரமான சபையை அது வழி நடத்தின விதமாகவே, ஆவிக்குரிய சபையை இன்று வழி நடத்திச் செல்கிறது. அது மறுபடியும் தோன்றினது குற்றம் கண்டுபிடிப்பவர், பரிசோதகர் ஆகியோரின் முன்னிலையில் அவர்கள் அதை புகைப்படம் எடுத்தனர். இப்பொழுது அது பிழையற்ற சத்தியமாக இங்கு தொங்கிக் கொண்டு, அதே கிரியைகளை நடப்பித்து, முன் காலத்தில் மாம்சப் பிரகாரமான சபையை அது வழிநடத்தின விதமாக, இப்பொழுது ஆவிக்குரிய விதத்தில் ஜனங்களை வழிநடத்தி, வார்த்தையின் பிரகாரம் அமைந்துள்ளது. அந்தக் கட்டளை என்னவென்று தேவன் கூறினார். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், தேவன் தம்முடைய கட்டளையிலிருந்து ஒருபோதும் விலகமாட்டார். 56இதை உங்களுக்கு ஒருவிதமாக வரைந்து காண்பிக்க விரும்புகிறேன். இதை இவ்விதம் வரைவோம். இங்கு, ஒரு சிறு அடையாளம், அது தான் கட்டளை. இங்கு ஒரு மூலையில் ஒரு சிறு சிலுவை, மற்ற மூலையில் ஒரு வேதாகமம். இதற்கிடையில் இங்கு எழுதப்பட்டுள்ளது, அது தான் கட்டளை. எனக்களிக்கப்பட்ட கட்டளை ''வியாதியஸ்தருக்கு ஜெபிப்பாயாக'' என்று தேவனுக்கு முன்பாகவும், தெரிந்து கொள்ளப்பட்ட தூதர்கள் முன்பாகவும் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் கேள்வி என்னவெனில், அதைச் செய்ய நான் ''குறைவுள்ளவன்'' அதற்கு அவர் என்னிடம், ''இந்த நோக்கத்திற்காகவே நீ பிறந்திருக்கிறாய். உன் வினோத பிறப்புக்கும் வாழ்க்கைக்கும் காரணம் இதுவே. நீ வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். அவர்கள் உன்னை நம்பும்படி செய்து, நீ உத்தமமாக ஜெபித்தால் ஒன்றுமே உன் ஜெபத்திற்கு முன்னால் நிற்காது, புற்று நோயும் கூட'' என்றார். இத்தனை ஆண்டுகளாக எத்தனை பேர் செய்தித் தாள்களில் இதைக் குறித்து படித்திருக்கிறீர்கள்? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி) அது உலகம் முழுவதும் பரவியுள்ளது. 57நான், அவரிடம், ''என்னால் அதைச் செய்ய இயலாது, ஏனெனில் இதைச் செய்வதற்கு நான் குறைவுள்ளவன். அவர்கள் என்னை நம்பமாட்டார்கள். நான் ஏழை, கல்வி கற்காதவன்'' என்றேன். இது நான் கேட்ட கேள்வி. அவர், “மோசே தன் கட்டளையை உறுதிப்படுத்த அவனுக்கு இரண்டு அடையாளங்கள் அளிக்கப்பட்டன. அதைக் போலவே உனக்கும் - ”அளிக்கப்படும்'' என்றல்ல - இரண்டு அடையாளங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் ஒன்று உன் கரத்தின் மூலம். மற்றது, அவர்களுடைய இருதயங்களின் இரகசியங்களை, மனதிலுள்ள சிந்தனைகளை அறிந்து கொள்வது. இந்த இரண்டு அடையாளங்களையும் கண்டு அவர்கள் விசுவாசிப்பார்கள்'' என்றார். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள் கவனியுங்கள், இதை அறிந்து கொள்ளத் தவறாதீர்கள் அடையாளம் கட்டளையல்ல, அது அந்தக் கட்டளையை சுட்டிக் காட்டுகின்றது. நீங்கள் சாலையில் செல்லும் போது, 'ஜெபர்ஸன்வில்லுக்கு இன்னும் ஐந்து மைல்கள்' என்னும் வழிகாட்டி அடையாளத்தைக் காண்கிறீர்கள். அது ஜெபர்ஸ்ன்வில் அல்ல. நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டும் அடையாளமே அது. அது ஒருவேளை இப்படியாக 58மோசே எகிப்துக்குச் சென்றபோது அவனுக்கு கோலைக் கொண்டும் தன் கரத்தைக் கொண்டும் அடையாளம் இருந்தது. அது மோசே பெற்றிருந்த அடையாளமேயன்றி அவன் பெற்றிருந்த கட்டளையல்ல. இஸ்ரவேலர் அனைவரும், எகிப்தியரே, இஸ்ரவேல் அனைவரே, “இங்கு வாருங்கள். தன் கையினால் ஒரு ஜால வித்தையை செய்யக்கூடிய ஒரு மனிதன் எங்களுக்கு இருக்கிறான். நீங்கள் அதைக் காணவேண்டும். ஒரு கோலை எடுத்து அதை சர்ப்பமாக மாற்றும் ஒரு மனிதன் எங்களுக்கு இருக்கிறான். வந்து பாருங்கள்'' என்று சொல்லியிருந்தால் - அது வழிகாட்டிக் கம்பம் (sign post) மாத்திரமே. அது கட்டளை அல்ல. அவர்கள் ஒரு வழிகாட்டி கம்பத்துக்காக காத்திருக்கவில்லை. தேவனே எங்களுக்கு உதவி செய்யும். அவர்கள் மீட்கப்படுவதற்காக காத்திருந்தனர். இந்த ஏழை, நோயுற்ற முடமான உலகமும் மீட்புக்காக காத்திருந்து, வழிக்காட்டிக் கம்பத்தை நோக்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும் வழிகாட்டிக் கம்பம் கட்டளையை நிரூபிக்கும் அடையாளமேயன்றி வேறல்ல. ஒரு புது ஊழியம் உள்ளது. அது இப்பொழுதுதான் எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. அதாவது “வியாதியஸ்தருக்காக ஜெபித்து, ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய். தேவன் அதை விட்டு விலகமுடியாது. அது அவருடைய கட்டளை”, என்ன நடந்து கொண்டிருந்தாலும். எவ்வளவுதான் நான் தவறினாலும் சரி. நான் பயங்கரமாகத் தவறுகிறேன். நான் அந்த அடையாளங்களை உபயோகித்திருக்கக் கூடாது. அது தேவனுடைய சித்தமாயிருக்கவில்லை. எனினும் தேவன் அதை ஆசீர்வதித்தார். ஆனால் நான் இந்த மலையை விட்டுச் செல்ல ஆயத்தமாயிருக்கிறேன். நான் யோர்தானைக் கடக்க விரும்புகிறேன். ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படிச் செய் என்னும் கட்டளையை நிறைவேற்ற நான் விரும்புகிறேன். நான், “அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்” என்றேன். அவர், “இரண்டு அடையாளங்கள் அதனுடன் அளிக்கப்படும்'' என்றார். 59தொல்லை என்னவெனில், நாம் அடையாளத்தை நோக்கிக் கொண்டு இருந்து விட்டோம். “ஓ,சகோ. பிரன்ஹாமே, உமது கரத்தை அவர் மேல், வையும்'', “ஓ, என்ன நடக்கிறதென்று நீங்கள் காண வேண்டும். அவர் மேல் அபிஷேகம் தங்கியிருக்கும் போது, அவருக்கு முன்னால் நின்று பாருங்கள். அவர் உங்கள் இருதயத்திலுள்ள அனைத்தையும் உங்களிடம் கூறுவார்''. அது உண்மை. அன்றொரு நாள் இங்குள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அந்த ஸ்திரீக்கு இருந்த கோளாறு என்னவென்று அங்கிருந்த மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை மருத்துவர்கள் அறையை விட்டுச் சென்ற பிறகு. அந்த ஸ்திரீ எழுந்து படுக்கையினருகில் நின்று. அவள், “எனக்குள்ள கோளாறு என்னவென்று அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டனர். ஆனால் சகோ. பிரன்ஹாமே உங்களால் முடியும்'' என்றாள். அதற்கு நான், “நீ என்னை விசுவாசித்தால், என்னால் ஆகும்'' என்றேன். அவள், ''நான் விசுவாசிக்கிறேன்“ என்றாள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், ''இன்னின்னது அவளுடைய கோளாறு. அதுதான், முற்றிலுமாக அதுதானா இல்லையா என்பதை அறிந்து கொள்'' என்றார். அவள் ஜுனி காஷ் என்பவரின் சபையைச் சேர்ந்தவள். 60வேறொரு ஸ்திரீ, “என் முதுகில் ஏன் இந்த கோளாறு ஏற்பட்டது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றாள். நான், “நான் அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன். அவள், “நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். நான், ''என்ன நடந்ததென்றால், ஜூன் மாதம் தொடக்கத்தில் நீ... அவர்கள் உனக்கு முதுகெலும்புத் தொடரிலுள்ள எலும்பு அதன் நிலையிலிருந்து தள்ளி வந்து விட்டதாகவும் (slipped vertebra), அறுவை சிகிச்சை செய்து அதை சரிபடுத்த வேண்டும் என்றும் முயற்சிக்கின்றனர். அது அப்படியல்ல. அது வெளியே தள்ளி வந்த நரம்பு. நீ மக்ஸ்பாடியின் அங்காடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பளு தூக்கினதால் விளைந்தது“ என்றேன். அவள், ''நான் எப்பொழுது பளு தூக்கினேன் என்பது இப்பொழுது என் ஞாபகத்துக்கு வருகிறது'' என்றாள். அது அவளை சுகப்படுத்தவில்லை. அது கட்டளையை மாத்திரம் சுட்டிக் காட்டினது. வழிக்காட்டி கம்பத்தின் மேல் சாய்ந்து கொண்டிருப்பதை விட்டு விட்டு, நகரத்துக்குச் செல்வோம். இந்த மலையை விட்டு விலகி நகரத்தை அடைவோம். யோர்தானைக் கடப்போம்! 61நான் தவறிழைத்து விட்டேன். நான் தவறு செய்து விட்டேன். ஆகவே தான் இந்த பிரசங்கங்களை இவ்விதம் இந்த அடிப்படையில் அளிக்கிறேன். ஏனெனில் அவர், ''நான் மோசேயோடே இருந்தது போல், உன்னோடும் இருப்பேன்“ என்றார். அந்தக் கரம் இறங்கி வந்த போதும் அதே வசனத்தைச் சுட்டிக் காட்டினது. எனக்களிக்கப்பட்ட கட்டளை என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆகவே நீண்ட நாட்களாக இதைக் குறித்து வியந்து கொண்டிருந்தேன். இதைவிட இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றை நான் எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். தேவன் அவர் அளித்த கட்டளையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. தேவன் கட்டளையை அளிப்பாரானால், அது அவ்விதமாகவே இருந்தாகவேண்டும். ஆனால் பெந்தெகொஸ்தே ஜனங்கள் அனைவரும் அடையாளங்களையே விரும்புகின்றனர். அவர்கள் அதைக் காண விரும்புகின்றனர். “இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்” என்று வேதம் உரைக்கிறது. ஆனால் “வியாதியஸ்தருக்காக ஜெபி” என்பதே எனக்களிக்கப்பட்ட கட்டளை. ஆனால் அவர்கள் எல்லோரும் அடையாளத்தை விரும்பினர் என்ற காரணத்தால், பல்லாயிரக்கணக்கான நேரங்களில் நான் ஜெபம் செய்யத் தவறி விட்டேன். அவர்கள் எல்லோரும் அதையே விரும்புகின்றனர். 62அன்றொரு நாள், வியாதியஸ்தருக்கு ஜெபிக்கும் என் ஊழியத்தில் ஈடுபடும் பொருட்டு அவர்களை அறைக்கு அழைத்து சென்றேன். அப்பொழுது ஒரு மனிதன் மேடைக்கு வந்து, ''சகோ. பிரன்ஹாமே, ஒரு நிமிடம் பொறும். என் நிலை வித்தியாசமானது. நான் ஒன்றை அறிந்தே ஆக வேண்டும்'' என்றார். நான் ''நல்லது மருத்துவர் உங்களைப் பரிசோதனை செய்யலாமே'' என்றேன். அவர், ''ஓ, அது எனக்கு வேண்டாம், நான் இப்பொழுதே அறிந்தாக வேண்டும். என் நிலை மிகவும் வித்தியாசமானது“ என்றார். நான், “சகோதரனே, அதைச் செய்ய எனக்குப் பிரியமில்லை'' என்று சொல்லி விட்டு பகுத்தறிய முற்பட்ட போது, முதலாவதாக என்ன தெரியுமா, பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தினார். அவர், ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அது உண்மை'' என்றார். நான் மற்றவர் இப்பொழுது வாருங்கள், “உங்களுக்கு ஜெபிக்கப் போகிறேன்” என்றேன். நான் அவ்விதம் பகுத்தறிந்து கூறின போது, அடுத்தவர் என்ன சொன்னார் தெரியுமா? ''என் விஷயமும் அவரைப் போலவே முக்கியமானது என்றார். இப்படியாக ஆறு அல்லது எட்டு பேருக்கு பகுத்தறிந்து விட்டு, கூட்டத்தை முடித்துவிட்டேன். அது என்னை கொன்றுவிடும் போன்ற உணர்ச்ச்சி எனக்கு ஏற்பட்டது. எனக்கு ஏன் அத்தகைய உணர்ச்சி ஏற்படுகிறது என்று நான் எப்பொழுதுமே வியந்ததுண்டு. ஏனெனில் நான் தவறுசெய்து வந்தேன். அது கட்டளையைச் சுட்டிக் காண்பிக்கும் வழிக்காட்டிக் கம்பம். அது கட்டளையல்ல. அந்த வழிக்காட்டிக் கம்பம் உலகம் முழுவதிலும் நடப்பட்டுவிட்டது. வெவ்வேறு மொழிகளில் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசியா, ஐரோப்பா, உலகம் முழுவதிலும், கோடிக்கணக்கான மக்கள் இந்த வழிகாட்டும் கம்பத்தைக் குறித்து அறிந்துள்ளனர். (சகோ. பிரன்ஹாம் பலமுறை பிரசங்க பீடத்தைத் தட்டுகிறார்- ஆசி ) நான் இந்த மலையை விட்டுச் செல்ல ஆயத்தமாயிருக்கிறேன். நான் சென்று யோர்தானைக் கடக்க விரும்புகிறேன். நான் அப்பாலுள்ள ஒன்றுக்குள் பிரவேசித்து நான் ஜனங்களுக்கு ஜெபிக்கும்போது அவர்கள் குணமடைவார்கள் என்னும் நிலைக்கு என் விசுவாசம் உயர வேண்டுமென்று விரும்புகிறேன். 63கவனியுங்கள், தேவன் மீண்டுமாக அதை ஜனங்களின் மடியில் வைக்கிறார். ''நீ வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் பிறந்ததிருக்கிறாய். நீ அவர்கள் விசுவாசிக்கும்படி செய்தால்...“ நான், “அவர்கள் விசுவாசிக்கமாட்டார்கள்'' என்றேன். அவர், “உனக்கு இரண்டு அடையாளங்களை அளிக்கிறேன். அதன் மூலம் அவர்கள் உன்னை விசுவாசிப்பார்கள்'' என்றார். கவனியுங்கள், அவர்கள் நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க அனுப்பப்பட்டேன் என்று விசுவாசித்து கட்டளையை ஆதரிப்பதற்கு பதிலாக, வழிக்காட்டி கம்பங்களை ஆதரிக்க முற்பட்டனர். ஜெபித்துக் கொள்வதற்காக ஜனங்கள் ஜெப வரிசையில் வரும் போது, ஒருவர் விசுவாசிக்கும் நிலையை முற்றிலுமாக அடையும்போது... அவர்கள் அந்நிலையை அடையும் வரைக்கும் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் அந்நிலையை அடையும்போது நான், “உனக்களிக்கிறேன்...'' என்கிறேன். 64ஹாட்டி ரைட் இன்று காலை இங்கிருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவள் அங்கு அமர்ந்திருக்கிறாள். நாங்கள் சிருஷ்டிக்கப்பட்ட அந்த அணில்களைக் கண்டபோது அவள்தான் முதலாவதாக அவள் அதைக் குறித்த கட்டளையையும் எப்பொழுதெல்லாம் ஏழு முறையாக தேவன் ஒன்றை சிருஷ்டித்து கொடுத்ததையும் அவள் அறிந்திருந்தாள். நான், ''ஆபிரகாமுக்கு தான் பெற்ற கட்டளையை உறுதிப்படுத்த ஒரு ஆட்டுக்கடாவை சிருஷ்டித்த அதே தேவன் தான் அணிலையும் சிருஷ்டித்தார். ஏனெனில் அது தான் எனக்குத் தேவையாயிருந்தது'' என்றேன். இப்பொழுது அங்கே கட்டிடத்தின் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஹாட்டி ரைட். அவளுடைய இருதயம் உலகின் காரியங்களுக்கு அப்பாற்பட்டதாய், நான் கூறினதை அவள் விசுவாசித்து, ''சகோ. பிரன்ஹாமே, அது உண்மையன்றி வேறல்ல'' என்றாள். அவள் உதடுகளினால் அதைக் கூறவில்லை. தேவன் அவளுடைய இதயத்திலிருந்து பேசினார். நான், “ஹாட்டி, நீ என்ன வேண்டுமானாலும் கேள். அதை நான் உனக்கு அளிக்கிறேன்” என்றேன். அவள், “நான் என்ன கேட்கவேண்டும்? என்றாள் நான், “உன் வயதான பெற்றோர் இங்கே அமர்ந்துள்ளனர். உனக்கு ஊனமுற்ற சகோதரி ஒருத்தியும் இருக்கிறாள் அவள் இன்னும் அந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். அவள் குணமடைய வேண்டுமென்று நீ கேட்கலாம். அல்லது உன் பெற்றோருக்காக கேட்கலாம். நீ ஏழ்மையாய் இருக்கிறாய். உனக்குப் பணமில்லை. உனக்கு விருப்பமானதைக் கேள்” என்றேன். அவள், “நல்லது, என்ன கேட்பதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் மிகப்பெரிய வாஞ்சை, என் இரண்டு பையன்களின் இரட்சிப்பே'' என்றாள். நான், “உன் இரண்டு பையன்களையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உனக்குத் தருகிறேன்” என்றேன். அவர்கள் இருவரும் மனமாற்றம் அடைந்து, கர்த்தராகிய இயேசுவை நேசித்து, அவருடைய நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, தினமும் முழு இருதயத்தோடு தேவனுக்கு ஊழியம் செய்து வருகின்றனர். 65இங்கு எங்கோஅமர்ந்துள்ள எட் டால்டன் பிள்ளைகளுக்கும் அவ்விதமே சம்பவித்தது. அவர் இங்கு அமர்ந்துள்ளார். ஒரு கூட்டத்தில் குறைந்த பட்சம் எண்ணூறு அல்லது தொள்ளாயிரம் பேர் - அது ஒரு வேளை ஆயிரம் பேர் கூட இருக்கலாம். ஒருவர் பின் ஒருவராக மேடையைக் கடந்து செல்வதை நான் கண்டேன். முதலாவதாக என்ன தெரியுமா... நான் சென்று அவர்களுக்காக ஜெபித்தேன். நிச்சயமாக அவர்கள் குணமடைந்தனர். அப்பொழுது புற்று நோயால் மரித்துக் கொண்டிருந்த ஒரு சிறு பெண் வந்தாள். அவளுக்கிருந்த கோளாறை நான் அறிந்துகொண்டேன். நான் யாரிடமும் ஒன்றும் கூறவில்லை. அந்த பெண் அங்கு வந்தபோது, நான் அவளிடம், ''தேனே, உன் இருதயத்தின் வாஞ்சையை உனக்களிக்கிறேன். உனக்கு இரத்தப்புற்று நோய் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உன் சுகத்தை உனக்களிக்கிறேன்'' என்று கூறிவிட்டு, அங்கு கூடியிருந்த மக்கள் பக்கம் திரும்பி, “இங்குள்ள உங்களுக்கு இதை சவாலாகக் கூறுகிறேன். இவளை எந்த மருத்துவரிடத்திலாவது அழைத்துச் சென்று, ஒரு துளி இரத்தப் புற்றுநோய் உண்டா என்று பரிசோதித்துப் பாருங்கள்'' என்றேன். ஏன்? அந்த சிறுமி, ராகாப் வேசியைப் போல் கேள்விப்பட்டு, தன் முழு இருதயத்தோடும் அதை விசுவாசித்தாள். அப்பொழுது தேவன், அவருடைய ஆவியின் மூலம் அசைவாடி, ''அது அவள்தான் என்றார். நூற்றுக்கணக்கானோர் (எனக்குத் தெரிந்த வரையில்) ஒன்றுமே பெறாமல் மேடையைக் கடந்து சென்றனர். நாள் அவர்களுக்கு ஜெபிக்க மாத்திரம் செய்தேன். 66அது மறுபடியும், “நீ விசுவாசித்தால் என்று மக்களின் உத்திரவாதமாகிவிட்டது. கட்டளை கொடுக்கப்பட்டது. அதுதான் மூலக்கட்டளை. வழிக்காட்டிக் கம்பம் காண்பிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் அதை விசுவாசித்தால், அதாவது வியாதியஸ்தருக்கு ஜெபிக்க தேவன் என்னை உலகத்திற்கு அனுப்பினால் நான் விசுவாசமுள்ள ஜெபத்தை ஏறெடுக்க முடியும். அது இவ்வழியில் மாத்திரமே ஏறெடுக்கப்பட முடியும். தேவன் தமது கட்டளையிலிருந்து ஒருபோதும் விலக முடியாது. அவருக்கு நான் தவறிழைத்திருக்கிறேன். ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகளாக நான் உலக முழுவதும் நேரடியான பகுத்தறிதலைத் தவிர வேறொன்றையும் உபயோகிக்காமல். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு - அது லட்சக்கணக்கானோராக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன் - பகுத்தறிந்து கூறி வந்திருக்கிறேன். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அது ஒரு முறையாவது தவறாக இருந்துள்ளதா? இல்லை, ஐயா. வழிக்காட்டிக் கம்பமே தவறாதெனில், அளிக்கப்பட்ட கட்டளை எவ்வளவு அதிகம் தவறாததாயிருக்கும் அடையாளம் ஒரு சிறு பாகம், நகரத்தைச் சுட்டிக் காட்டும் அடையாளமே, நகரம் எங்கேயுள்ளது என்பதை உங்களுக்கு தவறாமல் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் அங்கு அடையும்போது, அந்த நகரம் அங்கு எவ்வளவு நிச்சயமாக இருக்கும் அது தான் கட்டளை. 67இப்பொழுது என் ஊழியம் மாறிக்கொண்டு வருகிறது. அது ஏற்கனவே மாறிவிட்டது. பகுத்தறிந்து கூறுதல் தொடர்ந்து இருக்கும். அவர்களிடம் நான் பகுத்தறிந்து கூறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்னும் உணர்ச்சி எனக்கு இருப்பதனால், அவர்கள் தொடர்ந்து அவ்விதமே இருப்பார்கள். அது எடுபடும் வரைக்கும், அவர் எனக்குக் கட்டளையிட்டபடி, நான் வியாதியஸ்தரின் மேல் கைகளை வைத்து ஜெபித்து, எனக்குண்டான கட்டளையை நிறைவேற்றுவேன். இதற்காக நான் நீண்ட காலம் காத்திருந்து வந்திருக்கிறேன். இப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்க நாம் ஆயத்தமாயிருக்கிறோம். அங்கு சில ராகாப்கள் நிச்சயமாக காத்திருப்பார்கள். தங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கும் சிலர் அங்கு காத்திருப்பார்கள். உங்களுக்குப் புரிகிறதா? நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் கரங்களையுயர்த்துங்கள் (சபையோர் 'ஆமென்' என்கின்றனர்- ஆசி). அது வேதப்பூர்வமானது என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? ('ஆமென்'). அவர் அப்படித்தான் என்னிடம் கூறினார். இதுதான் அளிக்கப்பட்ட கட்டளை. இவை கட்டளையை சுட்டிக்காட்டும் வழிக்காட்டிக் கம்பங்கள். 68அவர் மேடையின் மீது அல்லது தரிசனத்தில் கூறியவை ஒரு முறையாவது தவறாக இருந்ததென்று கூறும்படிக்கு நான் எவருக்கும், இந்த ஒலிநாடாக்கள் செல்லும் உலகின் எந்த பாகத்தில் உள்ளவர்களுக்கும் சவால் விடுகிறேன். அவர் சரியானதையே கூறி வந்திருக்கிறார். அவர் கூறினது அவ்விதமே நிறைவேறி வந்துள்ளது. அவர் ஒவ்வொரு நபருக்கும், அவர்களுடைய கோளாறு என்னவென்றும் அதைக்குறித்து எல்லாவற்றையும், அவர்கள் எங்கிருந்து வந்தனர், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உரைத்தார். குணமாக்கும் விஷயத்தில் கர்த்தர் உரைக்கிறதாவது என்று உரைக்கப்பட்ட ஒவ்வொரு முறையும். அது அவ்விதமே நிறைவேறினது. அது நிறைவேறாத ஒரு சம்பவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்களானால் அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் மீண்டும் ஒலிநாடாவைப் போட்டுக்கேட்டு அதைக் கண்டுபிடிக்கிறேன். ஆனால் இந்த பன்னிரண்டு ஆண்டு காலமாக, இல்லை பதினான்கு ஆண்டு காலமாக, அது ஒருபோதும் தவறினதில்லை. ஏனெனில் அது தவறமுடியாது. அந்த அடையாளம் தேவனால் அளிக்கப்பட்டது. எனவே அது தவற முடியாது. தேவன் அடையாளத்தைக் கொடுப்பதற்கு முன்பே. ஊழியத்துக்கான கட்டளையை அளித்தார் - கட்டளையைச் சுட்டிக் காட்டும் அடையாளம் இருப்பதற்கு முன்பே. ஒரு நகரத்தை சுட்டிக் காட்டும் அடையாளம் இருப்பதற்கு முன்பே, அதைச் சுட்டிக்காட்ட அந்த நகரம் இருந்தாக வேண்டும். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அதைப் பெற்றுக் கொள்வீர்கள். “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்''. 69இந்த வழிக்காட்டிக் கம்பத்தின் மீது நானே அதிகமாய் சார்ந்திருக்கிறேன். கர்த்தாவே, “இவர்களுக்கு நான் ஜெபிப்பதற்கு முன்பு இதைக் குறித்து எனக்குக் காண்பியும். இல்லையென்றால் என்ன செய்வதென்று எனக்குத் தெரியாது'' என்று நான் முறையிடுவதுண்டு. அது எவ்வளவு கொடுமையானது. இதற்காக சபையாரிடம் நான் மன்னிப்பைக் கோருகிறேன். இந்த ஒலிநாடாவைக் கேட்கும் உலகெங்கிலுமுள்ள சபையோர்களே, என்னை மன்னியுங்கள். நான் தவறு செய்துவிட்டேன். நான் அவ்விதம் செய்திருக்கக் கூடாது. முதலாவதாக அது அவருடைய கட்டளையல்ல. அது கட்டளையை சுட்டிக் காட்டும் அடையாளம். நான் எங்குமுள்ள வியாதியஸ்தருக்காக ஜெபித்திருக்க வேண்டும். இப்பொழுது, பாருங்கள், அது மறுபடியும் ஜனங்களின் மடிக்கு வந்துவிட்டது - தேவன் இதைச் செய்யக் கட்டளை அளித்தார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால் இதோ அது வார்த்தையில் உள்ளது. அந்தக் கட்டளை வார்த்தையில் உள்ளது, அந்தக் கட்டளை வார்த்தையுடன் முற்றிலும் பொருந்துகிறது. நான் கூறுவது என்னவெனில்... 70என் விரலினால் இங்கு இதை வரைகிறேன்; ஒரு வில் வானவில். அது தேவன் ஜனங்களுடன் செய்த உடன்படிக்கை. அவர் தண்ணீரினால் இனிமேல் உலகத்தை அழிப்பதில்லையென்று மனித குலத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டார். அவர் அப்போஸ்தலர் ஒவ்வொருவடனும் உடன்படிக்கை செய்து கொண்டார். அவர் தீர்க்கதரிசியுடன் உடன்படிக்கை செய்துகொண்டார். ஏறக்குறைய பதினான்கு, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு (1937ம் ஆண்டில், மே7, 1937 என்று நினைக்கிறேன்). தேவன் என்னுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு, “நீ வியாதியஸ்தருக்கு ஜெபிக்க இவ்வுலகில் பிறந்திருக்கிறாய். அவர்கள் மாத்திரம் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால் என்றார். என் இருதயதம் எப்பொழுதுமே மக்களுக்காகவே. ''அவர்கள் மாத்திரம் உன்னை விசுவாசிக்கும்படி, செய்து, நீ உத்தமத்துடன் ஜெபித்தால், ஒன்றுமே உன் ஜெபத்திற்கு முன்னால் நிற்க முடியாது'' என்றார். இதை நான் உத்தமத்தோடும் வெட்க முகத்தோடும் கூறுகிறேன். யாருக்காகிலும் விசுவாசம் இருக்க வேண்டுமானால் அது எனக்கே. அவர் செய்த மகத்தான செயல்களை நான் கண்டிருக்கிறேன். அவர் என்னைக் கழிவிலிருந்து தூக்கியெடுத்து, என்னை உருவாக்கி, என் வாழ்க்கையில் செய்தவைகளைக் காணும் போது; நான் நின்று கொண்டு ஏதாவெதான்றைக் கூறும்போது, தேவன் அங்கு பிரசன்னமாகி, அது உண்மையென்று உறுதிப்படுத்தி வந்திருக்கிறார். 71அநேக ஆண்டுகளுக்கு முன்பு, தூதன் ஒருவன் ஒரு புதரில் எனக்கு காட்சியளித்ததை நான் உங்களிடம் கூறியுள்ளேன். நான் மூன்று வயது சிறுவனாக இருந்தபோது, ஒரு ஒளி, சுழற்காற்று, புதரில் சுழன்று வந்து, நான், ''புகை பிடிக்கவோ, மது அருந்தவோ, அல்லது வேறெந்த தீய காரியங்களையும் செய்யக்கூடாது என்றும். நான் வளர்ந்து பெரியவனாகும்போது, நான் செய்வதற்கு ஒரு ஊழியம் உள்ளதென்று உரைத்தது. அதை சந்தேகிக்க உங்களுக்கு உரிமை இருந்தது. உங்களுக்கு உரிமையில்லை, ஆனால் நீங்கள் அதை சந்தேகித்திருக்க வகையுண்டு. அன்று அவர் அந்த நதியின் மேல் இறங்கிவந்து அவர் ஒளியாக எனக்கு காட்சியளித்ததை நிரூபித்தார். இங்கு அமர்ந்துள்ள பலர், இது சம்பவித்த போது அங்கு நின்று கொண்டிருந்தார்கள். அது உண்மையென்று உங்களில் பலர் அறிந்திருக்கிறீர்கள். அப்பொழுது எனக்கு கட்டளை அளிக்கப்பட்டது. உங்களில் பலருக்கு ஞாபகமிருக்கும். அவர், “நீ புறப்படு, இந்த ஊழியம் உலகெங்கிலும் சென்று ஒரு எழுப்புதலைப் பிறப்பிக்கும்'' என்றார். அன்று முதல் வரலாறு காணாத ஒரு எழுப்புதல் உண்டானது. அந்த எழுப்புதல் இப்பொழுது உலகெங்கிலும் தொடர்ந்து நீடிக்கிறது. மகத்தான சுகமளிக்கும் கூட்டங்கள் உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகின்றன. 72இது சுண்டெலியான என் மூலம் தொடங்கினது. அங்கு அமர்ந்துள்ள என் தாயையும், மரித்துப்போன என் தந்தையையும் - அவருடைய சவ அடக்கத்தின் போது இந்த பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கம் ஏறெடுக்கப்பட்டது - அவமானப்படுத்த இதை நான் கூறவில்லை. நான் ஒரு பயங்கரமான குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்டேன். அதை நீங்கள் அறிவீர்கள். என் தந்தை குடிகாரராக இருந்தார். தேவன் ஒரு குடிகாரனின் மகனாகிய என்னை தெரிந்து கொண்டு, தமது இரத்தத்தால் என்னைக் கழுவினார். நான் கீழேயுள்ள பட்டினத்துக்குச் சென்று யாரிடமாவது பேசினால், பேசுவதற்கு அந்த மனிதனுக்கு யாரும் இல்லாத பட்சத்தில் மாத்திரமே, அவன் என்னுடன் பேசுவான். என்னிடம் வருபவர், அது யாராயிருந்தாலும், நான் ஒரு குடிகாரனின் மகன் என்னும் காரணத்தால், திரும்பிப் போய்விடுவார்கள். அது உண்மையென்று என் சபையிலுள்ள உங்களில் பலர் அறிந்திருக்கிறீர்கள். எனக்கிருந்த கெட்ட பெயரைப் போல்... நான் ஒரு மிருகத்தைப் போல் கருதப்பட்டேன். ஒருமுறை பட்டினத்திலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்த ஒருவரிடம், ''அப்படிப்பட்ட ஒன்றுக்கும் உதவாத குப்பையோடு நீங்கள் எப்படி தொடர்பு கொள்ளலாம்?'' என்று கேட்கப்பட்டது. ஓ, தேவனே, தொடர்ந்து சொல்ல எனக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைத் தவிர வேறென்ன இருந்தது எனக்குப் படிப்பு கிடையாது. எனக்கு கவரத்தக்க தோற்றம் கிடையாது. எனக்கு ஒன்றுமே கிடையாது. 73அண்மையில் என் மனைவியிடம் நான், “எவருமே என்னுடன் பேச விரும்பாத நாட்களில் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப்பார். நான் ஜனங்களை நேசிக்கிறேன். ஆனால் அவர்களோ எனக்கு செவிகொடுக்க மறுக்கின்றனர்” என்றேன். நான் பள்ளிக்குச் சென்றபோது படித்த ஒரு புத்தகம் என் நினைவுக்கு வருகிறது... அன்று என் பிள்ளைகளை நான் பள்ளிக்கு அனுப்பினேன். அவர்களுக்கு புத்தகங்களையும் தேவையான மற்றவைகளையும் வாங்கித் தர என்னால் முடிகிறது. இதற்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பள்ளிக்கு காலணிகள் இல்லாமல் சென்றேன். என் தலை மயிர் கழுத்து வரைக்கும் தொங்கிக் கொண்டிருந்தது. அணிந்து கொள்ள துணிகள் கிடையாது. ஒரு பழைய 'கோட்' மட்டுமே. அதனுள்ளே ஷர்ட் கிடையாது. எழுதுவதற்கு பென்சிலோ, காகிதமோ இல்லை. கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த சில கணக்குகளை எழுதிக்கொள்ள, ஒரு மலிவான பென்சிலையும், ஒரு காகிதத் துண்டையும் நான் திருட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என்னிடம் ஒன்றுமேயில்லை. நான் செய்தது தவறு. 74பள்ளியில் ஒரு புத்தகத்தைப் படித்தேன். அந்த சம்பவம் என் நினைவில் உள்ளது. அதாவது, ஆபிரகாம் லிங்கன் ஒரு சமயம் கப்பலை விட்டு இறங்கினார். அவர் நியூ ஆர்லியன்ஸில் இறங்கினார் என்று நினைக்கிறேன். அங்கே இரவு முழுவதும் ஒரு கிழப் பசு படுத்துக்கொண்டிருந்த பனி பெய்திருந்த புல் தரையில் சில நீக்ரோ பிள்ளைகள் வெறும் கால்களுடன் நின்று கொண்டிருப்பதை அவர் கண்டார். அவர் அந்த பிள்ளைகள் அங்கு நின்று கொண்டு, “உனக்கு காலணிகள் உண்டு, எனக்கு காலணிகள் உண்டு, தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் காலணிகள் உண்டு என்னும் பாடலைப் பாடிப் கொண்டிருந்தனர்”. அவர் கப்பலை விட்டு இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தார். மாட்டுத் தொழுவத்தில் ஒரு பெரிய உருவம் கொண்ட, ஆரோக்கியமான கறுப்பு மனிதன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய மனைவி குழந்தையை கையிலேந்திக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள். பெரிய உருவம் படைத்த ஸ்திரீகளுடன் அவன் உடலுறவு கொண்டு பெரிய உருவம் கொண்ட அடிமைகளைப் பிறப்பிக்கக் கருதி அவர்கள் அவனை ஏலம் விட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட லிங்கன் தன் கைகளை இறுக இப்படி மூடி, அவைகளை ஒன்றோடொன்று முட்டி, “இது தவறு. என் உயிர் போனாலும் சரி, இதை எப்படியாவது அடித்து வீழ்த்துவேன்” என்றார். அது அவர் உயிரைக் குடித்தது. ஆனால் அவர் அதை அடித்து வீழ்த்தி கொன்று போட்டார். 75நான், ''மது அருந்துதல், தவறான வாழ்க்கை வாழ்தல் அனைத்துமே தவறு. என்றாகிலும் ஒருநாள், இதை அடித்து வீழ்த்துவேன் என்றேன். மோசமான பெயரைக் கொண்டிருந்த நான் இதை எப்படி அடித்து வீழ்த்த முடியும்? யாருமே என்னுடன் பேச மறுத்தனர். ஆகையால் தான் நான் பெற்ற கட்டளையைக் குறித்து எனக்கு சந்தேகம் தோன்றினது. யாருமே எனக்காக கவலைப்படவில்லை. இங்குள்ள என் குடும்பத்தினரைத் தவிர ஒருவராவது எனக்கு இருக்கவில்லை. ஆனால் தேவ கிருபையினால், என் குடும்பத்தை விட்டு நான் செல்ல வேண்டியதாயுள்ளது, என்னால் இங்கு தங்க முடிவதில்லை, ஏனெனில் உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்கள் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர். எல்லா வகையான மனிதர், அரசாளுபவர், ராஜாக்கள், சக்கரவர்த்திகள், பெரிய மனிதர், வர்த்தகர்கள், மந்திரிகள், உலகம் பூராவிலுமிருந்து ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு இரவும் அழைப்பு, அழைப்பு, அழைப்பு விடுத்துக் கொண்டேயுள்ளனர். அதைச் செய்தது எது? என் ஆத்துமாவை சுத்திகரித்த இயேசு கிறிஸ்துவின் இரத்தம். ஆபிரகாம் லிங்கனின் இரத்தம் கறுப்பு மனிதனின் அடிமை விலங்கை தகர்த்தெறிந்தது போல், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவம் என்னும் விலங்கை என்னிடமிருந்து அகற்றி, மிருகத்தை அவருடைய கிருபையினால் அவருடைய குமாரன் என்னும் பெயரைத் தரித்துக் கொள்ளும்படி செய்தது. 76இன்று காலை நான் யோர்தான் செல்ல ஆயத்தமாயிருக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட கட்டளையில் நான் உறுதியாய் நிற்க ஆயத்தமாயிருக்கிறேன். நான் மக்களை நேசித்து வந்தேன், அவர்களுக்காக உழைத்து வந்தேன். அவர் தரிசனத்தின் மேல் தரிசனத்தில் என்னை சந்தித்தார். அவை அனைத்தையும் கூற எனக்கு நேரமில்லை . அவர், ''நீ ஜனங்களுக்காக அதிகம் உழைக்கிறாய். என்னுடன் நடக்க வேண்டுமானால், நீ தனிமையில் நடக்க வேண்டும். இந்த அடையாளங்களுக்கு நீ அதிக முக்கியத்துவம் அளிக்கிறாய் என்றுரைத்தது இந்தப் புத்தகங்களின் பின்னால் எழுதி வைக்கப்பட்டுள்ளதென்று உங்களுக்குத் தெரியும். அவர் இன்னும் வேறென்ன கூறினார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த நேரம் வந்துவிட்டது. அந்த கரம் இறங்கி வந்து யோசுவாவின் புத்தகத்தில் காணப்படும், “நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்” என்னும் வசனத்தில் நின்றது. ஆகவே அந்த நேரம் வந்துவிட்டது. அதை இன்று காலையில் நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது முதல், இந்த நாள் முதற்கொண்டு என் கட்டளைக்குக் கீழ்படிந்து தேவனுக்கு ஊழியம் செய்வேன். அவர் எனக்கு அடையாளங்களையோ தரிசனங்களையோ காண்பிக்க விரும்பினால் காண்பிக்கட்டும். அவர் அதை செய்யாமற்போனால், நான் இனி ஒருபோதும் ஜனங்களின் முன்னால் நின்று, அவர்களுடைய விசுவாசம் என்னிலிருந்து ஏதாவதொன்றை இழுக்கும்படி விடமாட்டேன். நான் வியாதியஸ்தருக்காக ஜெபித்து, அவர்களை தேவனிடம் சமர்ப்பித்து அவர்களைப் போகச் செய்வேன். அவர்கள் கட்டளையை விசுவாசித்தால், தேவன் இன்னமும் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் மோசேக்கு செய்தது போல், என்னை இம்மட்டும் கொண்டு வந்திருக்கிறார். அவர் யோசுவாவுக்கு செய்தது போலவே, எனக்கும் செய்துள்ளார். 77“தேவனே என்னை மன்னியும். நான் எழுந்து மறுபடியும் முயற்சி செய்திட்டும். கர்த்தாவே, எனக்குதவி செய்யும். நான் ஜனங்களை வழிநடத்தி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் நாங்கள் பிரவேசிக்கச் செய்யும். அங்கு மீட்கப்பட்ட இந்த மகத்தான தேவனுடைய சபை இனி பாவம் செய்யாதபடிக்கு இரட்சிக்கப்படும்'' என்பதே என் தாழ்மையான விண்ணப்பமாயுள்ளது. அதுவே இன்று காலையில் என் வாஞ்சையாயுள்ளது. அதை விசுவாசித்து வாழுங்கள். அதை விசுவாசித்து சுகம் பெறுங்கள் கர்த்தருடைய நாமத்தில் இதை உங்களுக்குக் கூறுகிறேன். நாம் ஜெபம் செய்வோம். 78கர்த்தராகிய தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனுக்கு காரணரே, நன்மையான ஈவுகள் ஒவ்வொன்றையும் அளிப்பவரே, உமது இரக்கமும் உமது கிருபையும் முதலாவது உம் ஊழியனின் மேல் இருப்பதாக, கர்த்தாவே தெய்வீகமான ஒன்றை தவறாக உபயோகித்ததன் காரணமாக உமது பார்வையில் தவறு செய்துவிட்டேன். ஜனங்கள் அதை என்னிடமிருந்து இழுத்தனர் கர்த்தாவே. ஓ, கர்த்தராகியே தேவனே, இந்நேரம் முதற்கொண்டு உமது ஆவியினால் என்னை அதிகமாக நிரப்ப வேண்டுமென்று உம்மை வேண்டிக் கொள்கிறேன். என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். ஆண்களும் பெண்களும் என்னிடம் ஜெபித்துக் கொள்ள வரும் போது, எனக்கு நீர் சுவாசமும் ஜீவனும் அளித்திருக்கும் வரையிலும் அதை நான் செய்வேன். பிதாவே அவர்களுக்காக ஜெபிக்கப்படும்போது, அவர்கள் விசுவாசிப்பார்களாக எனக்கு நீர் அளித்துள்ள இந்த கட்டளையை நான் உலகம் ழுவதிலும் நிறைவேற்றுவேனாக. வழிகாட்டி கம்பம் நடப்பட்டுள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு நான் செல்லும்போது, அது கட்டளையை சுட்டிக் காட்டுவது மட்டுமே என்பதை அறிந்து கொள்வார்களாக. அவர்களுக்கு விசுவாசம் இருக்கட்டும். 79கர்த்தாவே, சில காரியங்களை என்னிடம் கூறுவதற்கோ அல்லது இந்த நபர் சுகமாகப் போகிறார் என்று அறிவிப்பதற்கோ, நான் இனிமேல் எந்த விதமான அடையாளத்துக்காக காத்திரேன். என் இருதயத்தில் விசுவாசம் கொண்டவனாக நான் சத்துருவை சந்திக்கச் செல்வேன். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் அவனுக்குச் சவால் விடச் செல்வேன். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்துக்கு முன்னால் அவனால் நிற்க முடியாது. கர்த்தாவே, இவையனைத்தும் சரியென்று நிரூபிக்கப்பட்டிருக்கும்போது, அதே விதமாக நான் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கையிலும் நீர் நிச்சயம் சுகப்படுத்துவீர், அது உம்முடைய வார்த்தை, அது உம்முடைய வாக்குத்தத்தம். இதை நான் செய்ய வாஞ்சிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும். கர்த்தாவே, உமக்குக் கீழ்ப்படியாமலிருந்த என் பாவங்களை மன்னியும். வேறென்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. கர்த்தாவே, இது எனக்குத் தெளிவாக வெளிப்படாததனால் இதை செய்தேன். இப்பொழுது எனக்கு தெளிவாகிவிட்டது. நான் எங்கே நிற்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். இந்த வார்த்தை இரவும் பகலும் என் வாயை விட்டுப் பிரியாதபடிக்கு காத்துக் கொள்வேன். கர்த்தாவே நான் எப்பொழுதுமே இந்த வார்த்தையில் நிலை நின்று, இதை ஜனங்களுக்கு அறிவித்து வந்திருக்கிறேன். அது தேவனுடைய வார்த்தையாக இல்லாமல் போனால், அதை நான் சந்தேகித்திருக்கிறேன். தேவனுடைய வார்த்தையைத் தவிர நான் எதையும் பிரசங்கித்ததில்லை. 80ஆனால், கர்த்தாவே, இதே இடத்தில் நடந்து நடந்து எனக்கு களைப்புண்டாகிவிட்டது. நேற்றிரவு நான் கூறினது போல, ''நாற்பது வருடங்களாக வனாந்தரத்தில் சுற்றி சுற்றி வருதல்“. தேவன் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுடைய ஆடுகளையும் பிள்ளைகளையும், இன்னும் வேறென்ன, கால்நடைகளையும் பெருகச் செய்தார். தேவனே நீர் அவர்களை ஆசீர்வதித்தீர். ஆனால் ஒரு நாள் நீர், ''நீங்கள் நீண்ட காலமாக இந்த மலையின் மேல் தங்கிவிட்டீர்கள். ஓ, வடக்கு பக்கம் யோர்தானை நோக்கிச் செல்லுங்கள்'' என்றீர். தேவனே, நானும் இன்று காலை புறப்படுகிறேன். இந்த வழிகாட்டி கம்பங்களை விட்டு நான் செல்கிறேன். ஏனெனில் அது மேலான ஒரு தேசத்தைச் சுட்டிக் காட்டுகிறது. நான் இடற நேரிடலாம். நான் அமலேக்கியரின் வழியாக கடந்து செல்ல நேரிடலாம். நான் ஏத்தியர் கானானியர் வழியாக கடந்து செல்ல நேரிடலாம். என்னைக் குற்றம் சொல்லலாம், கர்த்தாவே. ஆயினும் நான் தொடர்ந்து செல்வேன். அப்பால் எங்கோ ஒரு தேசம் உள்ளதென்று அறிந்திருக்கிறேன்; ஏதோ ஒரு நிலை, நீர் ஜெபத்திற்கு பதிலளிக்கக் கூடிய ஏதோ ஒரு இடம். அங்கு நாங்கள் என்ன கேட்டாலும், அது அருளப்படும். புற்று நோயும் கூட ஜெபத்திற்கு முன் நில்லாது. அது உண்மையென்று நான் அறிந்துள்ளேன். ஆண்டவரே, அப்படியானால் நான் விசுவாசித்து அதற்காக காத்திருப்பேன். உமது ஊழியத்திற்கென்று இன்று காலையில் என்னை உமக்கு ஒப்புவிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 81நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைகூடிடும், நம்பிடுவாய் நம்பிடுவாய்,நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய் (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) ஒலிநாடாவில் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. ஏனெனில் இது உலகமெங்கும் செல்லும். இது என் இருதயத்திலிருந்து வந்தது. சபையோரே, புரிந்து கொண்டீர்களா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர்- ஆசி). தேவன் ஒன்றைக் கூறிவிட்டு அதினின்று பின்னடைய மாட்டார். அவருடைய வார்த்தைகள் பிழையற்றவை. அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவை. இந்த நேரத்திற்காக அவர் இவ்வளவு காலம் காத்திருந்தார். பாருங்கள், விசுவாசமுள்ள ஜெபமே பிணியாளியை இரட்சிக்கும், அடையாளமல்ல. விசுவாசமுள்ள ஜெபம்! (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி ) “நீ விசுவாசிக்கக் கூடுமானால் என்னால் ஆகும்” என்று இயேசு கூறினார். உங்களுக்கு விசுவாசமுள்ள ஜெபத்தை ஏறெடுக்க தேவன் எனக்கு வல்லமையளித்து அதை வாக்குத்தத்தம் செய்து, அது உண்மையென்று நிரூபித்திருக்கிறார் என்று இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா (சபையோர் “ஆமென்” என்கின்றனர்- ஆசி ). நீங்கள் விசுவாசிப்பீர்களானால் நான் கேட்டதைப் பெற்றுக் கொள்வேன். “நீ ஜனங்களை விசுவாசிக்கும்படி செய்து, நீ ஜெபிக்கையில் உத்தமமாக இருந்தால், உன் ஜெபத்தின் முன்னால் ஒன்றுமே நிற்க முடியாது'' 82சகோதரன், சகோதரியே, நான் உத்தமமாக இருக்க விரும்பும் நேரம் ஒன்று இருக்குமானால், அது இது தான். நான் செய்த தவறுகள் வெளிப்படையாகவே உள்ளன. நான் விரும்புவது என்னவெனில், இந்த செய்திகளை முன்பே அளிக்கக் காரணம், தேவன் இரக்கமுள்ளவராயிருக்கிறார் என்பதைக் காண்பித்தார் என்று அறிவிக்கவே, பெரிய மனிதனாகிய மோசே தவறுகள் செய்தான். யோசுவா வந்த போது, அவனும் கூட தவறுகள் செய்யப் போனான். ஆனால் தேவன், ''நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்'', என்றார். இப்பொழுது தேவனைப் பாருங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் எனக்கு இந்த வசனத்தைக் காண்பித்து நான் மோசேயோடே இருந்ததுபோல், “உன்னோடும் இருப்பேன். உன் தவறுகளை நான் காண்பதில்லை'' என்றார். இந்த நேரம் வருகிறதென்று அவர் அறிந்திருந்தார். அந்த நேரம் இங்குள்ளது. பாருங்கள், அது மீண்டும் வந்துவிட்டது. ஏனெனில் தேவன் அதைவிட்டு விலக முடியாது. “விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் எத்தனை பேருக்கு அது தெரியும்? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் -ஆசி ) அநேகர், எத்தனை நல்ல மனிதர் உனக்காக ஜெபித்தாலும், எத்தனை நல்ல போதகர்கள் உனக்குப் பிரசங்கித்தாலும் இரட்சிப்படைய உனக்கு தனிப்பட்ட விசுவாசம் இருக்க வேண்டும். அது சரியா? ('ஆமென்'). அது என்னுடைய சொந்த விசுவாசம். நீ எத்தனை நல்ல பிரசங்கங்களை கேட்டாலும், நீ எத்தனை நல்ல சபைகளைச் சேர்ந்திருந்தாலும் எனக்கு கவலை இல்லை. உன்னுடைய சொந்த தனிப்பட்ட விசுவாசமே உன்னை இரட்சிக்கிறது. நீ எவ்வளவு சத்தமிட்டு அழுதாலும், எவ்வளவு கெஞ்சினாலும், எவ்வளவு கூச்சலிட்டாலும், எவ்வளவு ஆவியில் நடனமாடினாலும் உன்னுடைய விசுவாசத்தினாலே மாத்திரமே நீ இரட்சிக்கப்படுகிறாய். அது சரியா (”ஆமென்“ ). அந்த ஒரு வழியில் மாத்திரமே நீங்கள் சுகமும் பெறுகிறீர்கள். 83தேவன் ஒரு மனிதனிடம் - ஒரு போதகரிடம் - ஒரு செய்தியையளித்தது, அந்த போதகர் இரட்சிப்பைக் குறித்து பிரசங்கித்து ஒரு செய்தியையளித்து அந்த செய்தி உண்மையென்று நீ காணும்போது, அது உண்மையென்று தேவன் தமது வார்த்தையினால் உறுதிப்படுத்துகிறார். அப்படியிருக்க, வார்த்தையினாலும் தூதன் அளித்த இரண்டு அடையாளங்களினாலும் அந்த குணமாக்கும் வரம் பிழையற்றது என்று அதிக உறுதிப்பட்டிருக்கும்போது, அதை இன்னும் எவ்வளவு அதிகமாய் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்! பாருங்கள், இருக்கும் வரையிலும்... இதை செய்வது தேவனுடைய பரிபூரண சித்தம் அல்ல என்பதைக் காண்பிக்கும் பொருட்டு, அந்த அடையாளம் என்னை எப்பொழுதும் பலவீனமடையச் செய்தது. உங்களில் எத்தனை பேர் அதை அறிவீர்கள்? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்- ஆசி) பின்னால் உட்கார்ந்திருக்கும் என் மனைவியைக் கேட்டுப் பாருங்கள், அவள் உங்களிடம் சொல்வாள். அவள் என்னுடன் பொறுத்துப்போக வேண்டியிருப்பதால், மற்றவரை விட அவளே அதிகம் பாதிக்கப்படுகிறாள். நான் எங்கிருக்கிறேன். என்பதை அறியாதவனாய். நடந்து கொண்டே, இதை, அதை செய்து... சாலையில் சிறிது தூரம் நடந்து பிறகு நிற்பேன். 84கடைசியாக நடந்த கூட்டங்களிலிருந்து நான் வந்திருக்கிறேன். இரண்டு இரவுகள் ஜெப அட்டைகளை வழங்காமலே ஜனங்களை ஜெப வரிசையில் வரச் செய்தேன். கூட்டம் அதிகமாகிவிடவே, நாங்கள் ஜெப அட்டைகள் வழங்க வேண்டியதாயிற்று. நான் அங்கு நின்று கொண்டு ஒரே நேரத்தில் ஐம்பது அல்லது எழுபத்தைந்து, ஒருவேளை நாற்பது அல்லது ஐம்பது பேருக்கு பகுத்தறிந்து கூற வேண்டிய நிலை ஏற்பட்டது - இவ்விதம் ஒவ்வொரு இரவும். ஜீன், லியோ, மற்றும் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களே, நான் கூறுவது சரியா? ('சகோதரர்' அது சரியே என்கின்றனர் - ஆசி) நிச்சயமாக, அது உண்மை. அது என்ன செய்தது? அது என்னை விட்டுச் சென்று நான் வீட்டுக்குப் புறப்பட்டபோது, நான் எங்கே இருக்கிறேன் என்பதை மறந்து விடுவேன்; நான் எங்கிருந்து புறப்பட்டு வந்தேன் என்பதை அறிய விரும்பினேன், இதெல்லாம் நெடுஞ்சாலையில் நடந்தது. தேவன் இவ்விதம் ஒரு மனிதனுக்குச் செய்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கா? இல்லை, ஐயா. மனிதன் தனக்குத்தானே அதை செய்து கொள்கிறான் - கட்டளையை விட்டு வழிகாட்டி கம்பத்தை தெரிந்து கொண்டதால். வாஷிங்டனில் அல்லது வேறெங்கோ ஒரு இடத்தில் சாலையின் ஒரு புறத்தில் ஒரு மரத்தின் கீழ் நான் நின்று, ''கர்த்தாவே, என் சுயநினைவுக்கு நான் திரும்பி வரச் செய்யும். உண்மை என்னவென்று அறிந்துகொள்ள உதவி செய்யும். நான் ஜனங்களிடம் இதை ஒரு முறை சரிபடுத்திக் கொண்டு, அவர்களிடம் கட்டளையைக் கொண்டு சொல்ல முடியும்“ என்று வேண்டினேன். 85இப்பொழுது எனக்கு அது புரிந்து விட்டது. அன்றொரு நாள் பகல் வேளையில் கென்டக்கியின் மலையோரத்தில் நான் அமர்ந்திருந்தபோது, அவர் இதை எனக்கு வெளிப்படுத்தினார். அது இது தான், இதுதான். இப்பொழுது நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் புறப்பட்டுச் செல்கிறேன். அவ்வளவு தான். இதை விசுவாசித்து வாழுங்கள். இதை விசுவாசித்து குணமடையுங்கள்! யாரையும் இதை விசுவாசிக்கச் செய்ய என்னால் முடியாது. நீங்களாகவே இதை விசுவாசிக்க வேண்டும். ஆனால் நான் உங்களுக்கு உண்மையை எடுத்துரைத்தேன். இது உண்மையென்று தேவன் தமது வார்த்தையினாலும் தமது தூதன் மூலமாகவும், அவருடைய அடையாளங்கள் அற்புதங்களினாலும் பன்னிரண்டு ஆண்டு காலமாய் சாட்சியாக அறிவித்து வந்திருக்கிறார். இப்பொழுது அவர்கள் இதை விசுவாசிக்காமல் போனால், எப்பொழுதுமே விசுவாசிக்க மாட்டார்கள். அது சரியா? (சபையோர், “அது சரி” என்கின்றனர் - ஆசி) ஆனால் நேரம் வந்துவிட்டது. இந்த மலையின் மேல் தங்கினதால் எனக்கு களைப்பு உண்டாகிவிட்டது. நான் யோர்தான் வரை செல்ல விரும்புகிறேன். முழு வாக்குத்தத்தங்களுக்குள் நான் பிரவேசிக்க விரும்புகிறேன். நான் அடையாளத்தைப் பாராமல். தேவன் வெளிப்படுத்தின ஒன்றின் மேல் சார்ந்திராமல், எனக்குள் விசுவாசத்தைப் பெற்று, கல்வாரியை நோக்கி, “தேவனாகிய கர்த்தாவே, விசுவாசத்தினால் நான் வருகிறேன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் நான் வருகிறேன்” என்று கூற விரும்புகிறேன். 86இன்று காலை ஜெபித்துக் கொள்ளப்பட வேண்டிய சிலர் இங்குள்ளனர். உங்கள் சரீரங்களிலுள்ள நோயையும் ஊனமுற்ற நிலையையும் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சந்திக்க வருகிறேன். தேவன் என் ஜீவனை எடுத்துக் கொள்ளும் வரையிலும் நான் அவ்விதமே செய்வேன். அது உண்மை. அவர் எனக்கு சுயநினைவும் புரிந்து கொள்ளுதலும் அளிக்கும் வரையிலும், நான் மற்றவருக்காக ஜெபிப்பேன். நீங்கள் விசுவாசிக்கத் தவறாதீர்கள் - உங்களுக்கு நான் ஜெபிக்கும் போது நீங்கள் சுகமடைவீர்கள் என்று. அதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிக்காமல் போனால், ஜெபித்துக் கொள்ள வரவே வேண்டாம். ஏனெனில் அது உங்கள் மனதை நோகச் செய்யும். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இங்குள்ளது. இந்நேரம் முதல் பகுத்தறிதல் கிடையாது - தேவன் எனக்குத் திட்டவட்டமாக, “இந்த நபரிடம் சென்று இந்தக் காரியத்தைக் கூறு” என்று உரைத்தால் தான். அப்பொழுது நான் சென்று அவர்களிடம் கூறுவேன். அவர், “இந்தக் காரியத்தைச் செய்'' என்றால், நான் போய் செய்வேன். இனிமேல் மேடையில் நின்று, ''என்னைப் பார். உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. ஆம், இது இன்னின்ன விதமாய் உள்ளது. உன் பெயர் ஜான் டோ. நீ இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாய், உனக்கு இவ்வளவு காலமாய் புற்றுநோய் இருந்து வருகிறது. இன்னின்ன பெயருடைய மருத்துவர் நீ சுகமடைய மாட்டாய் என்று கூறி விட்டார். நீ சென்று அதை சரி செய்தால் குணமடைவாய். சரி, “சகோ. ஜான்டோ. நீ சென்று அதை விசுவாசி” என்றோ, ''நீ சென்று ஒரு குறிப்பிட்ட தவறான செயலை புரிந்துவிட்டாய். நீ சென்று அதை சரி செய்தால் குணமடைவாய்“. சரி, ”சகோ. ஜான்டோ. நீ சென்று அதை விசுவாசி'' என்றோ, ''நீ சகோதரி இன்னார் இன்னார். நீ இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாய் என்றோ கூறப் போவதில்லை. அப்பொழுது என் தலை சுழல்கிறது, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதலாவதாக என்ன தெரியுமா, வேறொருவர் வருகிறார், நான் யாரைக் காண்கிறேன் என்று எனக்குத் தெரியாமல் போகின்றது. அதன் பிறகு நான் கூட்டத்தை விட்டு வெளியேறும்போது, “நான் எங்கிருக்கிறேன்” என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இனிமேல் அதெல்லாம் இருக்கப் போவதில்லை. 87நான் அவருடைய ஊழியன் என்னும் முறையில் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் வருகிறேன். நான் உங்களிடம் உண்மையைக் கூறினேன் என்று தேவன் இதுவரையிலும் உங்களுக்கு நிரூபிக்காமல் இருந்தால், நான் உண்மையைக் கூறினேன் என்று நீங்கள் ஒருபோதும் விசுவாசிக்கமாட்டீர்கள், ஆமென். அது உண்மை. உங்களில் எத்தனை பேர் ஜெபித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி. இப்பொழுது டெட்டி(Teddy) எனக்கு வேண்டும். டெட்டி கட்டித்தில் இருக்கிறாரா? ('இல்லை, அவர் போய் விட்டார்' என்று ஒருவர் கூறுகிறார் - ஆசி). அவர் போய் விட்டார். இங்கு வந்து நம்பிடுவாய் என்னும் பாடலை எனக்காக பியானோவில் இசைக்கக் கூடியவர் யார்? அதை இசைக்கக் கூடியவர் யாராவது இங்கிருந்தால், இங்கு இருக்கிறாரா? அல்லது அதை ஒலிப்பதிவுசெய்து வைத்திருக்கிறீர்களா? 'நம்பிடுவாய் என்னும் பாடலை பியானோவில் எங்களுக்காக இசைக்கக் கூடியவர் இங்கு யாராகிலும் இருந்தால்', முன் வாருங்கள். அது ஆணானாலும், பெண்ணானாலும் பரவாயில்லை. நீங்கள் முன் வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கும். சரி, அன்பார்ந்த சகோதரியே, அதை மிருதுவாக இசைப்பாயா? 88நாங்கள் இப்பொழுது ஜெப அட்டைகளை வழங்கப் போவதில்லை. இப்படிப்பட்ட சிறு கூட்டங்களில் நாம் இருக்கும்போது, அது நமக்கு அவசியமில்லை. நாம் பெரிய கூட்டங்களில் இருக்கும் போது, நான் ஐந்நூறு பேர்களுக்கு ஜெபிக்க வேண்டியதாய் இருந்தால், நாங்கள் ஜெப அட்டைகளை வழங்கவேண்டும். ஏனெனில் ஜனக்கூட்டத்தில் அநேகம் பேர் இருப்பார்கள், பாருங்கள். இது தேவனுடைய சித்தம் என்று உங்களில் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). ஆமென். ஓ, நான் சரியானதை செய்தேன் என்று ஏதோ ஒன்று என்னை உணர்த்துகிறது. ஏதோ ஒன்று அந்த உணர்வை அந்த பாரம் என் இருதயத்தை விட்டு நீங்கிவிட்டது. சகோ. லீ, அது தவறென்று பன்னிரண்டு ஆண்டுகளாக என் இருதயத்தில் இருந்து வந்தது. இப்பொழுது அது நீங்கி விட்டது என்பதை அறிகிறேன். நான் கூறினது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது என் இருதயத்தைவிட்டு இப்பொழுது நீங்கி விட்டது. 89ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் தனிப்பட்ட விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும். அது போல் உங்கள் தனிப்பட்ட விசவாசத்தினால் மட்டுமே நீங்கள் சுகம்பெற முடியும். இது வேதப் பிரகாரமானது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் -ஆசி). தேவனுடைய வார்த்தை நீங்கள் எந்த சபைக்குச் சென்றாலும், உங்கள் சபையின் போதகர் தேவனுடைய மனிதன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அவர் உங்களுக்கு சத்தியத்தை எடுத்தரைக்கிறார் என்று விசுவாசித்து அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கிறிஸ்துவில் கொண்டிருக்கும் உங்கள் சொந்த தனிப்பட்ட விசவாசமே உங்களை இரட்சிக்கிறது. உங்கள் போதகர் எவ்வளவு நல்லவராக, எவ்வளவு தேவ எவ்வளவு தத்ரூபமாயிருந்தாலும், பக்தியுள்ளவராக இருந்தாலும், உங்கள் தாயார் எவ்வளவு பரிசுத்தவாட்டியாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தை எவ்வளவாக அழுதாலும், எவ்வளவாக ஜெபித்தாலும், உங்களுடைய விசுவாசமே உங்களை இரட்சிக்கிறது! விசுவாசத்தினாலேயே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள். அதே காரியம் சுகமளித்தலுக்கும் பொருந்துகிறது. அது எப்படியிருப்பினும்... இந்த கடைசி நாட்களில் தேவன் இதை அனுப்புவாரென்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. இப்பொழுது தொடர்ந்து இரண்டு பிரசங்கங்களில், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரையும் ஆவிக்குரிய இஸ்ரவேலரையும் ஒப்பிட்டேன். நம்மை தேசத்திற்குள் வழி நடத்திச்செல்ல நாம் இந்நாளின் யோசுவாவாகிய பரிசுத்த ஆவியானவரை எதிர்நோக்கியிருக்கிறோம். அவர் ஆவியாயிருப்பதனால், யார் மூலமாவது அவர் பேச வேண்டும். அவர் என்னிடம் உரைத்ததை உங்களிடம் கூறினேன். நீங்கள் இப்பொழுது அதை விசுவாசித்து சுகமடைவீர்களாக. 90டாக் (Doc), ஜெப வரிசையில் இப்பக்கத்தில் உள்ளவர் அங்கு செல்லட்டும். பில்லி பால், பில்லி எங்கே? இங்கு வந்து டாக்குக்கு உதவி செய். இப்பொழுது இந்த ஜெபவரிசையில் வரும் ஒவ்வொருவரும் இதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியாவிடில், அதற்கான உத்திரவாதம் உங்களுடையதே. இது உண்மை. நீங்கள் விசுவாசிக்க வேண்டும் இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள் வியாதியுள்ளவர் நீங்களே. தேவன் அதை தமது வேதாகமத்தில் கூறியுள்ளார். தேவன் அதை தமது செய்தியாளனின் மூலம் அனுப்பி, தமது தூதனின் மூலம் அதை நிரூபித்தும் இருக்கிறார். இப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்கவேண்டும். ஜெபித்துக் கொள்ள விரும்புவோர்களே, வேதம் கூறுவது என்னவெனில், அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். அது உண்மை. நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். இப்பொழுது நாம் அதை முழு இருதயத்தோடும் விசுவாசிக்க விரும்புகிறோம், அப்பொழுது தேவன் உங்களுக்கு சுகமளிப்பார். 91நீங்கள் அனைவரும் இவ்வழியாக சுற்றி, இங்கு சரியாக பின்புறம் வாருங்கள். மற்ற வரிசையில் உள்ளோரும் அவ்விதமே வரட்டும். அதோ அங்குள்ளவர் வலது புறத்தில் நிற்கட்டும். சரி. என்ன கூறுகிறீர்கள்? (ஒருவர் சகோ. பிரன்ஹாமுடன் பேசுகிறார்- ஆசி). நான் கீழிறங்கி வரப்போகிறேன். ஆம், ஐயா, இங்கே அவர்களுக்காக ஜெபிக்க. இப்பொழுது இந்த கடிதங்கள், உறுமால்கள் மேல் கைகளை வைத்து ஜெபித்துள்ளேன். உங்களில் அநேகர், உங்களில் சிலர், ஒருவேளை போகவேண்டியதாக இருக்கலாம். இன்றிரவு ஆராதனையை மறந்து விடாதீர்கள். அது உறுதிப்படுதலைக் குறித்து பேசப்படும் ஆராதனையாயிருக்கும். “உண்மையான சபையைக் குறித்த தெய்வீக நிரூபணம்” என்பதே செய்தியின் தலைப்பு. பாருங்கள்? 92இப்பொழுது ஜெபித்துக் கொள்ள விரும்பும் உங்களுக்கு... நீங்கள் சுகம் பெறுவீர்கள் என்று முழுமையாக விசுவாசிக்கிறீர்களா? (ஜெப வரிசையிலுள்ளோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). நீங்கள் விசுவாசியாமல் போனால் ஜெப வரிசையில் வராதீர்கள். நீங்கள் விசுவாசித்தால், ஜெபவரிசையில் வருவது உங்கள் கடமையாகும். இப்பொழுது, சுகமளிப்பவன் நானல்ல, ஆனால் நான் சுகமாக்கும் வரத்தைப் பெற்றுள்ளேன். அது சாட்சியாக காணப்பட்டு, அது உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பாருங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றது என் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது நான் ஒரு உள்ளூர் பாப்டிஸ்டு போதகர் மட்டுமே. நான் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அங்கு ஒரு வயோதிப நர்ஸ் இருந்தாள். அவள் ஹாவர்ட் பார்க்கில் வசித்து வந்தாள். அவள் இப்பொழுதும் அந்த மருத்துவமனையில் பணிபுரிகிறாளா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. அவள் அங்குள்ள வியாதியஸ்தரிடம், “நீங்கள் சுகம் பெறப் போகிறீர்கள். நீங்கள் சுகம் பெறப் போகிறீர்கள். அந்த பாப்டிஸ்டு போதகர் உங்களுக்கு ஜெபிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்” என்று கூறுவாள். பாருங்கள், அது தான் ஆரம்பம். அப்படித்தான் அது இருந்தது. உள்ளூரில் ஆரம்பித்த அது உலகமெங்கும் பரவிற்று. 93எனக்கு கல்வியறிவு இல்லாததற்கு ஈடு செய்வதற்கென அவர் இந்த அடையாளங்களை எனக்கு அளித்தார். மற்ற போதகர்களைப் போல், உதாரணமாக, எனக்குத் தெரிந்து சகோ. நெவில் அல்லது டாக்டர் வேயில் பெற்றுள்ள கல்வியறிவைப் போல் எனக்கு இருந்திருக்குமானால், இந்த அடையாளங்கள் எனக்கு அவசியமாக இருந்திருக்காது. ஆனால் கல்வியறிவு எனக்கு இல்லாதபடியால் அதற்கு ஈடு செய்ய இந்த அடையாளங்களை நான் பெற்றிருக்க வேண்டியதாயிருந்தது. கல்வியறிவு அளித்திருக்கும் பயனையே இந்த அடையாளங்கள் அளித்தன. பாருங்கள், நமக்குக் கல்வித் தகுதி இல்லாமல் போனால், வேறு வழியில் தகுதியை நமக்களிக்க தேவன் வல்லவராயிருக்கிறார். இப்பொழுது விசுவாசம் கொண்டவர்களாய் விசுவாசியுங்கள். நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திலேயே நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிப்பதாக தேவனுக்கு வாக்களிக்க வேண்டுமென்று விரும்கிறேன். ஏனெனில், நீங்கள் விசுவாசிக்காவிடில், உங்களுக்கு எந்த பயனும் இராது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சந்தேகம் அனைத்தையும் ஒருபுறம் தள்ளிவிடுங்கள். நீங்கள் ஜெப வரிசையில் வந்து நான் உங்களுக்கு ஜெபித்த பிறகு இங்கிருந்து நடந்து சென்றுவிடுங்கள். நீங்கள் சுகமடைந்ததன் அறிகுறி ஒருவேளை சிறிதேனும் தென்படாமல் இருக்கலாம். இயேசு, ''நீ காண்கிறாயா? நீ உணருகின்றாயா?'' என்று கேட்கவில்லை. அவர், “நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசித்தால்” என்று தான் கூறினார். 94இதை நான் ஜெப வரிசையில் கவனித்திருக்கிறேன். நான் ஜனங்களுக்காக ஜெபிக்கையில், பலருக்கு அவர் பகுத்தறிந்து கூறுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் அங்கிருந்து சென்று, ''ஊ, எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. அவர் எனக்கு ஒன்றுமே கூறுவில்லை'' என்கின்றனர். அந்த நபர் ஒருபோதும் ஒன்றையும் பெற்றுக் கொள்வதும் இல்லை. ஆனால் சிலர் ஜெபவரிசையில் வரும் போது, “கர்த்தாவே, உமக்கு நன்றி. இதை நான் விசுவாசிக்கிறேன்” என்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தான் என்னிடம் வந்து, “சகோ. பிரன்ஹாமே, உமக்குத் தெரியுமா அநேக நாட்களாக நான் ஒரு வித்தியாசத்தையும் காணவில்லை. அது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் இருக்கலாம். ஆனால் திடீரென்று அந்த வியாதி என்னை விட்டுப் போவதை உணர்ந்தேன், பாருங்கள், அது போய்விட்டது” என்று கூறக் கேட்டிருக்கிறேன். நீங்கள் விசுவாசிப்பதாக ஒருவேளை கூறலாம். கூட்டத்துக்கு வருபவர்களில் மூவகை பிரிவினர் உள்ளனர்; அவிசுவாசிகள், பாவனை விசுவாசிகள், விசுவாசிகள். சிலர் விசுவாசிப்பது போல் பாவனை செய்து, ''ஓ, ஆமாம், நான் விசுவாசிக்கிறேன்“ என்பார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் விசுவாசிப்பதில்லை. நீங்கள் விசுவாசிப்பீர்களானால் இப்பொழுது இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் சுகமடையாமலிருப்பது கூடாது காரியம். இதை திரும்பக் கூறுகிறேன். நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் சுகமடையாமலிருப்பது முற்றிலும் கூடாது காரியம். 95முதலாவதாக, தேவனுடைய வார்த்தை, உண்டாகி கட்டளையைக் கொடுத்தது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). முதலாவதாக தேவனுடைய வார்த்தை அவ்விதம் உரைத்தது. அது எல்லாவற்றிற்கும் மேலானது. இரண்டாவதாக கர்த்தருடைய தூதன் அதை நிரூபித்தார். அடையாளங்கள் அதை உறுதிப்படுத்தின. அது சரியா ('ஆமென்') அது ஒரு முறையாகிலும் எங்கும் தோல்வியுறவில்லை. தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தோல்வியுறுவதில்லை. அது, ''நான் ஒரு சமயம் அவர்களுக்கு சுகமளித்தேன். இப்பொழுது அதை அவர்கள் நடுவிலிருந்து நீக்கி விடுவேன்“ என்று கூறுவதில்லை. அவ்விதம் இருப்பதாக யாராவது என்னிடம் காண்பியுங்கள் பார்க்கலாம். வியாதியஸ்தருக்காக ஜெபிக்க இயேசு தமது சபைக்குக் கட்டளையிட்டார். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்று வேதாகமத்தில் உள்ள பகுதியை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். அது இனிமேல் நடக்காது என்று அவர் எங்கு கூறியுள்ளார் என்று எனக்கு வேதாகமத்திலிருந்து காண்பியுங்கள். பாருங்கள்? கடைசி நாட்களில் குறிப்பிட்ட இக்காரியங்களை அவர் செய்யப் போவதாகவும், இவைகளை உயிர்ப்பிக்கப் போவதாகவும் அவர் வாக்களித்தார். என்ன நடந்ததென்று கவனியுங்கள். அவர் தமது வார்த்தையைக் காத்துக்கொண்டார். அவர் எனக்குக் கட்டளை கொடுத்தார் என்று நான் உங்களிடம் கூறினேன். உலகம் அதை அறிந்துள்ளது. விஞ்ஞானம் அதை அறிந்துள்ளது. கர்த்தருடைய தூதன் அதை நிரூபிக்கிறார். பலன்களும் அது உண்மையென்று நிரூபித்துவிட்டன. 96நாம் வியாதியஸ்தர் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜெபிக்கப்பட வேண்டியவர்கள் ஏராளமாக உள்ளனர். நிச்சயமாக இதைத் தவிர வேறெதாவது ஒருவழி இருக்க வேண்டும் என்று எண்ணினேன். சகோ. ஜாக்மூர் ஒருமுறை என்னிடம் இவ்விதம் கூறினார். ஊனமுற்ற ஒரு ஏழை சிறு பெண் கட்டிடத்திற்குள் நகர்ந்து வந்தாள். பாவம் அந்தப் பெண், நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு ஏறிவர முயற்சித்தாள். நான் கீழே நோக்கிப் பார்த்த போது, அவள் அழ ஆரம்பித்தாள். அவளிடம் ஜெப அட்டை இல்லாதனால், அவர்களால் அவளை ஜெப வரிசைக்கு அழைத்து வர இயலவில்லை. அதுவே அவளுடைய கடைசி இரவு என்று தெரியாதிருந்தது. சகோ. மூவரும் மற்றவரும் ஜெப வரிசையிலிருந்து விலகி வரும்படி அவளுக்கு உதவினர். அடுத்த நாள் நாங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, “சகோ. பிரன்ஹாமே, அது என்னை மிகவும் வருத்தியது” என்று சகோ. மூர் கூறினார். நான், “உங்களை வருத்தியதா? அது என்னை என்ன செய்ததென்று நினைக்கிறீர்களா?” என்றேன். பாருங்கள், ஊனமுற்ற ஒரு சிறு பெண். அது என் மனதில் ஆழமாக பதிந்தது. இந்த சம்பவம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது - இல்லினாயில் ஊனமுற்ற ஒரு சிறுபெண். அவள் கறுப்பு தலைமயிரும், பழுப்பு நிறக் கண்களும் உடையவளாய் போலியோ வியாதியினால் தாக்கப்பட்டு ஊனமுற்று, நகர்ந்து வந்து, நான் இருந்த இடத்திற்கு ஏறி வர முயற்சித்தாள். அங்கிருந்த வாயிற்காப்போர் அவளை அங்கிருந்து கொண்டு சென்று, அவளுடைய இருக்கையில் உட்காரும்படி அவளுக்கு உதவினர். அவள் நான் இருந்த இடத்திற்கு ஏறிவர, தன் இருக்கையிலிருந்து நகர்ந்து வந்தாள். வாயிற்காப்போர் ஏன் அவ்விதம் செய்தனர்? நாம் ஜெப அட்டை வைத்திருக்கும் குறிப்பிட்ட சிலரை மாத்திரமே ஜெபவரிசையில் ஏற்றுக் கொள்ள முடியும். நான் சிலரை ஜெப வரிசையிலிருந்து நீக்கிவிட்டு, ஜெப அட்டை இல்லாத இவளை ஜெப வரிசையில் நிறுத்தியிருக்க நேர்ந்தால், ஜெப அட்டை உள்ளவரை புண்படுத்தியிருப்பேன், பாருங்கள். அது உண்மை நான் அவ்விதமாக செய்ய முடியாது. ''நிச்சயமாக வேறு ஏதாவது ஒருவழி இருக்க வேண்டும்'' என்று எண்ணிக் கொண்டேன். நான் இன்று அறிந்துள்ளதை அன்றே அறிந்திருந்தால் நலமாயிருக்கும். காரியங்கள் அப்பொழுது வித்தயாசமாக இருந்திருக்கும், நிச்சயமாக அது வித்தயாசமாக இருந்திருக்கும். 97இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்கும், நீங்கள் சுகம் பெற தடையாயிருக்கும் ஒரே காரியம் உங்கள் அவிசுவாசம் மட்டுமே. இப்பொழுது நாம் தலை வணங்குவோம்: எங்கள் பரலோகப்பிதாவே, இங்கு குருடரும் முடவரும், வியாதியஸ்தரும், புற்றுநோய், குடற்புண், கட்டிகள் இவற்றால் மரித்துக் கொண்டிருப்போரும் நின்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜெபவரிசையில் நின்றுள்ளனர். கர்த்தாவே நான் வார்த்தையைப் பிரசங்கித்து வந்தேன். இந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அதை நீர் உலகம் முழுவதிலும் உறுதிபடுத்தினீர். நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன், அதை நான் வேண்டுமென்று செய்யவில்லை, நான் சரியானதை செய்கிறேன் என்று எண்ணினதால் அவ்விதம் செய்தேன். கர்த்தாவே இப்பொழுது நான் தாழ்மையுடன் உம்மிடத்தில் வந்து என் ஜெபத்தை ஆசீர்வதிக்கும்படியாக வேண்டிக் கொள்கிறேன். இந்த மக்களுக்கு நான் ஜெபிக்கும் போது, அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக. அவர்களுடைய விசுவாசத்தை ஆசீர்வதியும், எங்கள் அவிசுவாசம் நீங்க உதவிச் செய்யும், கர்த்தாவே. இன்று காலையில் இங்குள்ள ஒவ்வொருவரும் அந்த தரிசனத்தை உண்மையில் கிரகித்துக் கொள்வார்கள். அவர்கள் அதில் ஒன்றையும் இழந்து போகாமல், இதை வேதத்தின் மூலமாக கண்டு, தொடக்கத்தில் கர்த்தருடைய தூதன் பிரத்தியட்சமாகி, “மோசேக்கு இரண்டு வரங்கள் அளிக்கப்பட்டதுபோல” என்று கூறினதை நினைவு கூருவார்களாக. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாபிலோனின் சுவற்றில் எழுதியது போன்ற மனித கரம்போல் காணப்பட்ட ஒன்று, கீழே இறங்கி வந்து இந்த வேதாகமத்திலுள்ள இந்த அதிகாரத்தில் நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன் என்ற வசனத்தை சுட்டிக்காட்டியது. பிதாவே, இது இன்று காலையில் வெளிப்படையாகிவிட்டது. ஆண்டவரே, இதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். என் தவறை மன்னிப்பீராக. நாங்கள் ஜெபக்கூட்டம் நடத்தச் செல்லும் இவ்வேளையில், தேவனுடைய வல்லமை ஜெபவரிசையில் வரும் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவதாக. நான் உம்மிடம் எவ்வித விசேஷித்த அபிஷேகத்தையும் கேளாமல், விசேஷித்த ஏதாவதொன்றையும் கேளாமல், உம்முடைய ஊழியனாக மட்டுமே செல்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் அந்த கட்டளையைப் பெற்றுள்ளேன் என்பதை அறிந்தவனாய், அதை நிறைவேற்ற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செல்கிறேன். 98இப்பொழுது சகோ.நெவில், இங்கு நில்லுங்கள். இந்த வரத்தை உடையவனாய், நான் எண்ணெய் பூசி ஜெபம் செய்யப் போவதில்லை, பாருங்கள். அவர் என்னிடம் செய்யக் கூறினதை நான் செய்யப் போகிறேன். “ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்து, உத்தமமாய் இரு” என்பதே கட்டளை. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?(சபையோர் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). நான் உத்தமமாய் இருக்கிறேன். எனவே ஏதோ ஒன்று நிகழ்ந்தாக வேண்டும். சகோ. நெவில் பாடல்களை முன்னின்று துவக்குவார். நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கையில், நீங்கள் அமைதியாக ஜெபியுங்கள். (சகோ. நெவில் 'நம்பிடுவாய்' என்ற பாடலை துவக்குகிறார். ஒலிநாடாவில் காலி இடம்- ஆசி). 99கர்த்தராகிய இயேசுவே, சிறு நீரகத்தில் கற்கள் உள்ள இந்த ஸ்திரீயின் மேல் என் கரங்களை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவைகளைக் கடிந்து கொள்கிறேன். அவள் சென்று சுகமடைவாளாக. ஆமென். ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது. “உன் கோளாறு என்ன?'' கர்த்தாவே, 'பிராஸ்ட்ரேட்சுரப்பி' (Prostrate gland) கோளாறினால் அவதியுறும் இந்த சகோதரனின் மேல் என் கைகளை வைத்து, இந்த பிசாசின் வல்லமையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கடிந்து கொள்கிறேன். ஆமென். நீ அதை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். விசுவாசி. கர்த்தாவே, கால்கள் வீக்கமுள்ள இந்த ஸ்திரீயின் மேல் என் கைகளை வைத்து, அந்த வீக்கத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கடிந்து கொள்கிறேன். கர்த்தாவே! இருதயக் கோளாறு இன்னும் மற்றக் கோளாறுகள். என் சகோதரியின் மீது என் கையை வைத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்த வீக்கத்தை நான் கடிந்து கொள்கிறேன். ஆமென். சென்று, அதை விசுவாசித்துக் கொண்டேயிருங்கள், சகோதரியே...?... நீங்கள் அதைக் காண்பீர்கள். கர்த்தாவே, இந்த ஸ்திரீ பார்வை மங்கி, இருதயக் கோளாறினால் அவதியுறுகிறாள். நான் தேவனிடத்திலிருந்து பெற்றுள்ள கட்டளையைக் கொண்டு இதை கடிந்து கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். அது நடந்தேயாக வேண்டும். அது சரியாகி விடும். அது சரியாயிற்று. ஆமென். என் முழு இருதயத்தோடும் அதை நான் விசுவாசிக்கிறேன். 100(ஓலிநாடாவில் காலி இடம் - ஆசி). அது உண்மை நீ போவதற்கு நேரம் வந்து விட்டால் எப்படியும் போய்த்தான் ஆக வேண்டும். அது உண்மை. ஆனால், முதலாவதாக அவர் அதை உன்னிடம் கூறுவதற்கு முன்பு, நீ உத்தமமாயிருந்து சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நிச்சயம் சுகமடையவாய். அது முற்றிலும் உண்மை. மரித்த லாசரு உயிர்ப்பிக்கப்பட்டான், ஆனால் அவன் மறுபடியும் மரித்தான். தேவன் ஜனங்களுக்கு வாக்களித்ததை காத்துக் கொள்கிறார் என்பதைக் காண்பிக்கவே அவன் உயிரோடெழுப்பப்பட்டான். அவர், ''மரியாளே, நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்பதை விசுவாசிக்கிறாயா? மரித்தோரை உயிரோடெழுப்ப நான் தேவனிடமிருந்து கட்டளை பெற்றிருக்கிறேன். இதை நீ விசுவாசிக்கிறாயா?'' என்றார். அவள், “ஆம், ஆண்டவரே, நீர் உலக்தில் வருகிறவரான தேவகுமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். அவர், “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்றார். பாருங்கள்? அவன் மறுபடியும் மரிக்க வேண்டியதாயிருந்தது. அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார் என்பதைக் காண்பிக்கவே அவனை உயிரோடெழுப்பினார். பாருங்கள், தேவன் இந்த காரியங்களைச் செய்கிறார். அவை ஒவ்வொன்றும் தெய்வீக ஒழுங்கின்படி அமைந்துள்ளது. ஓ, அதைக் கூற நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாமே பிழையின்றி ஒழுங்காக அமைந்துள்ளது. நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் கேட்டுக் கொள்ளும் ஒவ்வொன்றும் உங்களுக்கு அருளப்படுகின்றது. அது அப்படித்தான் நடக்கவேண்டும்! 101சரி, இவர்களை முன்னால் கொண்டு வரும் போது, தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுவே, எங்கள் சகோதரி மிகவும் வியாதிப்பட்டிருக்கிறாள். நான் இங்கு நின்று இந்த வார்த்தையைப் பிரசங்கித்ததை அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். கர்த்தாவே, இவர்கள் அனைவரிலிருந்தும் சந்தேகம் என்னும் மந்தம் நீங்குவதாக. அவர்கள் எழுந்து, முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்த இந்த பழைய மலையை விட்டு நகர்ந்து, யோர்தானை நோக்கிச் செல்வார்களாக. கர்த்தாவே, இதை அருளும். எங்கள் சகோதரி இந்நேரம் முதல் இந்த பாதையில் பயணம் செய்து, தேவன் அவள் சரீரத்திற்கு சுகமளிக்கிறார் என்பதை விசுவாசிப்பாளர்கள். இயேசுவின் நாமத்தில் விசுவாசித்துக் கொண்டே இப்பாதையில் செல். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுவே, இவள் தன் மகளுக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் தன் இருதயத்தில் கொண்டுள்ள வாஞ்சையை அருளுவீராக. அவள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். விசுவாசத்தினால் என் கைகளை அவள் மேல் வைத்து என் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். உம்மை நான் விசுவாசியாமலிருந்தால், அவள் மேல் என் கைகளை வைத்திருக்க மாட்டேன். நீர் அதை செய்யமாட்டீர் என்று நான் விசுவாசியாமலிருந்தால், அவள் மேல் என் கைகளை வைத்திருக்க மாட்டேன். நீர் அதை செய்யமாட்டீர் என்று நான் நினைத்திருந்தால், அவளுக்காக நான் ஜெபிக்கமாட்டேன். ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். அவளும் விசுவாசிக்கிறாள். நாங்கள் இருவரும் இயேசுவின் நாமத்தில் விசுவாசம் கொண்டு, எங்கள் விசுவாசத்தை ஒன்றாக உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். ஆமென். 102(சகோ. பிரன்ஹாமிடம் ஒரு சகோதரர் பேசிக்கிறார் - ஆசி) பாட், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவனே, அவர் தன் விலையேறப்பெற்ற பிள்ளைகள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறார். அவருடைய செவி மந்தமாகி வருகிறது. அவர் கண்ணில் வேறு சதை வளர்ந்துள்ளதாக (cataract) மருத்துவர் கூறுகிறார். அவர் தேவனுடைய மகிமைக்காக வாழ விரும்புகிறார். கர்த்தாவே, இதை அவருக்கு அருளுவீராக. இந்த விண்ணப்பத்தை என் சகோதரனுக்காக ஏறெடுக்கிறேன். அவர் அதை நிச்சயம் இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்வார். ஆமென். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சந்தேகப்படாதீர். நீர் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொண்டதாக விசுவாசியும். (சகோ. பிரன்ஹாமிடம் ஒரு சகோதரி பேசுகிறாள் - ஆசி) கர்த்தாவே. இந்த ஏழை ஸ்திரீ தன் மகனுக்காக இங்கு நின்று கொண்டிருக்கிறாள். நான் விரும்புவது என்னவெனில்... நீர் தாமே... கர்த்தாவே, அவளுக்கு ஏதோ ஒன்று வேதனை தருகிறது. அவள் சருமம் ஒட்டுப் போடுவதற்காக (skin graft) செல்லப் போகிறாள். இவள் அவனுடைய சரீரத்திற்காகவும் அவனுடைய இரட்சிப்புக்காகவும் ஜெபிக்கிறாள். இவள் தன் அன்பார்ந்தவர்களுக்காக ஜெபிக்கிறாள். கர்த்தாவே, அவள் தனக்குள்ள நரம்புத்தளர்ச்சிக்காகவும் ஜெபிக்கிறாள் அவள் உடைந்து போகும் நிலையில் இருக்கிறாள். தேவனே, அவள் இருதயத்தின் வாஞ்சையை அவளுக்கு அருளுவீராக. அவளுடைய வியாதியை சுகப்படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில் இந்த விசுவாச ஜெபத்தை அவளுக்காக ஏறெடுக்கிறேன். ஆமேன். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. விசுவாசத்துடன் செல். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 103கர்த்தாவே, இவளுடைய அன்பார்ந்தவர்களின் இரட்சிப்புக்காக: இவளுடைய விண்ணப்பத்தை அருள இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். சகோதரியே, இதைப் பெற்றுக் கொண்டாய் என்றும் இது உன்னுடையது என்றும் இப்பொழுது விசுவாசி. நீ விசுவாசித்தால், அது நிறைவேறியே ஆகவேண்டும். எங்கள் சகோதரன் டெட் டட்லிக்காக; கர்த்தர் உம் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. அருமையானது. அவர் அரிசோனாவிலுள்ள பீனிக்ஸிலிருந்து தொலைதூரம் இங்கு வந்துள்ளார். அங்கு வெப்பம் அதிகமாயுள்ளதா? இந்த ஸ்திரீ என் கூட்டத்தில் சுகமடைந்தாள். இவள் எங்கிருந்து வருகிறாள்? நீ பீனிக்ஸை சேர்ந்தவளா, பெண்மணி? நீ அந்த இடத்தை சேர்ந்தவள் இல்லையா?... நீ பீனிக்ஸில் நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தாய். அவர் உமக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர், ஐயா? (அந்த சகோதரன் “ஆஸ்துமா வியாதியை என்னை விட்டு எடுத்துப்போட வேண்டும்'' என்கிறார் - ஆசி). ஆஸ்துமாவை உம்மை விட்டு எடுத்துப் போட வேண்டும். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அன்புள்ள தேவனே, இந்த விலையேறப்பெற்ற சகோதரன் ஜனங்களின் பாரங்களுக்காக நமது நோக்கி முறையிடுகிறவர். அவருக்கு விடுதலையை அருளுவீராக. அவர் இந்த ஜெபவரிசையில் நின்று ஜெபித்துக் கொள்வதற்காகவும் செய்தியைக் கேட்பதற்காகவும், உற்சாகம் பெறுவதற்காகவும் அரிசோனாவிலுள்ள பீனிக்ஸிலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறார். கர்த்தாவே, இது மகத்தான தியாகமாகத் தோன்றுகிறது. இது மகத்தான தியாகமே. ஆனால் சாலொமோனின் ஞானத்தை கேட்க தென் தேசத்து ராஜஸ்திரீ மூன்று மாதம் ஒட்டகத்தின் மேல் சகாரா பாலைவனத்தின் வழியாக பிரயாணம் செய்து வந்தாள். இதோ சாலொமோனிலும் பெரியவர் இங்கிருக்கிறார். சாலோமோனிலும் பெரியவரான பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார். கர்த்தாவே, இவர் சரீரத்திலுள்ள வியாதியை நீர் சுகமாக்க வேண்டாமென்று வேண்டிக் கொள்கிறேன். அவருடைய இருதயத்தின் வாஞ்சையை அவருக்கு அருளுவீராக. அவருக்கு நியமிக்கப்பட்டுள்ள பாதையில் அவர் நடந்து செல்வாராக. தேவனுடைய நன்மை அவர் மேல் தங்கியிருப்பதாக. என் சகோதரனுக்காக இந்த ஆசீர்வாதத்தை உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். டெட், இந்த ஆசீர்வாதங்களுடன் திரும்பிச் செல்வீராக. இது உம்முடையது. இதை நான் உனக்குத் தருகிறேன். இதை பெற்றுக் கொண்டு செல்வீராக. 104சகோ. ஜார்ஜ் ஏறக்குறைய எல்லோருக்குமே ஜார்ஜ் ரைட்டை தெரியும். அண்மையில் அவர் மரணத்தருவாயில் இருந்தார். அந்த சம்பவம் எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? மருத்துவர் அனைவருமே அவரைக் கைவிட்டனர். அவருடைய இருதயத்தில் இரத்தம் உறைதல் (blood clot) ஏற்பட்டு, அவருடைய உடல் இப்படி வீங்கி விட்டது. அவருக்காக ஜெபிக்க நான் சென்றிருந்தேன். சகோ. ஃபங்க் இங்கு சற்று முன்பு இருந்தார். அவர் அன்றிரவு அந்த நேரத்தில் அங்கே என்னுடன் இருந்தார் என்று நான் நினைக்கிறேன். நான் அங்கிருந்த மலையின் மேல் அமர்ந்தேன். வேட்டைக்குச் செல்பவனைப் போல. இதை நான் சபைக்குக் கூற விரும்புகிறேன். இவ்வளவு காலமாக நடந்து கொண்டிருப்பதைக் குறித்து நான் கூறத்தான் வேண்டும். அநேக சமயங்களில், நான் வேட்டையாடிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நான் வேட்டைக்குச் செல்வதில்லை. ஜனங்கள் என்னை பின்தொடர்ந்து வருவதை தடுக்க அது ஒரு சாக்கு போக்கு. தேவனுடன் தனிமையில் இருக்க நான் செல்ல வேண்டும். நண்பர்களே. வேட்டைக்காக மட்டும் நான் அங்கு செல்வதில்லை. நான் வேட்டையாடுவது உண்மைதான்- ஆனால் வழக்கமாக வேட்டைக்குச் செல்பவர் போன்றதல்ல இது. நான் மலையின் மேல் அமர்ந்திருந்தேன். அவருக்கு நான் முயல் வேட்டைக்குச் சென்றிருப்பதாக எண்ணம். நான் வீட்டின் பின்புறம் சென்று, என் கைகளை வீட்டிற்கு நேராக உயர்த்தி, மரித்துக் கொண்டிருந்த அவருக்காக வெகு நேரம் ஊக்கமாக ஜெபித்தேன். ஒரு இரவு பரிசுத்த ஆவியானவர் என்னிடம், ''தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொள்ளாத சபையிலிருந்து ஒருவர் வரப்போகிறார் என்று கூறினார். அவர் கூறியவாறே ஒரு போதகர் அண்மையில் அவருடைய வீட்டிற்கு வந்து அந்த விஷயத்தில் என்னுடன் வாக்குவாதம் செய்து என்னை எதிர்த்தார். பாருங்கள், அவருக்கு என்ன நேர்ந்ததென்று? அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. இப்பொழுது அவர் கிருபையைப் பற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறார் (சகோ. ரைட், 'சகோதரனே, நான் தான் அவருடைய சிறந்த நண்பன்' என்று இப்பொழுது கூறுகிறார் என்கிறார் - ஆசி) அதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! 105ஒரு மனிதன் என்னிடம் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து வாக்குவாதம் செய்து, ''நீ பிசாசினுடையவன் என்று முதலாவதாக உனக்குச் சொல்ல விரும்புகிறேன்'' என்கிறார்? நான், “இதற்காக உம்மை மன்னிக்கிறேன். நீர் பேசுவது இன்னதென்று அறியாமலிருக்கிறீர்” என்றேன். அதன் பிறகு, சுகம் பெறுதலைக் கண்ட அவர். ''உம்மிடம் கிறிஸ்துவின் ஆவி உள்ளதென்று அறிந்திருக்கிறேன்'' என்றார். நான், சில நிமிடங்களுக்கு முன்புதான் நான் அவருக்கு “பிசாசாக இருந்தேன். இப்பொழுது ஒரு கிறிஸ்துவாக இருக்கிறேன். எது உண்மை? பாருங்கள்-'' என்றேன். எனவே இப்பொழுது, பயங்கரமான காரியங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மனிதன் அங்கு சாகக் கிடந்தார். இந்த மனிதனோ அவரைக் கேலிசெய்து, ''தெய்வீக சுகமளிப்பவரை அழைத்து வாரும்“ என்றார். அப்பொழுது நான் கென்டக்கியிலுள்ள லெக்சின்டனில் இருந்தேன். அங்கு ஒரு ஸ்திரீ புற்றுநோயிலிருந்து குணமடைந்தாள். அன்று காலை ஏறக்குறைய ஐந்து மணியளவில் கர்த்தர் ஒரு தரிசனத்தில் அதை எனக்குக் காண்பித்தார், ''நீ சகோ. ஜார்ஜ் ரைட்டுடன் கைகுலுக்குவாய். அவர் கூடாரத்திற்கு வந்து, முன்னால் நடந்து வந்து உன்னுடன் கைகுலுக்குவார். அவரைக் கேலி செய்த அந்த மனிதனுக்கு அவர் கல்லறை தோண்டுவார்“ என்றார். சகோ. ஜார்ஜ் கல்லறை தோண்டுபவர் என்று நான் அறியாதிருந்தேன். 106நான் சகோதரி ரைட்டை தொலைபேசியில் கூப்பிட்டேன். அவள் இங்கு எங்கோ இருக்க வேண்டும். ஆம், நான் சகோதரி ரைட்டை தொலைபேசியில் கூப்பிட்டு, “நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைப் பெற்றுள்ளேன்” என்று கூறினேன். அது உண்மை. இப்பொழுது முதல் நான் அவ்விதமான தரிசனங்களையே காண விரும்புகிறேன். நான் ஒருவருக்கு ஒன்றைக் கூறும் போது, அது அப்படியே நிறைவேறுகிறது. நான், “சகோ. ஜார்ஜ், அந்த மனிதனுக்கு கல்லறை தோண்டுவார், அல்லது அவரைக் கேலி செய்த அந்த மனிதனின் சவ அடக்கத்தில் கலந்துகொள்வார். அவர் இந்த கூடாரத்திற்கு வருவார். நான் அவருடன் கை குலுக்குவேன்” என்றேன். உறைந்த இரத்தம் சகோ. ஜார்ஜை விட்டு நீங்கிற்று. இது நடந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான் திரும்பி வந்தேன். அவர் எப்பொழுதுமே கூடாரத்தில் இந்த வழியாக வருவார். ஆனால் அன்று காலையில் அவர் பின்புறமாக இந்த வழியில் வந்தார். அப்பொழுது நான், “பாருங்கள், பாருங்கள், பாருங்கள், அந்த தரிசனம் உரைத்தபடியே இதோ அவர் கைகுலுக்க வருகிறார்” என்றேன். அவர் இன்று இங்கு வந்துள்ளார். அது சம்பவித்து... (ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சகோ. ரைட் கூறுகிறார்? -ஆசி) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு. (''எனக்கு ஒன்பது இடங்களில் இரத்த உறைதல் இருந்தது. அவை அகன்று விட்டன''). ஒன்பது இடங்களில் இரத்தஉறைதல் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு. 107நான் கேள்விப்படுகிறேன் சகோதரி ஹிக்கர்சன்... சகோ. ஹிக்கர்சன் இன்று இங்குள்ளாரா? அவள் உடல் நிலை தேறியுள்ளதாக. அது நல்லது. அவளுக்கும் காலில் இரத்த உறைதல் நிறைய இடத்தில் இருந்தன. இப்பொழுது அவருக்கு கையில் கீல் வாதம். இதோ இங்கு அமர்ந்துள்ள சகோதரி ஹாட்டி அவருடைய மகள். புது ஊழியம் முதன்முறையாக அங்குதான் கிரியை செய்தது என்று இப்பொழுது சாட்சியாகக் கூறினேன். அது உண்மை. சகோதரி ஹாட்டி, இன்று காலையில் உன் மகன்கள் உன்னுடன் வந்துள்ளனரா? (“பின்னால் இருக்கின்றனர்'' என்று சகோதரி ஹாட்டி பதிலளிக்கிறாள் - ஆசி). அந்தப் பையன்கள் எங்கே? அதோ பின்புறத்தில் அவர்கள் இருவரும் நிற்கின்றனர். அதோ அந்த இரண்டு பையன்கள். இது அவர்களுடைய தாய், நமது சகோதரனின் மகள். பையன்களே, நீங்கள் யாரென்று மற்றவர் காணும் படியாய் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி, பின்னால் நின்று கொண்டிருப்பவர்கள். அது அற்புதமானது, இல்லையா, ஆர்வில்? நிச்சயமாக. 108சரி. சகோ. ஜார்ஜ் (“சகோ. பில், நான் விசுவாசிக்கிறேன் என்று நீர் அறிந்திருக்கிறீர்” என்று சகோ. ஜார்ஜ் ரைட் கூறுகிறார்- ஆசி). நீர் விசுவாசிக்கிறீர் என்று நானறிவேன். பலமுறை நான் இரவு நேரங்களில் உமது அறையில் படுத்திருந்து, ஜன்னலின் வெளியே நோக்கி, “மாக்கிங் பறவை (Mocking bird) இடும் சத்தத்தைக் கேட்டிருக்கிறேன் (இது அமெரிக்காவிலுள்ள பறவை. மற்ற பறவைகள் எழுப்பும் சத்தங்கள் அனைத்தையும் இது பாவனை செய்து எழுப்பும் - தமிழாக்கியோன்). சகோ. ஜார்ஜ், என்றாகிலும் ஒரு நாள் நாம் கடந்து செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். அது வரையிலும் தேவன் நம்முடன் இருப்பாராக. அவர் அவ்விதமே இருப்பாரென்று நான் அறிந்துள்ளேன். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர். அண்மையில் நான் கண்ட தரிசனத்தில் முதியோரும் வாலிபராக மாறியிருந்தனர். அவ்விதமே ஒரு நாளில் உம்மை நான் பரிபூரணமானவராய்க் காண்பேன். எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரனின் இருதயத்திலுள்ள வாஞ்சையை நீர் அருளுவீராக. அவருக்குள்ள கீல் வாதத்தை குணமாக்கும். பிதாவே, அவர் முதிர் வயதை அடைந்து கொண்டிருக்கிறார். அவருக்கு உதவும்படியாய் ஜெபிக்கிறேன். சகோதரி ரைட், சிறியவள் ஈடித், மற்றும் அங்குள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் உதவி செய்யும். பிதாவே, சகோதரி ஹாட்டி, அவள் பிள்ளைகள், அவர்களுக்கு அன்பார்ந்தவர் அனைவரோடும் இருப்பீராக. பிதாவே, இந்த விண்ணப்பத்தை அருளும், இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். (“எனக்கு எழுபத்தொன்பது வயதாகப் போகின்றது என்கிறார் சகோ. ஜார்ஜ் ரைட்). எழுபத்தொன்பது. சகோ. ரைட், தேவன் உம்மை ஆசீர்வதித்து, இன்னும் அநேக ஆண்டுகளை உமக்கு அருள்வாராக. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! 109சகோ. டால்டன். என்னே, என்னே இவர் எனக்கு விலையேறப்பெற்ற ஒரு அருமையான சகோதரர். என்ன நடந்ததென்று உங்களுக்குக் கூறுகிறேன், முழுவதையும் கூற எனக்கு நேரமில்லை. அவருடைய மனைவிக்குத் தெரியும். அவள், ''அவர் மரித்துக் கொண்டிருக்கிறார்“ என்றாள். அது மாரடைப்பு, இல்லையா, சகோதரியே? இதற்கு முன்பே கர்த்தர் அவளுக்கு சொப்பனத்தை அருளி, அதற்கு அர்த்தமும் உரைக்கப்பட்டது. மாரடைப்பு அவரைத் தாக்கியபோது, அவள் அதற்கு நேராக நின்று, ”இதை எதிர்க்கிறேன்“ என்றாள். அது அவ்விதம் நடக்கும் என்று தேவன் அவளுக்கு முன்கூட்டியே ஒரு சொப்பனத்தை அருளி, அதற்கான அர்த்தமும் உரைக்கப்பட்டிருந்தது. மரித்துக் கொண்டிருப்பதாக மருத்துவர்களால் கருதப்பட்ட மனிதன் இன்று உயிருடன் இருக்கிறார். கர்த்தராகிய இயேசுவே, எங்கள் விலையேறப்பெற்ற சகோதரன், நெடுந்தூரம் காரை ஓட்டி இன்று காலையில் இக்கூட்டத்திற்கு வந்துள்ளார். அவருடைய இடுப்பு மிகவும் மோசமாக உள்ளது. கர்த்தாவே, ஒரு மோட்டார் வாகனத்தைப் போல், பாகங்கள் தேய்ந்து போகத் தொடங்கிவிட்டன. ஆனால் ஓ தேவனே, நீரே அவருடைய பெலனாக இருப்பீராக! நீரே எங்கள் பெலன். அவருடைய இடுப்பில் இருக்கின்ற ஊனமுற்ற பகுதியை சுற்றிலும் கச்சை கட்டுவீராக. கர்த்தாவே பலவீனப்பட்ட ஒவ்வொரு பாகத்தை சுற்றிலும் அவ்விதம் கச்சை கட்டுவீராக. எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனுக்கு ஆரோக்கியத்தை அருளுவீராக. உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரை ஆசீர்வதிக்கிறேன். ஆமென். சகோ. டால்டன், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது அப்படியே ஆகக்கடவது. 110சரி, சகோதரியே, கர்த்தர் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாய்? (அந்த சகோதரி சகோ. பிரன்ஹாமிடம் பேசுகிறாள் - ஆசி). இது சகோதரி டாஹர்டியா? இது பெட்டியா? (Betty) (“அது நானே” ). பெட்டி, உன் இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக பெட்டி டாஹர்டியை அறியாதவர் இந்த கூடாரத்தில் யார் உள்ளனர்? என் பழைய ஊழியம் முதன்முறையாக இவள் சிறு பெண்ணாக இருந்தபோது இவள் மேல் தான் கிரியை செய்தது. எத்தனை பேருக்கு அந்த துணி ஞாபகமுள்ளது ? (சபையோர் “ஆமென்” என்கின்றனர்- ஆசி) பெட்டி செயின்ட் வைடஸ் டான்ஸ் (St. Vitius' dance) என்னும் வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தாள். அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். அவள் மனிதரைப் போலவே நடந்து கொள்ளவில்லை. ஒரு மருத்தவரும் அவளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் செயின்ட் லூயிக்கு சென்றேன். சபை பணம் கொடுத்தது. நான் வேறொருவர் மேல் சட்டை, கோட்டை கடன் வாங்கினேன். நான் சென்று இந்த சிறுமிக்கு ஜெபிக்க சபை பதினோரு டாலர்களை எனக்குக் கொடுத்தது. அவள் அப்பொழுது ஒரு சிறு பெண், இங்கு அமர்த்திருக்கும் சிறு பெண் குழந்தையின் அளவு இருந்தாள். நான் தங்கி... சகோ. டாஹர்டி இங்குள்ளாரா? அவர் இங்கில்லை. நான் ஜெபித்தேன். ஜெபித்தேன், ஜெபித்தேன், ஒரு பதிலும் கிடைக்கவில்லை. முடிவில் நான் சகோ. டாஹர்டியின் காரில் அமர்ந்திருந்தபோது அவர்கள் செய்யவேண்டியதைக் குறித்ததான ஒரு தரிசனத்தைக் கண்டேன். கர்த்தர் அந்த தரிசனத்தில் செய்யக் கூறினதை அவள் அப்படியே சரியாகப் பின் பற்றினாள். அந்நேரத்தில் அது அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களுக்கு சற்று விரோதமாகவே இருந்ததென்று எண்ணுகிறேன். இருப்பினும் கர்த்தர் உரைத்த விதமாகவே அவள் அதைச் சரியாக செய்தாள், பெம்மி குணமடைந்தாள். நான் முதன்முறையாக அவளைக் கண்டபோது, எப்படி... படுக்கையின் ஒரு மூலையிலிருந்து சகோதரி டாஹர்டியையும், மறு மூலையிலிருந்து சகோ.டாஹர்டியையும் எழுப்புங்கள். அவள் துணியை எடுத்து குழந்தையின் முகத்தையும் கைகளையும் கழுவித் துடைக்கட்டும் என்றேன். நான் ஜெபம் செய்து முடித்தவுடன் அவர்கள், ''பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக“ என்னும் ஜெபத்தை சொல்வார்கள். 111இப்பொழுது பெட்டிக்கு கண்களில் சதை வளர்ந்தள்ளது (cataract). சில நாட்களுக்கு முன்பு நான் சாட்டக்வாவில் கட்டிடத்தின் பின்புறத்தில் அவளுக்காக ஜெபித்தேன். பெட்டி, தேனே, இதை இப்பொழுது விவரமாகப் பார்ப்போம். உன் கையை நான் பிடித்துக் கொள்ள விரும்புகிறேன். நீ முற்றிலும் பார்வையை இழந்து விட்டாயா, பெட்டி? (பெட்டி டாஹர்டி, “இல்லை'' என்கிறாள் - ஆசி). உன்னால் பகல் வெளிச்சத்தையும் இருட்டடைவதையும் காண முடிகிறதா? (”ஆம், அது உண்மை'' ) பெட்டி, இப்பொழுது உன் வயது என்ன? (இருபத்திரண்டு). அப்பொழுது பெட்டி ஏழு எட்டு வயதுள்ளவளாய் இருந்தாள். சகோதரி பெட்டி, உனக்கு கடினமான நேரம் உண்டாயிருந்தது, இல்லையா? உனக்குத் தெரியுமா, பெட்டி, நீ செய்யும்படியான ஒன்றை தேவன் உனக்கு வைத்திருக்கிறார் என்று எப்பொழுதுமே எனக்கு நம்பிக்கையுண்டு, ஆகையால் தான் உனக்கு இவ்விதம் நேர்ந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். சத்துரு இந்த பொல்லாத காரியத்தை உனக்குச் செய்திருக்கிறான். பெட்டி, இது உனக்குத் தெரியும். அங்கு அடைந்து, அந்த கண் சதை வளர்ச்சியை வெளியே எடுத்துப் போடக் கூடிய வல்லமை எனக்கிருந்தால், நான் நிச்சயம் செய்வேன் (பெட்டி டாஹர்டி “ஆம்” என்கிறாள் - ஆசி). ஆனால் அது என்னிடத்தில் இல்லை. ஆனால் பெட்டி, நான் முதன் முறை உனக்கு என்ன கூறினேனோ, அது உண்மை. நீயும் நானும் கிறிஸ்துவுக்குள் சகோதரனும் சகோதரிமாய் இங்கு அமர்ந்துள்ளோம். உன் அருமை தந்தை சகோ. டாஹர்டி, நான் பெற்றுள்ள ஒரு இனிய சகோதரன், இங்குள்ள உன் அருமை தாயும் கூட. நான் உங்கள் வீட்டில் தங்கியிருக்கிறேன். உங்களுடைய உணவை நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள் - மற்றெல்லாமே. நீ அவ்வளவு அன்பாக என்னுடன் நடந்து கொண்டாய். நீயும் என் சகோதரியாய் இருக்க வேண்டும். நான் பின்னால் அமர்ந்திருக்கும் டிலோராஸ் என்பவரிடம் உண்மையாய் இருப்பதைப் போலவே உன்னுடனும் உத்தமமாய் இருக்க வேண்டும். 112இப்பொழுது பெட்டி, தேவன் இதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். நான் எல்லாவற்றையும் உனக்குக் கொடுக்க விரும்புகிறேன். உன் தந்தை ஒரு ஊழியனானாதால், வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஒரு குடும்பத்தில் நீ வளர்ந்து வந்திருக்கிறாய்... அநேக முறை உனக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டுள்ளது. இப்படியாக மேலும் மேலும் ஜெபம் ஏறெடுக்கப்பட்ட காரணத்தால், ஜெபத்தின் விலை மதிப்பை இழுந்துவிட்ட ஒரு நிலையை நாம் அடைந்து விட்டோம். நான் கூறுவது உனக்கு விளங்குகிறதா? என்னே, பெட்டி, நீ ஒரு அழகுள்ள பெண்ணாய் வளர்ந்திருக்கிறாய். உன் கண்கள் இவ்விதமாக இருப்பதைக் காண்பது மிகவும் வெட்கமானது. மேடா இன்னும் கட்டிடத்தில் இருக்கிறாளா? என் மனைவி உன்னைக் காணவேண்டுமென்று விரும்பினாள். நீ எவ்வளவு அழகுள்ளவளாய் வளர்ந்திக்கிறாய் என்பதை அவள் காணவேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீ சிறிய பெண்ணாய் இருந்தபோதே மிகவும் அழகாக இருந்தாய். நீ எப்பொழுதுமே நல்ல பெண்ணாய் இருந்து வந்திருக்கிறாய். பெட்டி, வாழ்க்கையில் சில காரியங்கள் சம்பவிக்கும் போது தவறுகள் ஏற்படுவதுண்டு. ஒரு மருத்துவர் உன் உடலைப் பரிசோதனை செய்வது போல, நான் உன் ஆத்துமாவை பரிசோதிக்க விரும்புகிறேன். பெட்டி, நீ எங்காவது தேவனுக்கு தவறிழைத்திருக்கிறாயா? அப்படியானால், ''கர்த்தாவே, அது மறுபடியும் என் வாழ்க்கையில் சம்பவிக்க நீர் அனுமதிப்பீரானால் நான் அவ்விதம் செய்ய மாட்டேன்... அதை வேறு விதமாக செய்வேன் என்று கூறிடு, அதை அவரிடத்தில் அறிக்கைசெய். 113(பெட்டி டாட்டர்டி சகோ. பிரன்ஹாமுடன் பேசுகிறாள்? ஆசி) என்னே, இது ஒரு வினோதமான காரியம் இதை நாம் இவ்விதம் சிந்தித்துப் பார்ப்போம். இந்த டாஹர்டி வருவாள் என்று நான் அறிந்திருக்கவில்லை. பகுத்தறிதல் ஊழியத்தில் முதலாவது கிரியை நிகழ்ந்தது பெட்டி டாஹர்டியிடத்திலே தான். அது இங்கு, இந்த ஊழியத்தின் முதல் கூட்டத்திலேயும் அப்படியே அமைந்திருக்கிறது. நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று அவள் உடனே அறிந்து கொண்டாள். இந்த ஜெபவரிசையில் நான் மறுபடியுமாக பகுத்தறிதலைத் துவங்க விரும்பவில்லை. அவள் என்ன கூறவேண்டுமோ அதை இப்பொழுது கூறிவிட்டாள். செயின்ட் லூயிசில் அவள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டாள். ஆனால் அவளுடைய வாலிபப் பிராயத்திலே, அவள் செய்யத் தகாத சில காரியங்களை ஒரு வேளை செய்திருக்கலாம். ஆனால் அவ்விதம் செய்யாமலிருப்பது யார்? கிருபை இல்லாவிடில், நாம் அனைவருமே தொலைந்திருப்போம். ஆனால் உன் தவறை நீ மனப்பூர்வமாய் அறிக்கை செய்யும் போது, அதை உனக்கு மன்னிக்க தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார். 114கர்த்தாவே, இப்பொழுது என் விசுவாசத்தை உயர்த்தி, இந்த பெண்ணை உம்மிடத்தில் கொண்டு வருகிறேன். என் கரங்களை இவள் கண்களின் மேல் வைக்கிறேன். தேவனே, கண்களில் உள்ள இந்த சதை வளர்ச்சியை கடிந்து கொண்டு, அவை மறுபடியும் பார்வையைப் பெறும் என்று விசுவாசிக்கிறேன். குருடன் பர்திமேயுவின் கண்களை திறந்த அதே வல்லமையானது பெட்டியின் கண்களுக்கு மறுபடியும் பார்வை அருளும்படி, விசுவாசமானது என் மேல் தங்கியிருக்கையிலே, இந்த ஜெபத்தை தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்தவின் நாமத்திலே ஏறெடுக்கிறேன். இன்றோ, நாளையோ அல்லது எப்பொழுதாவது என் சகோதரியின் கரங்களை நான் குலுக்கும் போது, அந்த பிரகாசமான கண்கள் என்னை பார்க்கவும், அவள், “சகோ. பிரன்ஹாமே, என் பள்ளி கூட நாட்களில் நான் கண்டது போல் இப்பொழுது என்னால் காண முடிகிறது'' என்றும் கூறுவாளாக. இது எவ்வளவு அற்புதமானது என்று சற்று சிந்தித்துப் பார். நீ பார்வையைப் பெற்றுக்கொள்ள மிக்க மகிழ்ச்சியடைவாய் அல்லவா? சகோதரி டாட்டர்டி, அதை விசுவாசிக்கிறாயா? (சகோதரி டாட்டர்டி, 'ஆம்' என்கிறாள் - ஆசி). இதை நீங்களும் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் களிகூருகின்றனர் - ஆசி). ஆண்டவரே, தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் எங்கள் சகோதரி உமது பதிலுக்காக காத்திருக்கும் இவ்வேளையில் அவளுடைய இருதயத்தின வாஞ்சையை அருளுவீராக. முதன் முறையாகவும் இப்பொழுது இரண்டாம் முறையாகவும் பெட்டி டாஹர்டியை சுகப்படுத்திய வல்லமை எங்கள் சகோதரியையும் சுகப்படுத்தவதாக. இயேசுவின் நாமத்தில். ஆமென். 115சகோதரனே. (அந்த சகோதரன் சகோ. பிரன்ஹாமிடம் பேசுகிறார்- ஆசி). இந்த சகோதரன் இரட்சிக்கப்பட விரும்புகிறார். சகோதரனே இயேசு கிறிஸ்துவை உமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறீரா? (“ஆம்” ). அவர் உமக்காக மரித்து, மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறீரா? (“ஆம்”). அவர் உமது சொந்த இரட்சகர் என்று இப்பொழுது உரிமை கொள்கிறீரா? (''ஆம்“) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒவ்வொரு பாவ பிரச்சினையும் இந்த மனிதனின் மனச்சாட்சியிலிருந்து விலகுவதாக. நமது சகோதரன் பரிசுத்த ஆவியைப் பெறுவாராக. இப்பொழுது முதல் அவருடைய வாழ்க்கை கிறிஸ்துவனின் வாழ்க்கையாக இருப்பதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். இப்பொழுது சபையோர் பக்கம் திரும்பி, “இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறுங்கள் (அந்த மனிதன், “இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று சொல்கிறார் - ஆசி). அவருடைய பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மன்னிக்கப்பட்டதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியுள்ளவராயிருக்கிறார். அது தான் நமக்குப் பிரியம். ஆமென். இருவிதமான சுகம். அவருடைய தழும்புகளால் (ஒலிநாடாவில் காலி இடம்). 116நான் வைத்திருந்த செய்தியின் மூலமாகவும் நான் அறிந்திருந்த காரியங்களின் மூலமாகவும் இன்று காலையில் அதிகமானதை செய்து முடித்துவிட்டேன். நான் கட்டளையை பின்பற்றின காரணத்தால், கடந்து ஐந்து ஆண்டுகளில் நான் செய்து முடித்ததை விட அதிகமாக இப்பொழுது செய்து முடித்துவிட்டேன். ஏனெனில் நான் தேவனுடைய சித்தத்தின் மையத்தைக் கண்டு கொண்டேன். ஒரு ஊழியத்தினின்று வேறொரு ஊழியத்திற்கு மாறுவதென்பது எனக்கு கடினமாகத் தோன்றலாம். ஆனால் அது ஊழியத்தின் மாற்றமல்ல. இது அதே ஊழியத்தை உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டு செல்லுதல். இதுவே முதலில் அளிக்கப்பட்ட கட்டளை. மற்றவை அனைத்தும் அதன் மேல் கட்டப்படுதலாகும். இதுதான் அதற்கேற்ற நேரம். நான் ஜெபிக்கும் ஒவ்வொருவருக்காகவும் என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அவர்கள் சுகமடைவார்கள் என்று விசுவாசிக்கிறேன். நமக்கு அத்தாட்சி அனைத்தும் இருக்கும் போது, வேதாகமம் மறுபடியும் ஜீவிக்கிறது என்பதற்கு பிழையற்ற நிரூபணமாக, தேவன் ஒவ்வொரு ஆண்டும் எல்லாவற்றையும் காண்பித்திருக்கும் போது, இது எப்படி தவறும்? இது தவறவே முடியாது. 117இதை தவறச்செய்யக் கூடிய ஒரே வழி, இதை நீங்கள் விசுவாசியாமல் இருப்பதே. இயேசுவே இங்கு நின்று. இன்று காலையில் நாம் செய்த செயலையே செய்து, உனக்காக ஜெபித்து, உன் விசுவாச அளவின்படியே நீ விசுவாசித்தால், இப்பொழுது நடப்பதைக் காட்டிலும் ஒன்றும் அதிகமாக நடக்காது. ஏனெனில், நான் அவருடைய பிரதிநிதியாய் இருக்கிறேன். நான் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. உங்களைப் போலவே நானும் ஒரு மனிதன், மானிடப்பிறவி. ஆனால் தேவனுக்கு எங்காவது ஒரு வடிகால் (outlet) இருக்கவேண்டும். அதை அவர் தமது வார்த்தையினால் நிரூபித்திருக்கிறார், அதை ஊழியத்தினால் நிரூபித்திருக்கிறார், அதை கர்த்தருடைய தூதனின் மூலம் நிரூபித்திருக்கிறார். இதோ அது இங்குள்ளது. அதை விசுவாசிப்பது உங்களைப் பொறுத்தது. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், ஒரு குழந்தையைப் போல விசுவாசியுங்கள். உங்களுக்கு ஊனம் இருந்தால், அது இருப்பதாக இனிமேல் எண்ண வேண்டாம். உங்களுக்கு நோய் இருந்தால், அது இனிமேல் இல்லை. வியாதியின் எந்த அறிகுறியையும், தேவனிடத்தில் வேண்டிக் கொண்டதற்கு முரணாக உள்ள எல்லாவற்றையும் புறக்கணியுங்கள். அநேக நேரங்களில்... தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு பிள்ளையும் சோதிக்கப்படவேண்டும். இதை நாம் விசுவாசிக்கிறோமா இல்லையா என்று காண நாம் சோதிக்கப்படுகிறோம். உங்களுக்கு யுத்தங்களும் தொல்லைகளும் உண்டாகும். ஆனால் நாம் அணிவகுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 118தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை நான் நேசிக்கிறேன். தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு, அவருடைய ஊழியனாய், இன்னும் அநேக ஆண்டுகள் உங்களுக்கு ஊழியம் செய்ய அவர் அனுமதிப்பார் என்று நான் நம்கிறேன். அதுவே என் ஜெபம். எனக்காக ஜெபியுங்கள். ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையின் ஐந்து பிழையற்ற நிரூபணங்கள் என்ற தலைப்பில் இன்றிரவு செய்தி அளிக்கப்படவிருப்பதை மறந்து போக வேண்டாம். சிறிது நேரம் ஜெபத்திற்காக நாம் எழுந்து நிற்போம். ஓ, ஞானஸ்நான ஆராதனை உள்ளதா? (சகோ. நெவில் உள்ளது என்று நினைக்கிறேன் என்கிறார் - ஆசி ) ஓ, ஞானஸ்நான ஆராதனை! ஞானஸ்நானம் பெற விரும்புகிறவர்கள், இங்கிருக்கிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஞானஸ்நானத்திற்கு யாராவது இருக்கிறீர்களா? ஒன்று, இரண்டு, மூன்று. ஆம், நண்பர்களே, நான் மிகவும் வருந்துகிறேன். வீடு செல்ல வேண்டியவர்களை நான் அனுப்பி விடுகிறேன். மற்றவர் ஞானஸ்நான ஆராதனைக்கு இருக்கட்டும் - இருக்க விரும்புகிறவர்கள். இன்னும் சிறிது நேரத்தில் ஞானஸ்நான ஆராதனை துவங்கும். 119பிதாவாகிய தேவனே, போக வேண்டியவர்களை உமது ஆசீர்வாதத்துடன் அனுப்புவீராக. உமது கிருபையும் உமது ஆசீர்வாதமும் அவர்கள் மேல் தங்கியிருப்பதாக. இன்று காலையில் நிறைவேறின எல்லாவற்றிற்காகவும் நாங்கள் விலகி மேல் நோக்கிப் புறப்படுகிறோம். ஆண்டவரே, நாங்கள் ஒவ்வொரு ஏணிப் படியையும் ஏறி தேவனுடைய ராஜ்யத்தை அடைவோமாக. கர்த்தாவே, இதை அருளும். இப்பொழுது எங்களுடன் இருப்பீராக. எங்கள் பாவங்களையும், தங்கள் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற இங்கு தங்கியிருப்பவரின் பாவங்களையும் மன்னியும். இவைகள் எங்களுக்கு அருளப்படுவதாக. இன்றிரவு எங்களை மறுபடியும் ஒன்று கூட்டுவீராக. உம்முடைய வல்லமையும் ஆசீர்வாதமும் எங்கள் மேல் இன்றிரவு தங்கியிருப்பதாக. இன்றைய இரவு சிறப்பான இரவாய் அமைந்திருப்பதாக. குழப்பமுற்றுள்ள அநேகர் இன்றிரவு தெளிவாக்கப்படுவார்களாக. பிதாவே, இதை அருளும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமேன். சரி, ஞானஸ்நானத்திற்காக நாங்கள் ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் நேரத்திலே நீங்கள் விரும்பினால் உட்கார்ந்து கொள்ளலாம்.